ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வணிகமயமாக்கப்படும் தாய்மை...



கையில் குழந்தையுடன் கண்ணீர்விட்டு கதறியபடி கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ராஜேஸ்வரி. வாடகைத்தாயாக இருந்ததற்கு பணம் தராமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மோசடி செய்துவிட்டதாக புகார் மனு ஒன்றையும் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் அளித்தார். தான் ஏமாந்த கதையையும் கண்ணீரோடு விவரித்தார் ராஜேஸ்வரி.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவக்குமார் என்பவரின் மனைவிதான் இந்த ராஜேஸ்வரி. குடும்ப வறுமையால் அடுத்தவேளை உணவுக்கே வழியின்றி வாடிய இருவரும் பிழைப்புத்தேடி கோவை மாவட்டம் சூலூரில் குடியேறியுள்ளனர். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இருவரும் கூலி வேலை செய்து நாட்களை கழித்து வந்தனர். இந்த நிலையில்தான் ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன்பு அந்த தம்பதியின் கண்ணில் பட்டது ‘வாடகைத்தாய் தேவை’ என்ற விளம்பரம். வறுமையை போக்க வழிதெரியாத சூழ்நிலையில் தனியார் மருத்துவமனை சார்பில் நாளிதழில் வெளியாகி இருந்த அந்த விளம்பரம் ஆபத்பாண்டவனாய் தெரிய உடனடியாக மருத்துவமனையை தொடர்புகொண்டார் ராஜேஸ்வரி.

மருத்துவமனைக்கு அழைத்து பேசிய நிர்வாகம், வாடகைத்தாயாக இருக்க ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், மாதம் 12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டது. தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் உரியமுறையில் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், மருத்துவமுறைப்படி வாடகைத்தாயாக மாறினார் ராஜேஸ்வரி. ஆனால் 3 மாதங்களிலேயே தனது போக்கை மாற்றிக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது. குழந்தைகேட்டு பணம் கொடுத்த பெற்றோர், தொடர்ந்து பணம் செலுத்ததால் மேல்சிகிச்சை அளிக்கமுடியாது எனக்கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, சிகிச்சை அளிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால், நள்ளிரவில் ஈவு, இரக்கமின்றி மருத்துவமனையில் இருந்து அவரை வெளியேற்றியது நிர்வாகம்.

தயவு தாட்சண்யம் இன்றி மருத்துவமனை நிர்வாகத்தால் விரட்டபட்டபோதும் சொந்த செலவில் 10 மாதம் வரை சிகிச்சை பெற்று கடந்த மாதம் 11ஆம் தேதி குழந்தையை பெற்றெடுத்தார் ராஜேஸ்வரி. அடுத்தவர்களுக்காக பெற்றுக்கொண்ட குழந்தையை என்னசெய்வதென்று தெரியாத அவர், வேறுவழியின்றி காவல்துறை உதவியை நாடினார். தன்னை ஏமாற்றிய மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தரும்படி காவல்நிலையத்தில் புகார்¢ அளித்தார் ராஜேஸ்வரி. முதலில் விசாரிப்பதாக உறுதியளித்த காவல்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனையின் பெயரைக்கேட்டதும் யோசிக்கத் தொடங்கினர். ஏனென்றால், ராஜேஸ்வரி வாடகைத்தாய் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும், கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு புகார்களையும் நடுநிலையோடு விசாரிக்க வேண்டிய காவல்துறையினர், அதனை செய்யத் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

காவல்துறையினர் மூலம் மிரட்டுவதாக கூறப்படும் புகாரை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ராஜேஸ்வரிதான் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அவர், நாட்கள் செல்லச்செல்ல கூடுதல் பணம் கேட்டு நச்சரித்ததாக குற்றம் சாட்டியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணம்கொடுத்தால் மட்டுமே குழந்தையை ஒப்படைக்கமுடியும் என தனிநபர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருதரப்பு புகார்களிலும் பணம் மட்டுமே முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது தெரியவந்தது. மேலும் போதிய சான்றுகளை கொடுக்க ராஜேஸ்வரி தரப்போ, மருத்துவமனை நிர்வாகமோ முன்வராததால் இருதரப்பும் உள்நோக்கத்துடன் செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி வழக்கை முடித்துக்கொண்டது காவல்துறை. இதன்மூலம் கோவையை உலுக்கிய வாடகைத்தாய் சர்ச்சை ஓய்ந்ததாலும், வாடகைத்தாய் என்ற ஆக்கப்பூர்வமான அறிவியல் வாய்ப்பு பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

குழந்தைப்பெற வழியே இல்லாத தம்பதிகள் மற்றொருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாடகைத்தாய் முறை சிறிதும் வணிகநோக்கத்துடன் நடைபெறக்கூடாது என்கிறது சட்டம். ஆனால் கோவை நிகழ்வு முற்றிலும் வணிக நோக்கத்திற்காக நடந்துள்ளது. கோவையில் மட்டுமல்ல இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது வாடகைத்தாய் வணிகம். வாடகைத்தாய் குறித்து தனியார் மருத்துவமனைகள் எவ்வித விளம்பரமும் செய்யக்கூடாது என சட்டவிதிகள் இருந்தாலும், அதனை சிறிதும் மதிக்காத மருத்துவமனைகள், இதுகுறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றன. அதனை பார்த்து பணத்துக்காக வரும் ஏழைப் பெண்களை மூளைச்சலவை செய்து குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் மருத்துவமனை நிர்வாகம், குழந்தை கேட்டு வரும் தம்பதிகளிடம் முடிந்தவரை பணம் கறந்து விடுகின்றனர். குழந்தை பெற்றுத்தரும் பெண்ணுக்கு 10 மாதங்களும் உரிய சிகிச்சைஅளிப்பதுடன், எதிர்காலத்தில் குழந்தை தொடர்பான எவ்வித சர்ச்சையும் ஏற்படாதவகையில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என விதிகள் கூறினாலும், பல மருத்துவமனைகள் இதனை பின்பற்றுவதில்லை என்கின்றனர் மருத்துவத்துறை வல்லுனர்கள்.

குழந்தை பெறும் எந்திரமாக ஏழைப் பெண்ணையும், பணம் தரும் எந்திரமாக குழந்தை வேண்டுவோரையும் மருத்துவமனை நிர்வாகங்கள் கருதுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இருதரப்பினரையும் கடைசிவரை நேரடியாக சந்திக்க அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல லட்சம் ரூபாய் லாபம் பார்க்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.

மருத்துவமனை நிர்வாகத்திற்கு சிறிதும் சளைக்காதவகையில் ஒருசில வாடகைத்தாய்களும் பணம்பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. முதலில் குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ளும் இவர்கள் கர்ப்பமான பின்னர் கூடுதல் தொகை கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்வதாகக்கூறி களத்தில் இறங்கும் தனி நபர்கள் சிலர் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி, இதனை லாபம் தரும் தொழிலாகவே மாற்றிவிடுகின்றனர்.

இரண்டு தரப்பாலும், கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனை, முடிந்தவரை பணம் பறிக்கும் வாடகைத்தாய் தரப்பினர் என கீழ்த்தரமான தொழிலாகிவிட்ட ‘வாடகைத்தாய்’ முறையால் பாதிக்கப்படுவது அவர்களால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகள்தான். இத்தகைய சர்ச்சைகள் ஓயும்வரை குழந்தைகள் வேண்டா வெறுப்பாகவே வளர்க்கப்படுவதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்குவராமல் குழந்தைகள் அனாதைகளாக விடப்படும் ஆபத்தும் உள்ளது.

வாடகைத்தாய் முறைக்கென சில பொது விதிமுறைகள் இருந்தாலும், முறைகேடு செய்பவர்களை தண்டிக்க கடுமையான விதிமுறைகள் இல்லை. இதனால் தாய்மையின் பெயரில் நடைபெறும் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய அவலங்களை ஒழிக்க முடியும் என்கின்றனர்.

முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க வாடகைத்தாய் முறையையே தவிர்ப்பது நல்லது என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்து. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் செயற்கை கருத்தரித்தல், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற வழிகளில் குழந்தை பெற வாய்ப்பிருப்பதாக கூறும் மருத்துவர்கள், கடைசி முயற்சியாக மட்டுமே வாடகைத்தாய் முறையை நாடவேண்டும் என்கின்றனர். அதற்கேற்ப குழந்தையில்லா தம்பதிகளின் மனநிலையைப் பக்குவப்படுத்த வேண்டியதும் மருத்துவமனையின் கடமை என வலியுறுத்தப்படுகிறது.

மக்களின் மனநிலை மாறினாலும், மருத்துவ உலகின் மகத்தான சாதனைகளில் ஒன்றான வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலோனோர் கடைசி கட்டத்தில் மட்டும் இந்தமுறை நாடுகிறார்கள் என்பதும் அவர்களது கருத்து. வேறு வழியே இல்லாதநிலையில் வாடகைத்தாய் முறையை நாடும்போது, அதுவும் மோசடியானால் அவர்களின் ஏமாற்றத்தை ஈடுசெய்வது கடினம். எனவே, கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனிநபர்களின் பேராசையால் தாய்மையின் புனிதத்தன்மை கெட்டுவிடாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

ஆளும் கட்சியின் கைப்பாவையா தேர்தல் ஆணையம்?

தமிழக மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட (ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்) உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர், இன்றே (22.09.2011) வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த, தேர்தல் தேதி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. அதேநேரத்தில் புதிய குழப்பங்களும், கேள்விகளும் ஏராளமாய் எழுந்துள்ளன.


1. வழக்கமாக வேட்பாளர் தேர்வுக்காக குறைந்தது ஒருவார கால அவகாசம் அளித்து, வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படும் நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்ட 14 மணிநேரத்தில் மனுத்தாக்கல் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?
2. அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் ஒருவாரத்திற்குள் வேட்பாளர்கள் நேர்காணல், தேர்வு உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு அனைவரும் மனுத்தாக்கல் செய்யமுடியுமா?
3. பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கான மாநகராட்சிகள் எவை? பொதுப்பிரிவினருக்கான மாநகராட்சிகள் எவை? என்பதும் இன்றுவரை தௌ¤வாக அறிவிக்கப்படாததால் வேட்பாளர்களை அறிவிப்பது எப்படி?
4. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவடையாத நிலையில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதால் குளறுபடிகளுக்கு வழிவகுக்காதா?
5. முதல்கட்டத் தேர்தலுக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கும் (அக்.17, 19) ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் கள்ளஓட்டு பதிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால் ஒருவர் இருமுறை வாக்களிக்கும் ஆபத்து.
7. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதா?

இப்படி நீண்டுகொண்டே செல்லும் குழப்பங்களின் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும் அ.தி.மு.க மட்டும் எப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதைப்போல் ஆளும்கட்சிக்கு மட்டும் உள்ளாட்சி தொகுதிகள் குறித்த முழுப்பட்டியல் கொடுக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. சசிகலாவுக்கு நெருக்கமானவர் என்று குற்றம்சாட்டப்பட்ட சோ. அய்யரை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்தபோதே, அவர் அ.தி.மு.க.வின் விசுவாசியாக செயல்படுவார் என்று புகார்கள் கூறப்பட்டன. அது உண்மையாவதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. அப்படியானால் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு என்பதெல்லாம் பொய்யா??????????

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஜால்ரா சத்தம் ஓய்ந்தது...

“மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா” இந்த வசனம் கடந்த ஒருமாதகாலம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எத்தனை முறை ஒலித்தது என்று போட்டிவைத்தால் கணக்கில் புலி என சொல்பவர்கள் கூட நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஏனென்றால் அந்தளவுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதான எதிர்க்கட்சி(!) உறுப்பினர்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி சட்டப்பேரவை சபாநாயகர் கூட வார்த்தைக்கு வார்த்தை இந்த வாசகத்தை உச்சரிக்க தவறவில்லை. சட்டப்பேரவை என்பது ஆட்சியாளர்களை புகழும் அவையாக இருந்து வருவது மரபு(!) என்றாலும் கடந்த ஒருமாதத்தில் இந்த ஜால்ரா சத்தம் சற்று அதிகமாகவே ஒலித்தது. இந்த வாசகத்தை கூறி அழைப்பதில் மட்டுமல்ல முதலமைச்சரை புகழ்வதிலும் கடும் போட்டி நிலவியது.

அமைச்சர்கள் 4 வரி பேசினால் அதில் நிச்சயம் இரண்டுவரி அம்மாவுக்கான புகழ்மாலையாக இருந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இடதுசாரிகள் அடித்த ஜால்ரா அடுத்த கூட்டத்தொடர்வரை நிச்சயம் தாங்கும். அதற்கு ஒரே ஒரு உதாரணம் சிவகங்கை தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனின் பேச்சு. தமிழகத்தில் சில திட்டங்கள் நிறைவேற்றாப்படவில்லை என்ற புகாருக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, வழக்கம்போல் பழியைத்தூக்கி மத்திய அரசு மீது போட்டார். மத்திய அரசு போதிய நிதியை வழங்க மறுப்பதால்தான் அத்திட்டங்களை செயல்படுத்தமுடியவில்லை என்று கூறினார். அவரின் மனநிலையை உணர்ந்துகொண்ட குணசேகரன் பேசும்போது, இந்த பிரச்சனைகளை தீர்க்க விரைவில் மத்தியில் அம்மா தலைமையில் மாற்றத்தை (ஆட்சி) கொண்டுவருவோம் என்றபோது முதலமைச்சரே ஒருநிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார். இவரை மிஞ்சமுயன்றவர்களில் முக்கியமானவர் சபாநாயகர் ஜெயக்குமார், இவர் தான் வகிக்கும் பதவியை சுத்தமாக மறந்துவிட்டு பேசினார் என்றே சொல்லலாம். பொதுவாக சட்டப்பேரவையில் சபாநாயகர்தான் முதன்மையானவர். அதற்குபிறகுதான் முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம். ஆனால் இவர் சபாநாயகர் இருக்கையிலும் அதிமுகவின் அடிமட்டத்தொண்டனாகவே செயல்பட்டார். தான் செய்த தவறுகளை அனைவர் மத்தியிலும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் குறை கூறினாலும், அது ஏதோ தனக்கு வழங்கப்பட்ட விருதுபோல் நினைத்து இவர் பேசிக்கொண்டிருந்தார்.

இவர்கள் உதாரணம் மட்டுமே இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பலர் முயன்றதை நாள்தோறும் ஊடகங்களில் காணமுடிந்தது. (வெளியே தெரிந்ததே என்றால், உண்மையில் நடந்தது எவ்வளவு இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஒருநாளின் ஒட்டுமொத்த நிகழ்வுகளில் ஒருமணிநேரம் மட்டுமே ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது)

ஒருபுறம் ஜால்ரா சத்தங்கள் காதை பிளக்க மறுபுறம் மேசையை தட்டும் சத்தமும் தினசரி அவையை அதிரவைத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவையில் நடைபெற்ற விவாதங்கள் அல்ல விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கைகள்தான். (ஆளுநர் உரை உள்பட சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்ற மொத்த நாட்கள் 33. முதலமைச்சர் படித்த அறிக்கைகள் 21.)ஆட்சியில் இல்லாதபோது கொடநாட்டில் தங்கி அறிக்கை வெளியிட்டதை மறக்கமுடியாமலோ, என்னவோ சட்டப்பேரவையிலும் நாள்தோறும் ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்ற வேண்டியத் திட்டங்களைக்கூட எவ்வித எதிர்பேச்சும் இன்றி அறிக்கையில் அறிவித்தார். புதிய அறிவிப்புகள் வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும் தவறாமல் இடம்பெற்ற அம்சம் தி.மு.க.வை திட்டுவது. அவர் படித்த அத்தனை அறிக்கைகளிலும் குறைந்தது இரண்டு பக்கங்களாவது தி.மு.க.வுக்கும், அதன் தலைவருக்கும் அர்ச்சனைகள் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் அலாதியானது. அம்மாவே திட்டிவிட்டார் நாம் திட்டாவிட்டால் அம்மா கோபித்துக்கொள்வார் என்று கருதியோ என்னவோ, சாதாரணமாக கேள்வி கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தி.மு.க. ஆட்சியை வறுத்தெடுத்த பின்னரே கேள்விக்கு வந்தனர்.

சரி, ஜால்ரா அடித்துவிட்டாவது அவரவர் கடமையை சரியாக செய்தார்களா என்றாலும் இல்லை என்பதே உண்மை. ஆம், எந்த துறையானாலும் முக்கிய அறிவிப்பு என்றால் அதனை முதலமைச்சர்தான் வெளியிடுவார், எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியது, அல்லது சம்பிரதாயத்துக்காக வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே அந்தந்த துறை அமைச்சர்கள் வெளியிட்டார்கள். One Woman Government என்று சொல்லக்கூடிய அனைத்துமே அம்மாதான் என்பது இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதேநேரத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில்கூட ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றதாக தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பல நாட்கள் அவைக்கு வராமல் ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக பேசவேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டணியை தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார். இதனால் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அம்சங்களில் கூட பாராட்டுமழை பொழிந்தது மனசாட்சியுள்ளவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்யாத பணியை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது கட்சியை சேர்ந்த ஒருவர், சிறையில் தி.மு.க.வினருக்கு அளிக்கப்படும் சிறப்பு கவனிப்புகளை சுட்டிக்காட்டி அரசை குறைசொன்னார். ஆனால் அவர் வாங்கிக்கட்டிக்கொண்டதுதான் மிச்சம். முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்துள்ள தே.மு.தி.க.வினர் எங்களுக்கு(அ.தி.மு.க) பாடம் நடத்தத் தேவையில்லை என்ற ஜெயலலிதாவின் அனல்கக்கும் பேச்சால் ஆடிப்போனது தே.மு.தி.க. அதன்பின்னர் அக்கட்சியினர் அனைவரும் கப்சிப். இதேபோல் மற்றவர்களை பின்பற்றி கடந்த ஆட்சியை குறைசொல்லி காரியம் சாதிக்க முயன்ற பா.ம.க.உறுப்பினர் கலையரசு அவமானப்படுத்தப்பட்டார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், நடுநிலையாக செயல்படவேண்டிய சபாநாயகர் ஜெயக்குமார் என நான்குபேரும் அவரையும், அவரது கட்சியையும் மட்டம்தட்டி பேசினர்.

அரசின் குறைகளை சுட்டிக்காட்டி அரசியல் செய்ய வேண்டிய தி.மு.க.வினரோ இருக்கை பிரச்சனையை காரணம் காட்டி ஒட்டுமொத்த கூட்டத்தொடரையும் பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடித்தனர். துணிச்சலுடன் செயல்பட்டு சட்டப்பேரவையை ரணகளமாக்கவேண்டிய அவர்கள், அதனை திருக்குறள் கேட்கும் இடமாக மாற்றி வெளிநடப்பு நாடகம் நடத்தினர்.


மொத்தத்தில் திறமையற்ற எதிர்க்கட்சி, தவறை சுட்டிக்காட்டாத கூட்டணி கட்சிகள், கேள்வி கேட்கத் தயங்கிய உறுப்பினர்கள் என சட்டப்பேரவை ஜனநாயகம் ஒருமாதத்திற்கும் மேலாக சங்கடப்படுத்தப்பட்டது. முதலமைச்சரை புகழ்வதற்கும், தி.மு.க.வை குறை சொல்வதற்கும் மட்டுமே பயன்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததால் ஜால்ரா சத்தம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தீராத வலி...மாறாத சோகம்...



சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாது சுடும் மணலில் படுத்து சிரிப்பு... பெண்ணின் உடையணிந்தபடி சுற்றித்திரியும் இளைஞர்... சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டு உலா வருவோர்... நட்ட நடு சாலையில் குட்டிக்கரணம் போடும் மகனை பரிதாபத்துடன் வேடிக்கை பார்க்கும் தாய்.. என வினோதமான உலகமாக காட்சியளிக்கிறது ஏர்வாடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் ஏர்வாடியில் பெரிய மனநல மருத்துவமனையோ, அரசு மனநல காப்பகமோ இல்லை. ஆனாலும் மனநோயாளிகள் வருகை அதிகரிப்பதற்கு காரணம் இங்குள்ள தர்காதான்.

இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாக(?) மாறிவிட்டது ஏர்வாடி. குடும்பத்தினர் இங்கு விட்டுச்சென்றதால் கிழிந்த உடையுடன் பரிதாபமாக உலாவரும் மனநோயாளிகள், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொண்டு ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க விருதுநகரைச் சேர்ந்த பச்சம்மாளின் நிலையோ பரிதாபம். மனநலம் பாதிக்கப்பட்ட தனது 20 வயது மகனை மருத்துவமனை, மருத்துவமனையாக அழைத்துச்சென்ற இவர் இறுதியில் வந்து சேர்ந்த இடம் ஏர்வாடி. மருத்துவமனைகளில் பணம் மட்டுமே செலவானதாக கூறும் பச்சம்மாள், இதற்குமேல் செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் இங்கு வந்ததாக கூறுகிறார். பச்சம்மாளைப்போல் எத்தனையோ பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆண்டுக்கணக்கில் ஏர்வாடியில் தங்கியிருக்கின்றனர். தர்காவில் இடம் கிடைக்காத பலர் தெருவோர மரத்தடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கட்டிவைத்தும் பாதுகாக்கின்றனர்.



இவ்வளவுபேர் வரும் அளவுக்கு தர்காவில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்தால் மிஞ்சுவது வியப்பு மட்டுமே. அதற்கு காரணம் ஏர்வாடியில் நடைபெறுவது சிகிச்சை அல்ல. வழிபாடு மட்டுமே... இதற்காகவே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தாலும் அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. கடந்த 2001ஆம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்தனர்.



இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டிவைக்கத் தடை விதித்ததுடன், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய ஆணையிட்டது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மனநல காப்பகத்தை அமைக்கவும் ஆணையிட்டது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தபின்னும் உச்சநீதிமன்ற ஆணை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஏர்வாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது மருத்துவக் குழுவினர் வந்து சென்றனர். ஆனால் நாளடைவில் அதுவும் குறைந்துவிட்டது. மாதம் 4 ஆயிரம் நோயாளிகள் வரும் நிலையில் 2 மனநல மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இவ்வளவு குறைபாடுகள் உள்ளபோதும், சிகிச்சைகள் கூட அளிக்கப்படாத ஏர்வாடி போன்ற இடங்களை மக்கள் நாடுவது ஏன் என்று விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் பரிதாபத்தின் உச்சம். ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அவர்களை குணப்படுத்துவற்கு மருந்து கொடுப்பதைவிட, அவர்களை அரை மயக்கம் அல்லது, தூக்கத்தில் வைத்திருப்பதற்கே அதிக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் அமைதியான நிலைக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறினாலும், நோயின் தாக்கம் தூங்கி விடுவதில்லை. விளைவு மனநோயின் உச்சத்திற்கே சென்றுவிடுகின்றனர் பாதிக்கப்பட்டோர். அதன்பின்னர் சிகிச்சை அளிப்பதும் கடினமாகிவிடுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் நோய் குணமாகாத நிலையில், வேறு போக்கிடம் இல்லாததால் ஏர்வாடியில் கொண்டு விடப்படும் மனநோயாளிகள் கடவுளின் கருணையை எதிர்பார்த்தபடியே காலத்தை ஓட்டுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஒரு சிலர் சுயநினைவை பெற்றாலும் வீட்டுக்குச் செல்லும்படி கடவுள் கனவில் சொல்லுவார் என காத்துக்கிடக்கும் பரிதாப நிலையும் காணப்படுகிறது.

ஒரு சிலர் நோய் குணமடைந்து சென்றாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் தயங்குவதால் அவர்கள், அதே அழுக்கு உடையுடன் ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர். ஆண்டுக்கணக்கில் இங்கே இவர்கள் சுற்றிக்கொண்டிருக்க அரசு மருத்துவமனைகளோ மனநலம் பாதிக்கப் பட்டவர்களை குறிப்பிட்ட காலத்தில் வெளியேற்றி விடுகின்றன. இடம் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்திய அளவில் 40 ஆயிரம் பேருக்கு ஒரு மன நல மருத்துவமனை மட்டுமே இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள் 800 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் 400 மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்களில் 300 மருத்துவர்கள் சென்னையில் மட்டுமே பணிபுரிவதால் மற்ற மாவட்டங்களில் உள்ள மனநோயாளிகளின் நிலையோ சோகம்தான்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. தனியார் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதற்கே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி இருப்பதால், மனநலம் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சிகிச்சை என்பதே எட்டாக்கனி ஆகிவிடுகிறது.


தனியார் நடத்தும் மனநல காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சையோ, பராமரிப்போ அளிக்கப்படுவதில்லை. பணத்துக்காக ஆடு மாடுகளை போல் நோயாளிகளை நடத்தும் சில காப்பக நிர்வாகிகள் போதிய உணவுகூட தரமறுப்பதால், நோயாளிகளின் பாதிப்பு அதிகமாகி, அவர்களின் ஆவேச செயல்களும் அதிகமாகிவிடுகின்றன. இதுபோன்ற நிலையை மாற்ற அனைத்து மாவட்டக்களிலும் அரசு மனநல காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 கோடி பேர் ஏதாவது ஒரு வகையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தேவைக்கேற்ப மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நிறைவேறாத ஆசை, மனஅழுத்தம், மன உளைச்சல் போன்றவை அதிகரித்து வருவதால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் மனநோய்க்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரவின்றி விட்டுச்செல்லும் மக்களின் மனநிலை மாறுவது மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சபல பெண்களும், ரவுடிக்கும்பலும்...

ஆன்மீக மணம் கமழும் பக்தி பரவசமான திருவண்ணாமலை நகரம் இப்போது போக்கிலிகளின் அட்டகாசங்களால் பீதியில் உறைந்து போய் கிடக்கிறது. இளம் பெண்களையும், குழந்தைகளையும் கடத்திச் செல்லும் கூலிப்படை கும்பலால் பெற்றோர்களும், உற்றார்களும் மிரண்டு போய் நிற்கிறார்கள்.

‘தனது இளம் வயது பேத்தியை திரும்ப ஒப்படைக்க இரண்டரை கிரவுண்ட் இடத்தை எழுதித் தரவேண்டும்’ என்ற போக்கிலி கும்பலின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்து போயுள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சரோஜா.

அங்குள்ள மண்ணடித் தெருவில் வசித்துவரும் சரோஜாவின் மகள் கவுரி. திருமணமாகி 3 பெண்பிள்ளைகளுக்கு தாயான கவுரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்கிலி ஒருவருடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை மயக்கி அழைத்துச் சென்ற போக்கிலி ராஜேஷ் என்பவர், கவுரி குடும்பத்திற்கு சொந்தமான 25 பவுன் தங்க நகைகள், மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்தோடு நின்றுவிடாத அவர்கள் கவுரியின் 3 மகள்களையும் தங்களுடன் அழைத்துச்சென்றுவிட்டனர்.

அழைத்துச்செல்லப்பட்ட 3 பெண்பிள்ளைகள் போக்கிலி கும்பலிடம் சிக்கி சீரழிவதை தடுப்பதற்காக அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் படி கவுரி குடும்பத்தினர் கேட்டுள்ளனர். குறைந்த பட்சம் நந்தினி என்ற 15வயது பெண்ணை மட்டுமாவது விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த போக்கிலி கும்பல், நகரின் முக்கிய பகுதியில் உள்ள கவுரி குடும்பத்திற்கு சொந்தமான இரண்டரை கிரவுண்ட் நிலத்தை எழுதிக்கொடுத்தால் மட்டுமே பெண்ணை ஒப்படைக்க முடியும் என மிரட்டியுள்ளனர்.

போக்கிலிகளின் மிரட்டலால் பயந்துபோன கவுரியின் கணவர் ஊரைவிட்டே ஓடிவிட, உறவினர்கள் மட்டும் தைரியமாக பெண்ணை மீட்க போராடினர். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததெலலாம் அடி - உதை மட்டுமே. கொலை செய்துவிடுவதாகவும் போக்கிலிகள் மிரட்டியதால் உயிர்பயத்தில் காவல்துறையின் உதவியை நாடினார் கவுரியின் தாயார் சரோஜா. தனது பேத்தியை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு திருவண்ணாமலை நகர காவல்நிலையம் சென்றவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் பேசிய விதம் பேரிடியாய் இறங்கியது. புகாருக்குள்ளானவர்களை அழைத்து விசாரிக்கக்கூட முன்வராத காவல்துறை அதிகாரிகள், போக்கிலிகளுக்கு ஆதரவாக சமாதானம் செய்து வைப்பதிலேயே முனைப்பு காட்டினர்.

இளம்பெண்ணை மீட்கப்போராடும் சரோஜாவுக்கு மட்டுமல்ல. தனது 2 வயது மகனை மீட்க போராடும் அரசு ஊழியரான சங்கருக்கும் இதேநிலைதான். 4 மாதங்களுக்கு முன்பு நான்கரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகைகளுடன், மனைவி நித்யா மற்றும் 2 மகன்களை போக்கிலிக்கும்பல் அழைத்துச் சென்றுவிட, 2 வயது மகனை மட்டுமாவது மீட்டுவிட துடிக்கிறார் சங்கர். மகனை ஒப்படைக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் புல்லட் சிவா என்ற போக்கிலி, தரமறுத்தவர்களை அடியாட்கள் மூலம் அடித்து விரட்டியுள்ளார்.

வேறு வழியே இல்லாமல் காவல் நிலையத்தை நாடிய சங்கருக்கு அசிங்கமான அர்ச்சனைகள் மட்டுமே மிஞ்சியது. இவர்கள் மட்டுமல்ல சத்யா, பரிமளா என பணம் மற்றும் சொத்துக்காக போக்கிலிகளால் அழைத்துச்செல்லப்பட்ட பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவர்களில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. போக்கிலி கும்பலுடன் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ள மறைமுக ஒப்பந்தமே இதற்கு காரணம் என கண்ணீருடன் கூறுகின்றனர்.

காவல்துறையினரின் ஆசியுடன் புல்லட் சிவா தலைமையிலான போக்கிலி கும்பல் செய்யும் அட்டுழியங்களை பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிட...! ஒவ்வொன்றும் அசிங்கத்தின் உச்சகட்டம். கவர்ச்சியான உடையணிந்து, உயர்ரக இருசக்கர ஊர்திகளில் உலா வரும் இந்த கும்பல், வசதியான குடும்பப்பெண்களை மயக்குவதையே வேலையாக செய்கின்றனர். அவர்களில் பெரிய அளவில் பின்புலம் இல்லாத பெண்களை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்செல்லும் போக்கிலிகள், பெண்களின் வீட்டிலிருக்கும் நகை, பணத்தை பறித்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழத்தொடங்குகின்றனர். இதனையே தொடர் தொழிலாக செய்யும் போக்கிலிகள், அடுத்த பெண் கிடைத்ததும் முந்தைய பெண்களை அடித்து துரத்திவிடுகின்றனர்.

பெண்களை ஏமாற்றுதல், தட்டிக்கேட்பவர்களை அடித்து உதைத்தல் என போக்கிலி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்த புகார்களை பதிவு செய்யவே மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து செய்வதன் மூலம் காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, வழிப்பறி, கொள்ளை என சிவா தலைமயிலான போக்கிலி கும்பல் மீது கூறப்படும் அனைத்து புகார்களும் கிடப்பில் போடப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

காவல்துறையின் ஒத்துழைப்புடன், பல போக்கிலி கும்பல்களின் ஆதரவும் இருப்பதால் இந்த கும்பலின் அட்டூழியம் எல்லை மீறிச்செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இதனால் பல குழந்தைகள் தாயை இழந்து தவிக்கும் அவலம் அரங்கேறுகிறது. அற்ப மகிழ்ச்சிக்காக சில குடும்பப் பெண்களும் போக்கிலிகளுக்கு துணைபோவதால் அவர்களது குடும்பமே அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போக்கிலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமே இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியும் எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏலச்சீட்டு மோசடி, நிதிநிறுவன மோசடி போல இதுவும் தொடர்கதையாகிவிடும் என எச்சரிக்கின்றனர்.

போக்கிலிகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டும் இருப்பதே இந்த கும்பலின் அத்துமீறல்களுக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில் சட்டத்தை காக்கவேண்டியவர்கள் அதனை மீறும் போக்கிலிகளுக்கு துணைபோவதை தடுக்காதவரை எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. எது எதுக்கோ தனிப்படை அமைக்கும் காவல்துறையினர் போக்கிலிகளை ஒழிக்க தனிப்படை அமைக்க முன்வராதது ஏன்? அவர்களால் வரும் வருமானம் குறைந்துவிடும் என்பதற்காகவா? அல்லது அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என்பதாலா? என அடுக்கடுக்காய் எழுகின்றன கேள்விகள்.

போக்கிலிகள் தமிழகத்தை விட்டே விரட்டப்படுவார்கள் என பதவியேற்ற நாளிலேயே சூளுரைத்தார் முதலமைச்சர். ஆனால் வேலியும், ஆடும் சேர்ந்து பயிரை மேய்வதுபோல் காவல்துறையினரும், போக்கிலிகளும் சேர்ந்து அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அத்துமீறும் போக்கிலிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், அவர்களுக்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருவண்ணாமலை மக்களின் எதிர்பார்ப்பு. நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

குடியால் அழியும் குடும்பங்கள்....

‘குடிக்கப் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவேன்’ என பெற்ற தாயை மிரட்டிய மகனின் வார்த்தைகள் அவனுக்கே எமனாக முடிந்த அவலம் வேலூர் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வேலூர் நைனியப்ப நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். முழுநேர குடிகாரனாக இருந்த வெங்கடேசன் போதைக்கு இடையே அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மருத்துவமனைக்குள்ளேயே போதையில் ஆட்டம்போட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட அவர், குடிக்க பணம் கேட்டு குடும்பத்தினரை கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.

70 வயதான தாய் பூஷணத்திடம் அடிக்கடி போதையில் சண்டையிட்ட வெங்கடேசன், பணம் தராவிட்டால்¢ கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டுபோன பூஷணம் பெற்றமகனையே தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கூலிப்படையை சேர்ந்த 3பேர் அவருக்கு உதவ குடிபோதையில் அட்டகாசம் செய்த மகனை குடிபோதையிலேயே கொலை செய்யத் திட்டம் உருவானது. அதன்படி கூலிப்படையை சேர்ந்த சங்கர், பிரகாஷ், சரத்குமார் ஆகியோர் வெங்கடேசனை பாலாற்று கரைக்கு அழைத்துச் சென்று மதுவை ஊற்றிக்கொடுத்தனர். போதை தலைக்கேறியதும் நினைவிழந்த வெங்கடேசனை அடித்தே கொன்றது கூலிப்படை.

போதையாட்டம் தாங்க முடியாமல் பெற்ற மகனை கொலை செய்துவிட்டாலும் இன்று தனது குடும்பத்தை காப்பாற்ற யாருமே இல்லை என்று கண்ணீர்விட்டு கதறுகிறார் பூஷணம். வெங்கடேசனின் கொலையால் அவரது மனைவியும், 6 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

வேலூர் வெங்கடேசனின் கொலை நிகழ்வை மிஞ்சும் வகையில் சென்னையில் அரங்கேறியுள்ளது மற்றொரு மது அடிமையின்¢ கொடூர மரணம். வடபழனி, வ.உ.சி. நகர் 1வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. ஓரளவு வசதியான வீட்டில் பிறந்த இவர் தனது காதல் மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். உடற்பயிற்சிக்கூடம், கோழிக்கடை என பல்வேறு தொழில் செய்துவந்த பிரசன்னா, குடிபோதைக்கு அடிமையானதும் வாழ்க்கை திசை மாறியது. மதுபோதையில் மாதுக்களையும் பிரசன்னா நாடியதால், குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. உறவினர்களின் ஆலோசனைகளையெல்லாம் கண்டுகொள்ளாத பிரசன்னா, குடிபோதையில் வீட்டிலேயே கண்ட பெண்களுடன் ஆட்டம் போடுவதும், மனைவியை அடித்து சித்ரவதை செய்வதும் தொடர்கதையானது.

குடும்பச் சொத்துக்களை விற்று குடித்துவிட்டு கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஆடிய பிரசன்னாவின் போதை வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் மனைவி உமா மகேஸ்வரி. நண்பர்களுடன் சேர்ந்து தீட்டிய திட்டத்தின்படி அதிகாலையில் பிரசன்னாவின் வீட்டுக்குள் நுழைந்தது கூலிப்படை. போதை மயக்கத்தில் இருந்த பிரச்சன்னாவை வீட்டு வாசலுக்கு தூக்கிவந்த கூலிப்படையினர், அங்கிருந்த மின்கம்பிகளை பிரசன்னா உடலில் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சினர். அப்போதும் உயிர் போகாததால் கழுத்தை நெறித்து முடிக்கப்பட்டது பிரசன்னாவின் கதை.

காவல்துறையிடம் தப்பிக்க கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய உமா மகேஸ்வரி, சிறிதுநேரத்தில் கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டியதாக ஒப்புக்கொண்டார். குடிபோதையில் கணவர் செய்த சித்ரவதைகள் தாங்கமுடியாமல்தான் கொலை செய்ததாக கூறிய அவர், கணவரின் சகிக்க முடியாத போதை அட்டகாசங்களையும் பட்டியலிட்டார். உமா மகேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட, அவரது 2 குழந்தைகளும் ஆதரவன்றி தவிக்கின்றனர்.

பெண்களை அடித்து துன்புறுத்துதல், குழந்தைகள் கண்முன்னே சண்டையிடுதல், குடும்பச் சொத்துக்களை அழித்தல், என போதையில் மயக்கத்தில் தவறு செய்வதோடு குடிகாரர்கள் நின்றுவிடுவதில்லை. தங்களின் போதைக்கு இடையூறாக யார் வந்தாலும் அவர்களை தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள் என்பதை, நட்டநடு சாலையில் பலரின் கண் எதிரே கோவையில் அரங்கேறிய கொலை நிரூபித்துள்ளது.

மது குடிப்பதை தடுத்தால் குழந்தையைக்கூட கொல்லும் கொடூரன்களாக மாறிவிடுகின்றனர் குடிகாரர்கள். இதனை உண்மையாக்கும் விதத்தில் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளது ஒரு சோக நிகழ்வு. சாலைமாமண்டூரை சேர்ந்த தமிழரசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத் சொத்துக்களை விற்கத் தொடங்கியதால் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இருக்கும் சொத்துக்களையாவது காப்பாற்றும் வகையில் எஞ்சிய குடும்பச்சொத்துக்கள் தமிழரசனின் மகன் வெங்கடேசனின் பெயருக்கு மாற்றப்பட்டது. தனது குடிபோதைக்கு தடை ஏற்பட்டதால் போதை வெறிகொண்ட தமிழரசன், தனது 3 சிறு வயது குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தான். இதற்காக சிறுவன் வெங்கடேசன் உள்பட தனது 3 குழந்தைகளுக்கும் இனிப்பில் நஞ்சு கலந்து தமிழரசன் கொடுக்க, கள்ளங்கபடமறியா குழந்தைகளும், தந்தை கொடுத்ததை ஆவலுடன் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் மூவரும் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் அலறியடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் வெங்கடேசன் பரிதாபமாக உயிரைவிட்டான்.

குடிபோதைக்கு இடையூறாக வந்த பிஞ்சு மகனை கொன்ற தமிழரசன் சிறைக்கு சென்றுவிட, அவனது மற்ற இரு குழந்தைகளும், மனைவியும் ஆதரவின்றி தவிக்கின்றனர். இவையெல்லாம் கடந்தவாரத்தில் நிகழ்ந்தவை மட்டுமே எனக்கூறும் உளவியல் ஆய்வாளர்கள், குடிவெறியால் தமிழகம் முழுவதும், இத்தகைய கொலைகள் நடந்துகொண்டே இருப்பதாக வேதனையுடன் கூறுகின்றனர். குடிகாரன் குழந்தையை கொன்றாலும், குடிகாரனை மற்றவர்கள் கொன்றாலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் மொத்தமும் தெருவில் நிற்கும் அவலம் மட்டுமே மிச்சம் என்பதும் உளவியல் ஆய்வாளர்களின் கருத்து.

இந்த உண்மைகளையெல்லாம் உணர்ந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற குரல் உரக்க ஒலித்தாலும் அதனை கண்டுகொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு மதுக்கடை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், அதற்கு காரணம் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் என்பதை என்றைக்கும் சொல்வதில்லை. குடிபோதை தகராறுகளால் ஒருபுறம் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளையில், குடித்துவிட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ எகிறிக்கொண்டே செல்கிறது. மதுக்கடைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டை என்பதை பலமுறை சுட்டிக்காட்டினாலும் அதனை கண்டுகொள்ள யாரும் தயாராக இல்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக கூறும் ஆட்சியாளர்கள், எத்தனை ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் கூலிப்பணத்தை அரசு மதுக்கடையிலேயே கொடுத்துவிட்டு திரும்புகிறார்கள் என்பதை என்றாவது எண்ணியதுண்டா?

குற்றத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கு துணைபோவது போன்றதே என்கிறது இந்தியத் தண்டனைச் சட்டம். அப்படியானால் ஏழை மக்களின் பணம் அரசு மதுக்கடை என்ற பெயரில் பறிக்கப்படுவதற்கு அரசு துணைபோவது குற்றம் ஆகாதா? எத்தனை பேர் செத்தால் என்ன? எத்தனை குடும்பங்கள் அழிந்தால் என்ன? எங்களுக்குத் தேவை பணம் மட்டுமே என ஆட்சியாளர்கள் செயல்பட்டால், பாதிக்கப்பட்டவர்களே பதிலடி கொடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

வியாழன், 21 ஜூலை, 2011

வரம்பு மீறும் ஊடகங்களுக்கு சவுக்கடி...

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என உலக ஊடகத்துறையின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் ராபர்ட் முர்டாக். கடந்தமாதம் வரை உலக புகழ்பெற்ற பத்திரிகைத் துறை தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த முர்டாக் இன்று பிரிட்டனின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்.



ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கராக வாழும் ராபர்ட் முர்டாக்கிற்கு பரம்பரை தொழிலே பத்திரிகைதான். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார் முர்டாக். ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிக்கையை இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்திய முர்டாக், அதிரடிச் செய்திகள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். குறிப்பாக இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தினர், பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் என பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்டு இவரது நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை வெளியிட்ட செய்திகள் லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்தது. புகழின் உச்சிக்கு சென்றாலும் சொத்து சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார் முர்டாக். அதன் விளைவாக போட்டியாக தோன்றும் ஊடகங்களை எப்படியாவது வளைத்து போட்டுவிடுவார். சண்டே டைம்ஸ், தி டெய்லி மிர்ரர், தி டெய்லி டெலிகிராப் என முர்டாக் வளைத்த பத்திரிகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.



பத்திரிகைகளை வளைத்தால் மட்டும் போதாது அவற்றின் விற்பனை அதிகரித்தால் மட்டுமே லாபம் என்பதை நன்கு உணர்ந்திருந்த முர்டாக் அதற்காக பல குறுக்கு வழிகளை அசாத்திய துணிச்சலுடன் தேர்வு செய்தார். பிரபலங்களின் தொலைபேசிகளை தொழில்நுட்ப பணியாளர்களைக்கொண்டு ஒட்டு கேட்டல், காவல்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அரசின் ரகசிய தகவல்களை திரட்டுதல், தனியார் புலனாய்வு ஆட்கள் மூலம் பிரபலங்களை பின்தொடர்ந்து கண்காணித்தல், என செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்ததன் விளைவாக ஊடக உலகில் முர்டாக்கின் மதிப்பு உயர்ந்தது. கூடவே அவரது சொத்து மதிப்பும் கணக்கிட முடியாமல் வளர்ந்தது. (இன்றைய தேதியில் மட்டும் முர்டாக்கின் சொத்து மதிப்பு ரூ. 3 லட்சம் கோடி) ஊடகத்தையே மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போல் நடத்தி லாபத்தை குவித்த முர்டாக் சொத்துகளை காப்பாற்றுவதற்காக அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொள்ள தவறவில்லை. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் முதல் இன்றைய பிரதமர் டேவின் கேமரூன் வரை ஆட்சியாளர்கள் அனைவரும் முர்டாக்கிற்கு நெருக்கம். இதன் மூலம் தன் மீது அவ்வப்போது எழுந்த புகார்களையெல்லாம் தூசி போல தட்டிவிட்டார். நெருக்கத்தை தொடர்வதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தாராளமாக நன்கொடையும் வழங்கினார் முர்டாக்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஸ்கை ஒளிபரப்பு நிறுவனத்தை முர்டாக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆக்கிரமிக்க முயன்றபோதுதான் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வெளிச்சத்துக்கு வந்தது. தோண்டத்தோண்ட பூதம்போல் வெளியான தொலைபேசி ஒட்டு கேட்பு தகவல்கள், முர்டாக்கின் ஊடக சாம்ராஜ்யத்தையே சரியச் செய்துள்ளது.



இதன் முதல்படியாக 168 ஆண்டுகளாக வெளிவந்த முர்டாக்கின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை இழுத்து மூடப்பட்டுள்ளது.அத்தோடு முடிந்துவிடவில்லை விவகாரம் ,இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொது விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பகிரங்க மன்னிப்பு கேட்ட முர்டாக், தொலைபேசி ஒட்டுகேட்புக்கு நேரடியாக பொறுப்பேற்க முடியாது என வீம்பு பிடிக்க, ஆத்திரமடைந்த பார்வையாளர் ஒருவர் முர்டாக்கை சிற்றுண்டி சாப்பிடும் தட்டை எடுத்து தாக்கினார்.



ராஜாபோல் வாழ்ந்து வந்த முர்டாக் நாடாளுமன்றத்தில் அனைவரது முன்னிலையிலும் தாக்கப்பட்ட இந்த நிகழ்வு வரம்பு மீறும் ஊடக துறையினருக்கு ஒரு சவுக்கடியாக விழுந்துள்ளது. பத்திரிகை கையில் இருக்கிறது நாம் வெளியிடுவதுதான் செய்தி, நமக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருக்கிறது, நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்கிற மிதப்பில் இருந்த முர்டாக் இந்த தாக்குதல் நிகழ்வையடுத்து இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துவிட்டார். (பிரிட்டனில் இருந்து வெளியேறிவிட்டார்) முர்டாக்கின் நிறுவனங்கள் இனியும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக மறைந்து போகும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தமிழக கோவில்களில் தங்கச்சுரங்கம்...!!!



27.06.2011...பக்தி திருத்தலமாக மட்டுமே அதுவரை அறியப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தங்கச்சுரங்கமாக மாறத் தயாராகிக்கொண்டிருந்தது. அதனை அறியாத பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்து கொண்டிருக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உள்ளே நுழைந்தது 7 பேர் கொண்ட குழு. கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்து, அதன் கீழ் இருந்த கமுக்க அறை ஒன்றை திறந்ததும் உலகின் ஒட்டுமொத்த கவனமும் கோவிலை நோக்கி திரும்பியது. காரணம் அங்கே கொட்டிக்கிடந்த தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிக்க முடியாத அணிகலன்கள்தான்.

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் உள்ளது பத்மநாப சுவாமி கோவில். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலை 1733ஆம் ஆண்டில் ராஜகோபுரங்களுடன் புதுப்பித்தார் மன்னர் மார்த்தாண்ட வர்மா. அதன்பின்னர் மன்னர் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த இக்கோவிலில் முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாக கடந்த 2008ஆம் ஆண்டில் போர்க்கொடி தூக்கினார் தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற இந்திய காவல்பணி அதிகாரி டி.பி. சுந்தர்ராஜன். கோவில் நிர்வாகத்தை கேரள அரசே ஏற்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.

சுந்தர்ராஜனின் கோரிக்கையை கேரள உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தங்கள் உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக உச்சநீதிமன்றத்தை நாடியது மன்னர் குடும்பம். இந்த வழக்கில்தான், கோவிலில் கமுக்க அறைகளை திறந்து உள்ளே இருக்கும் அணிகலன்களை மதிப்பிட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதற்காக 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற ஆணைப்படி கடந்த மாதம் 27ஆம் தேதி ஆய்வை தொடங்கிய குழுவினர் முதலில், கோவிலில் இருந்த 6 கமுக்க அறைகளுக்கும் தனித்தனி பெயரிட்டனர். அவற்றில் 2 அறைகள் மட்டும் 136 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதிகாரிகளின் ஆய்வு அங்கிருந்து தொடங்கியது.

முதல் அறையைத் திறந்ததுமே தங்க, வைர நகைகள், சிலைகள், கிரீடங்கள் என மலை மலையாகக் குவிந்து கிடந்த பொற்குவியலைக் கண்டு மலைத்து நின்றனர் அதிகாரிகள். அறைக்கு உள்ளேயே மேலும் சில அறைகள் இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அவற்றையும் திறந்தபோது அங்கேயும் குவியல் குவியலாக அணி மணிகள்¢ கொட்டிக்கிடந்தன.


18 அடி நீளமுள்ள தங்க அங்கி, சரம் சரமாக தங்கச் சங்கிலிகள், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட 4 அடி உயர விஷ்ணு சிலை, ஆயிரம் கிலோ எடையுள்ள தங்க காசுகள், மரகத கல் பதிக்கப்பட்ட அணிகலன்கள் என நீண்டு கொண்டே சென்றது பொற்குவியலின் பட்டியல். அள்ள அள்ள குறையாத அணிகலன்களின் மதிப்பு முதலில் 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஒரு லட்சம் கோடி, ஒன்றரை லட்சம் கோடி என்று சொல்லப்பட்டாலும், உண்மையான மதிப்பு 5 லட்சம் கோடியை தாண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

136 ஆண்டுகளாக திறக்கப்படாத மற்றொரு அறையின் பூட்டை திறக்க முடியாததால் அந்த அறையில் இருக்கும் நகைகளை மதிப்பிட முடியாத நிலை உள்ளது. உச்சநீதிமன்ற ஆணையைப் பெற்று அதனையும் திறந்தால் பொற்குவியலின் மதிப்பு தற்போதுள்ள மதிப்பைவிட 10 மடங்கு உயரும் என்ற தகவல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு சுரங்க அறை நகைகள் மூலமே உலகின் பணக்கார கடவுளாக மாறிவிட்ட பத்மநாப சுவாமிக்கு, புகழுடன் சேர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இதே பாதுகாப்பு அச்சுறுத்தலால்தான் பொற்குவியல் சேர்ந்ததற்கும் காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். போர்வெற்றி, நன்கொடைகள் மூலம் ஏராளமான ஆபரணங்களை சேர்த்த மன்னர்கள், வெளிநாட்டு படையெடுப்புகளில் இருந்து அவற்றை பாதுகாக்க அனைத்தையும் கோவில்களில் குவித்து வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.


வறட்சியான காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதும் மன்னர்கள் நகைகளை குவித்ததற்கு முக்கிய காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை, அந்த உயரிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்தையும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பத்மநாப சுவாமி கோவிலுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பதன் மூலம் பொற்குவியல் விவகாரம் தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்காலத்தில் குமரி பகுதியை ஆண்ட மன்னர்களும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு பொற்குவியலை வழங்கியதாக கூறப்படுவதால் அதில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருப்பதாக குமரி மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து சுசீந்திரம், வட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பொற்குவியலில் உள்ள பங்கை மீட்கக்கோரி கையெழுத்து இயக்கமே நடத்தப்பட்டுள்ளது.


பொற்குவியலில் பங்கு கேட்டு ஒருபுறம் போர்க்கொடி உயர்த்தப்படும் அதேநேரத்தில், தமிழகத்தில்¢ உள்ள முக்கிய கோவில்களிலும் பொற்குவியல் கொட்டிக்கிடப்பதாக புதிய பூதம் கிளம்பியுள்ளது. திருச்சி திருவரங்கம், மதுரை மீனாட்சி அம்மன், தஞ்சை பெரிய கோவில், போன்ற முக்கிய கோவில்களில் சுரங்க அறைகளில் நகைகள் வைக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கும் வரலாற்று ஆய்வாளர்கள், அவை இருக்கும் இடங்களைக்கூட துல்லியமாகக் கூறுகின்றனர். உதாரணமாக திருவரங்கத்தில் கருடாழ்வார் சிலைக்கு அருகே 2 அறைகளில் பொற்குவியல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலேபோய் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொற்குவியலோடு சேர்த்து பெருமாள் இருந்த கர்ப்பகிரகமே கமுக்க அறையாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பரவும் புதுப்புது தகவல்களால் முக்கிய கோவில்களில் பழைய ஆவணங்கள் புரட்டப்பட்டு வருகின்றன. பல இடங்களில் கமுக்க ஆய்வுகள் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.




கோவில்களுக்குள் புதைந்து கிடக்கும் நகைகளைக் கண்டுபிடிப்பது வரவேற்புக்குரிய ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் பழமையின் சின்னமாக விளங்கும் அவைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் மட்டுமே முன்னோர்கள் எண்ணம் நிறைவேறும்.

புதன், 13 ஜூலை, 2011

அரசு ஒப்பந்தம் பெற இளம்பெண் வினியோகம்...

தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியின் ஒரு ஓரத்தில் இருக்கிறது கண்ணுமாமூடு கிராமம். தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை அருகே இருக்கும் இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சொகுசு மாளிகையில் கடந்த 23ஆம் தேதி அதிரடியாய் நுழைந்த கேரள மாநில காவல்துறை ஊர்திகள். நீண்ட நேரம் நீடித்த விசாரணைக்கு பின்னரே சொகுசு மாளிகையின் உரிமையாளரான ஒப்பந்ததாரர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானது. சிங்கப்பூர் தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணைக்காக கண்ணுமாமூடு கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தனர். நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையில் இருந்து மணிகண்டனை ஈப்பில் ஏற்றி அழைத்துச் சென்ற காவல்துறையினர் அதற்கான காரணங்களை வெளியிட்டபோது கண்ணுமாமூடு கிராம மக்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர். ஏழை மக்களுக்கு உதவுவதாக அதுவரை நடித்து வந்த மணிகண்டன், கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 18வயது இளம்பெண்ணை தனது மாளிகையில் வைத்து சீரழித்து விட்டார் எனத் தெரிந்ததும் மக்கள் ஆவேசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.

ஆவேசத்துடன் கூடிய மக்கள் கூட்டத்தை கண்டதும் சொகுசு மாளிகையை சூழ்ந்திருந்த மணிகண்டனின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மக்கள் மீதும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் கல்வீசி தாக்கல் நடத்தப்பட்டது. இதையும் மீறி செய்தியாளர்கள் படமெடுத்தபோதும், சொகுசு மாளிகையில் இருந்து அனைத்து தடயங்களையும் அழித்திருக்கிறார்கள் மணிகண்டனின் ஆதரவாளர்கள்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பராவூரைச் சேர்ந்த துணைநடிகரான சுதீர் என்பவரது மகள்தான் அந்த இளம்பெண். 12வது படித்து வரும் அந்த பெண்ணை அவரது தந்தையே விலைமாதாக மாற்றிய நிகழ்வு கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இவ்வழக்கில் நடிகர், எர்ணாகுளத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர், தமிழகத்திற்கும் அந்த இளம்பெண் அழைத்து வரப்பட்டு சீரழிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதன் தொடர்ச்சியாகவே மணிகண்டன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வந்து விழுந்த தகவல்கள் பல்வேறு அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழித்துப்போடப்பட்டுள்ளது. காலம் காலமாக கையூட்டு வாங்கிக் கொண்டு அரசுப்பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக புகார் கூறப்படுவதால், பணம் பெறுவதற்கு பதிலாக மாற்றுத் திட்டங்களை வகுத்துள்ளனர் அதிகாரிகள். வீட்டிற்கு தேவையான பொருட்களை பெறுதல், வீட்டு மனைகளாக வாங்கிக் கொள்ளுதல், என பணிகளுக்கு தக்கபடி அதிகாரிகளின் நிபந்தனைகள் விரிகின்றன.

அளவுக்கு அதிகமான பணம், தேவைக்கு அதிகமான பொருட்கள் என வாங்கிக் குவித்துவிட்ட அதிகாரிகள் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளனர். அதுதான் பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கு இளம் பெண்ணை கேட்கும் குரூர அத்தியாயத்தின் தொடக்கம். இந்த கொடுமைக்கு கன்னியாகுமரி ஒப்பந்ததாரர் மணிகண்டனின் கைது நேரடியாக சாட்சியாக மாறியுள்ளது. கேரளாவில் பெற்றோராலேயே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட இளம் பெண்ணை தமிழகம் அழைத்து வந்த மணிகண்டன், தனது தேவையை தீர்த்துக் கொண்டதுடன், பல்வேறு அதிகாரிகளின் ஆசைகளை நிறைவேற்றவும் அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த மணிகண்டன், பணி ஒப்பந்தம் பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் எடுத்து செய்த பணி ஒன்றை எதிர்த்து போராடிய நபர் மர்மமான முறையில் இறந்து போனதையே இதற்கு சாட்சியாக சொல்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்கள்.


ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண ஒப்பந்ததாரராக இருந்த மணிகண்டன், தற்போது நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு மாளிகை, மகிழுந்து, வேறு பல ஊர்திகள் என உல்லாசமாக உலாக வந்ததை சுட்டிக்காட்டும் மக்கள், இவை அனைத்துக்கும் அதிகாரிகளின் ஆசிர்வாதமே முக்கிய காரணம் என்கின்றனர். கேரளாவிலும் தனது தொழிலை விரிவுபடுத்திய மணிகண்டன், சின்னத்திரை தொடர்கள் தயாரிப்புக்கும் பண உதவி செய்து வந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி பல கேரள சின்னத்திரை நடிகைகளையும் தமிழகத்திற்கு அழைத்து வந்தாராம் மணிகண்டன். அப்படி அழைத்து வரப்பட்ட அனைவருமே அதிகாரிகளுக்காகத்தான் என்கின்றனர்.

அதிகாரிகளுக்கு பெண்ணாசை காட்டியே தனது தொழிலை வளர்த்துக் கொண்ட மணிகண்டன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து துறை அலுவலகங்களிலும் நெருக்கமான வட்டத்தை உருவாக்கியுள்ளார். இதற்காக துறை வாரியான பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளை மட்டுமின்றி மாவட்ட அளவில் பொறுப்புகளை கவனிக்கும் அதிகாரிகளையும் தக்கமுறையில் மகிழ்வித்துவந்தாராம் மணிகண்டன். பணிகள் வழங்கும் அதிகாரிகள் மட்டுமல்லாமல் தனது தெரிந்த காவல்துறை அதிகாரிகளுடனும் கேரளத்து இளம் பெண்ணை மணிகண்டன் அனுப்பியுள்ளார். இந்த தைரியத்தில்தான் கேரள காவல்துறையினர் தன்னை கைது செய்தபோது கூட அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். தன்னால் பயனடைந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகளின் மிகப்பெரிய பட்டியலையே கேரள காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் மணிகண்டன். அதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு வீடு, நிலம், போன்றவற்றை வாங்கிக் கொடுத்ததையும் ஒப்புக் கொண்ட மணிகண்டன், நிலப்பிரச்சனை காரணமாக தன்னை மாட்டி விட்டதே கேரள காவல்துறை அதிகாரி டோமின் தங்கச்சரிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரள காவல்துறையினரிடம் மணிகண்டன் அளிக்கும் ஒவ்வொரு வாக்குமூலமும் தமிழகத்தில் சில அதிகாரிகளின் பதவிக்கே ஆபத்தாக முடியும் என்பதால் பலர் கலக்கமடைந்துள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரி ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பல காவல்துறை அதிகாரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மணிகண்டனுக்கு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் அதேநேரத்தில் மணிகண்டனுக்கு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் யார்? யார்? இதுவரை அவருக்கு ஒப்பந்தங்கள் வழங்கிய அரசு அதிகாரிகள் யார்? என ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கன்னியாகுமரியோடு முடிந்துவிடவில்லை இந்த பெண் விவகாரம், இளம்பெண்ணின் தந்தையான சுதீர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்ட மணிகண்டன், அந்த பெண்ணை சென்னை, உதகை, கொடைக்கானல் என பல ஊர்களுக்கும் பல அதிகாரிகளோடு அனுப்பியதும் அம்பலமாகியுள்து. இதனை உண்மையாக்கும் விதத்தில் கோவையைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் கைதாகியுள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பாளையம் வடமதுரையை சேர்ந்த முருகேசன், பெரும் வசதி கொண்டவரல்ல என்பதால், ஏதாவது ஒரு ஒப்பந்ததாரர் மூலமே அவருக்கு கேரள பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு உதவிய ஒப்பந்ததாரர் யார்? உதவிக்கான கைமாறாக முருகேசன் என்னவெல்லாம் செய்து கொடுத்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


கேரள காவல்துறையினரிடம் முருகேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தமிழக அதிகாரிகள் 9 பேர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளதால் மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மணிகண்டன் போன்ற ஒரு சிலர் மட்டுமின்றி தமிழகத்தில் இன்று நடைபெறும் பெரும்பாலான அரசுப் பணிகள் இதுபோன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக தகுதியற்ற ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


இப்படி அற்ப ஆசைக்காக அரசுப் பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படும் அவலம் அம்பலமாகியுள்ளதால், குறுக்கு வழியில் ஒப்பந்தம் பெற்ற மணிகண்டன் போன்ற ஒப்பந்ததாரர்கள் செய்த பணிகளின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலேயே பல பணிகள் பெயரளவில் மட்டுமே நடைபெற்றுள்ளதாக புகார் கூறியுள்ள பொதுமக்கள், இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு அதிகாரிகளை கேரள காவல்துறையினர் கைது செய்தபோதும், இங்குள்ள அதிகாரிகள் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காப்பதும் பொதுமக்களின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்குக்கூட இது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு செயல்படாவிட்டால் முறைகேட்டாளர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும் துணைபோவது போல் ஆகிவிடும் என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


மக்கள் நலனுக்காக அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அதனை செயல்படுத்துவதில் முறைகேடுகளும் மோசடிகளும் தலைவிரித்தாடுவதால் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே போய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் உணர வேண்டியவர்கள் உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

வியாழன், 23 ஜூன், 2011

கனிமொழிக்கு கலைஞர் கொடுத்த முறுக்கு...!

திகார் சிறையின் 6வது வார்டு, வீல் சேரில் அமர்ந்தபடி கருணாநிதியும், அருகிலேயே ராசாத்தியம்மாளும் காத்திருக்க, அங்கு அழைத்துவரப்பட்டார் கனிமொழி. அவரை பார்த்ததும் கண்கலங்கிய கருணாநிதி, கையோடு கொண்டுபோயிருந்த முறுக்கு பாக்கெட்டுகளை (ரொம்ப முக்கியம்! அப்படி எல்லாம் கேட்கக்கூடாது) கனிமொழியிடம் கொடுத்தார்.

வாழ்க்கையிலேயே முதல்முறையாக அப்பாவின் கையால் கொடுத்த முறுக்கை வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் கனிமொழி பெற்றுக்கொண்டார். வீட்டில் சுட்ட (சமைத்த) இட்லி,தோசையும் கொடுக்கப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்த கருணாநிதி ஒருகட்டத்தில் கண்ணாடியை கழற்றியபோதுதான் தெரிந்தது அவர் கண்ணீர் விட்டு அழுதது. இதனை பார்த்த கனிமொழி அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.



எத்தனையோ வழிகளில் முயற்சித்தும் கனிமொழிக்கு பிணை (Bail) வாங்கித் தரமுடியவில்லையே என்ற ஆதங்கமே அவரது அழுகைக்கு காரணமாக இருக்கலாம்.

புதன், 18 மே, 2011

கும்பிடுசாமிகளும் - கொத்தடிமை கலாச்சாரமும்...

"கும்பிடறோம் சாமியோவ்" என்று கூவாத குறைதான். கையில் டப்பாவும், கழுத்தில் ஊசிபாசிகளும் போடாமல்¢ பளிச்சிடும் வெள்ளை உடையணிந்திருந்த தமிழகத்தின் மாண்மிகுக்கள் அனைவரும் பழங்காலத்து ஆதிவாசிகளின் செயல்பாடுகளை நம் கண்முன்னே நிறுத்தினார்கள். அதில் ஒரு துளிதான் இந்த கும்பிடு.



கடந்த 16ஆம் தேதி தமிழகத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் விழா நாயகர்களான முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 34 அமைச்சர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குதல் போன்ற படுகேவலமான காட்சிகள் இல்லாவிட்டாலும், முதுகெலும்பு உடையாமல், எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு குனிந்து கும்பிட்டனர் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள். அத்தனையையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார் தமிழகத்தின் முதலமைச்சராக 3வது முறை பதவியேற்றுள்ள செல்வி ஜெ. ஜெயலலிதா. அவர் அமர்வதற்கான இருக்கை அமைப்பிலும் வழக்கமான நடைமுறையே! முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் 2 அடி இடைவெளிக்கு அடுத்த உட்கார வைக்கப்பட்டனர். போனால் போகிறது என்று ஆளுனருக்கு மட்டும் அருகில் இடம் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. (அதற்கும் இரண்டு காரணம் இருக்கலாம் 1. மரியாதையுடன் நடத்தாவிட்டால் பதவியேற்பு செய்துவைக்க அவர் மறுக்கலாம். 2. சிறிதுநேரம்தானே அங்கு உட்காரப்போகிறார். அதனால் இருந்துவிட்டு போகட்டும் என்று ஜெ. நினைத்திருக்கலாம்.) ஜெயலலிதா அளவுக்கு இல்லையென்றாலும் அமைச்சர்களாக பொறுப்பேற்ற அனைவருமே ஆயிரக்கணக்கான மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்தானே. அவர்கள் அருகில் உட்காருவதில் என்ன கவுரவக்குறைச்சல்? தள்ளிதானே உட்காரவைத்தார்கள் இருந்துவிட்டு போகட்டும் என்று என்றால், ஆளுநர் உரிய நேரத்திற்கு வந்து சேரவில்லை. அவர் வர சுமார் அரைமணிநேரம் தாமதமானதால் ஜெயலலிதா பதற்றத்துடன் இருந்தாரோ என்னவோ, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பெரும் பதற்றத்துடனே காணப்பட்டனர். முகத்தில் வழிந்த வியர்வையைக்கூட அம்மாவுக்கு தெரியாமல் துடைக்க அவர்கள் பிரயத்தனப்பட்டனர். மேடைக்கு வந்தது முதல் இறங்கும்வரை ஒவ்வொரு முறை ஜெயலலிதா எழுந்திருக்கும்போதும், மேடையிலிருந்த அனைவரும் எழுந்திருச்சு நிற்க வேண்டும். அவர் அமர்ந்த பின்னர்தான் மற்றவர்கள் உட்கார வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டது. (தனியா பாடம் எடுத்திருப்பார்களோ என்னவோ?) இதையெல்லாம் தாண்டி பதவியேற்க சென்ற அமைச்சர்கள் விசுவாசத்தை தங்கள் ஒவ்வொரு அசைவிலும் காட்டத் துடித்தனர். பதவியேற்க பெயர் சொல்லி அழைத்தவுடன் இருக்கையைவிட்டு எழுந்தாலும், ‘அம்மா’வின் கடைக்கண் அனுமதியின்றி ஆளுனரின் அருகில் செல்லவில்லை. பதவியேற்று திரும்பியபோதும் தரையில் விழாத குறையாக கூழைக்கும்பிடு போட்டபடியே இருக்கைக்கு சென்றனர். என்னதான் பதவி கொடுத்திருந்தாலும் இப்படிதான் நடந்து கொள்ளவேண்டும் என்று ‘அம்மா’ அதிகாரப்பூர்வமாக அறிவித்தாரா என்றால் இல்லை என்றே பின்னர் ஏன் இப்படி? நல்லபெயர் வாங்குவதா நினைத்துக்கொண்டு குனிந்து குனிந்தே வாழ்ந்து பழகிவிட்டனர் அ.தி.மு.க மாண்புமிகுக்கள். நமக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு சந்தேகம்தான், முதலமைச்சரிடம் நிமிர்ந்துநின்று பேசவே பயப்படும் மாண்புமிகுக்கள் மக்களுக்காக அவரிடம் வாய்திறந்து பேசுவார்களா?
‘கொத்தடிமை கலாச்சாரம்’
அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்களின் கூழைக்கும்பிடு ஒருபுறம் என்றால், அவர்கள்யெல்லாம் மிஞ்சி கொத்தடிமைகளாகவே செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள். அமைச்சர்கள் அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டராக இருந்து வளர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் கூழைக் கும்பிடுபோடுவதில் தவறில்லை என்று வைத்துக்கொண்டாலும்,(தவறு என்பதில் மாற்றமில்லை) இவர்களுக்கு பல படி மேலேபோய், தேர்தல் முடிவுகள் முழுதாக வெளிவரும் முன்பே ‘அம்மா’வின் வீட்டு வாசலில் தவமிருந்த அதிகாரிகளை என்ன சொல்வது?



‘‘அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு 5 வருஷந்தான், ஆனால் அரசு அதிகாரிகள் நிரந்தரமான அதிகாரம் கொண்டவர்கள்’’ என்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சரிபட்டுவருமோ என்னவோ, தமிழகத்தில் அப்படி எந்த அதிகாரியும் இருப்பதாக தோன்றவில்லை. (ஓரிருவர் இருக்கலாம், எனக்கு தெரிந்திருக்கவில்லை) ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி தெரியத் தொடங்கினாலே அதிகாரிகளின் அந்தர் பல்டி காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிடுகின்றன. நேர்மையாக செயல்படும் அதிகாரிக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலைதேவையில்லை. ஆனால் இன்றைய அதிகாரிகள் இவர்கள் வந்துவிடக்கூடாது, அவர்கள் அந்தப் பொறுப்பேற்கக்கூடாது என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கின்றனர். நல்ல தலைவர்களை உருவாக்க இவர்கள் மெனக்கெடுகிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. யார் நம் துறை பொறுப்பை கவனிக்க வந்தால், நாம் அவர்களை கவனித்து கல்லாக்கட்ட முடியும் என்பதே இந்த அதிகாரிகளின் முழு நோக்கமாக உள்ளது. இதன்விளைவாக அரசியல்வாதிகளை அடக்கி ஆளவேண்டிய அதிகாரிகள், கட்சித் தலைவனை பார்த்தும் பணிவுடன் கும்பிடும் அடிமட்டத்தொண்டனைவிட கேவலமாக கூழைக்கும்பிடு போட்டு கொத்தடிமையாக வாழத் தொடங்கிவிடுகின்றனர். தி.மு.க. ஆட்சி என்றால் அய்யா சொன்னால் சரி, அ.தி.மு.க ஆட்சியா அம்மா சொன்னால் சரி என்பதுதான் உயர்மட்ட அதிகாரிகளின் வேதவாக்கு. ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று யாராவது ஒரு அதிகாரியிடம் கேட்டுவிட்டால் போதும், ‘‘அவர் அப்படி தொல்லை பண்றார், இப்படி பண்றார், அமைச்சர் சொல்றார், அவுங்க வீட்டுல இருந்து சொல்றாங்க’’ என்று குற்றப்பத்திரிக்கை நீண்டுகொண்டே செல்லும். கடமையிலிருந்து கடுகளவும் விலகமாட்டேன் என்று அதிகாரிகள் சொல்லிவிட்டால் 5 வருடத்திற்கு ஒருமுறை மாறும் அரசியல்வாதிகளால் என்ன செய்துவிட முடியும், மிஞ்சிப்போனால் இடமாற்றம் செய்யமுடியும். போகவேண்டியதுதானே, மற்றவர்களைப்போல் பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடும் என்றெல்லாம்கூட அதிகாரிகள் கவலைக்கொள்ளத் தேவையில்லையே. ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை காரணம். காரணம் பலர் கடமையைத் தவிர மற்ற செயல்களை மட்டுமே செய்கின்றனர். அதனால்தான் நிமிர்ந்து பேச திராணியற்று அரசியல்வாதிகளிடம் நெடுஞ்சாண்கிடையாய் சரணடைந்து விடுகின்றனர். ‘‘நாங்களெல்லாம் ஒரு பைசா கல்லாக்கட்டியதில்லை’’ என்று மார்தட்டும் அதிகாரிகள் கூட, என் மனைவி வேலைபார்க்கும் ஊரிலேயே இருக்கவேண்டும், எனது சொந்த ஊரிலேயே இருந்தால் வசதியாக இருக்கும், என ஏதாவது சுயலாபத்துக்காக சோரம்போகின்றனர். இதையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்திற்கு அதிகாரிகளை பந்தாடுகின்றனர். தமிழகத்தில் தற்போது பதவியேற்ற புதிய அரசு, பொறுப்பேற்ற 24 மணிநேரத்திற்குள்ளாக 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், தலைநகர காவல் அதிகாரியையும் அதிரடியாக மாற்றியது. கொத்தடிமைகளாகவே வாழ்ந்து பழகிவிட்ட அதிகாரிகளும் இதனை எதிர்த்து ஒருவார்த்தைக்கூட பேசுவதில்லை. எதிர்த்து பேசினால் தங்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்று அச்சம். எதெற்கெல்லாமோ போராட்டம் நடத்தும் சங்கங்கள் இதனை ஒரு நடைமுறையாகே ஏற்றுக்கொண்டுவிட்டனர். இப்படி அடிவருடிகளாக இருந்து தங்கள் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கூட்டம் இருக்கும்வரை நேர்மையான அரசு நிர்வாகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒரே ஒரு கேள்விதான் நம்முன் நிற்கிறது ‘‘என்று மாறும் இந்த இழிநிலை’’?

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தமிழகம் சந்தித்த தேர்தல்கள்_03

காங்கிரஸ் கட்சியை விரட்டியடித்த தி.மு.க…

1967, பிப்ரவரி 5...
தமிழகத்தின் அரசியல் சரித்திரத்தை புரட்டிபோட்ட அரசியல் சுனாமி தமிழ்நாட்டில் வீசத்தொடங்கிய நாள் இதுதான். இந்தி எதிர்ப்பு போராட்டமாய் தொடங்கி அடங்காத கலவர நெருப்பு...அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு... பெருகிவிட்ட ஊழல்...என தமிழகம் முழுவதும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசிக்கொண்டிருந்தது. இதனை கட்டுப்படுத்தவேண்டிய முதலமைச்சர் பக்தவச்சலம் தலைமையிலான அரசோ தங்கள் அரசை காப்பாற்றிக்கொள்ளவே முடியாத நிலையில் திணறிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் 1967ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5, 18, மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் அரசை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப தி.மு.க.வும் வியூகங்களை வகுத்தன.

மெகா கூட்டணி



சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரசுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் கூட்டணியை அமைத்தார் தி.மு.க.தலைவர் அண்ணா. அதற்காக கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஒரேமேடையில் ஏற்றி பிரம்மாண்ட மாநாட்டை சென்னை விருகம்பாக்கத்தில் அண்ணா நடத்தினார். 1966, டிசம்பர் 29ஆம் தேதிமுதல் 4 நாட்கள் நடைபெற்ற மாபெரும் மாநாட்டின் முதல் நாளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் அண்ணா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மறுநாள் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க. தலைவர் சி.என். அண்ணாதுரை, சுதந்திரா கட்சித்¢ தலைவர் ராஜாஜி, முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், நாம் தமிழர் கட்சித் தலைவர் சி.பா. ஆதித்தனர், தமிழரசு கழகம் தலைவர் ம.பொ.சிவஞானம், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மூக்கையா தேவர் ஆகியோர் ஓரேமேடையில் அமர்ந்திருந்தனர்.
மாநாட்டில் பேசிய ராஜாஜி, ‘ஏதோ மாயம் போல் இந்த மெகா கூட்டணி அமைந்திருக்கிறது’ என்றார். தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து வந்த தான் அதே கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஆச்சர்யமானது என்றும், இது சரித்திரத்தில் இடம்பெறும் என்றும் ராஜாஜி குறிப்பிட்டார்.( அவர் சொன்னதுபோல் தமிழகத்தின் சரித்திரத்தை யார் சொன்னாலும் இந்த கூட்டணி குறித்து சொல்லாமல் விடமுடியாத மாற்றத்தை ஏற்படுத்தியது). காங்கிரஸ் கட்சி என்ற பழம் அழுகிவிட்டதால் துர்நாற்றம் வீசத் தொடங்கிட்டதாக குறிப்பிட்ட அவர் அதனை தமிழகத்தை விட்டு அகற்றுவோம் என்று சூளுரைத்தார். மாநாட்டில் பேசிய காயிதே மில்லத், காங்கிரஸ் எனும் விஷபாம்பின் தோலை உரிக்க வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பேசிய சி.பா. ஆதித்தனார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அதே கருத்தை வலியுறுத்தினர்.

‘சைதாப்பேட்டையில் ரூ.11 லட்சம்’



இம்மாநாட்டில் அண்ணா ஆற்றிய உரை அவரது சிறந்த உரைகளில் ஒன்றாக இன்றும் நினைவு கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் பேசிய அண்ணா, ‘இனத்தையும், மொழியையும் காப்பற்றவே அரசியலில் ஈடுபட்டுள்ளேனே தவிர மந்திரி சபை அமைத்து கருணாநிதிக்கு ஒரு மந்திரி பதவியும், நெடுஞ்செழியனுக்கு ஒரு மந்திரி பதவியும் கொடுப்பதற்காக அல்ல’ என்றார். எப்படியாவது ஆட்சியில் அமர்வது நம் நோக்கமல்ல, தரணியிலே தமிழகம் தலை நிமிர்ந்து வாழவேண்டும் அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது என்றும் அண்ணா கூறினார். அரசியலில் ராஜாஜியை போல் வேறு எந்த தலைவர்களையும் தான் கண்டித்தது இல்லை என்று கூறிய அண்ணா, அவரே திமுக கூட்டணியில் இணைந்திருப்பது விதிவகுத்தது என்றார். காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும்வரை ஓயப்போவதில்லை என்றும் அண்ணா சூளுரைத்தார். மாநாட்டிலேயே (1.1.1967) திமுக வேட்பாளர்களின் பட்டியலையும் அண்ணா வெளியிட்டார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த அண்ணா சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுபவர் ‘பதினோரு லட்சம்’ (கருணாநிதி)என்று படித்ததும் மாநாட்டில் பறந்த விசில் சத்தம் விண்ணைத் தொட்டது. (தேர்தல் நிதி திரட்டுவதற்காக 10 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது கருணாநிதி 11 லட்சம் திரட்டி கொடுத்ததால் அண்ணா அப்படி அழைத்தார்)

படி அரிசி திட்டம்

இத்தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்தி எதிர்ப்பு மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் படி அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அண்ணா அறிவித்தார். மெகா கூட்டணி, கவர்ச்சியான தேர்தல் அறிக்கை என பலமாக களமிறங்கிய திமுக அணி பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்ததை முக்கிய பிரச்சனையாக மக்கள் மத்தியில் வைத்த திமுகவினர் ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு? காமராஜர் அண்ணாச்சி கடலை பருப்பு விலை என்னாச்சு?’ என்று ஊர் ஊராக கோஷமிட்டது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.



திமுகவின் பிரச்சாரத்தினால் அந்த அணி வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். (12.01.1967ஆம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டில் அவருக்கும், எம்.ஆர். ராதாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கோபமடைந்த எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டது தனிக்கதை) இந்த தேர்தலில் சென்னை பரங்கி மலை தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் சுடப்பட்டதால் திமுகவிற்கு அனுதாப அலை பெருகியது. அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்ட அக்கட்சி எம்.ஜி.ஆர். கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை சுவரொட்டிகளாக அச்சடித்து தெருவுக்கு தெரு ஒட்டியது. எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு படமும் திமுக அணிக்கான பலநூறு வாக்குகளாக மாறியது. இப்படி அதிர்ஷ்ட காற்று தொடர்ந்து வீசியதால் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

ஆட்சிக் கட்டிலில் தி.மு.க.



174 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. 137 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற சுதந்திரா கட்சி 20 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 இடங்களையும் கைப்பற்றின. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் அண்ணாதுரை சுமார் 80, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். சைதாப்பேட்டையில் போட்டியிட்ட மு. கருணாநிதி 20,484 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகண்டார். ( கருணாநிதி - 53,401, விநாயகமூர்த்தி(காங்.) - 32,917). நெடுஞ்செழியன் உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் அனைவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்¢ காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தினர். குறிப்பாக தி.மு.க.வின் நட்சத்திர வேட்பாளர் எம்.ஜி.ஆர். பிரச்சாரத்திற்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்தபடியே அபார வெற்றிபெற்று சாதனை படைத்தார். அவருக்கு 54,106 வாக்குகளும், அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதிக்கு 26, 432 வாக்குகளும் கிடைத்தன. தி.மு.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், என்.வி. நடராஜன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

காங்கிரஸ் படுதோல்வி

தி.மு.க.வுக்கு ஆட்டிக்கட்டிலை வழங்கிய 1967ஆம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வியை கொடுத்தது. அக்கட்சியின் தேசிய தலைவர் காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் தோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய தளபதியாக விளங்கிய தி.மு.க.வைச் சேர்ந்த பெ. சீனிவாசனிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோல்வியை தழுவினார்.(சீனிவாசன் - 33,421, காமராஜர் - 32,136). அன்றைய நாள்வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் ராஜரத்தினம் 41,655 வாக்குகள் பெற்ற நிலையில் பக்தவச்சலத்திற்கு 32,729 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஓரேயொரு ஆறுதலாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பூவராகவன் மட்டும் 8,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு 42,230 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் செல்வராஜுக்கு 33,363 வாக்குகளும் கிடைத்தன.
தேர்தலில் படுதோல்வியடைந்தாலும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் காமராஜர். தோல்விக்கு பொறுப்பேற்று அரசியலில் இருந்தே ஒதுங்கிக்கொள்ளவும் காமராஜர் முன்வந்தார். ஆனால் பிரதமர் இந்திரா காந்தி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தேர்தல் தோல்வியால் இழந்த தமிழக ஆட்சிக்கட்டிலை இன்றுவரை மீட்டெடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறிவருகிறது. 1967ஆம் ஆண்டில் தேர்தலில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட சரிவைவிட அடுத்து வந்ததேர்தலில் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சிக்கு பேரிடி காத்திருந்தது...(தொடரும்)

ஞாயிறு, 20 மார்ச், 2011

தமிழகம் சந்தித்த தேர்தல்கள்_02

1962 சட்டப்பேரவைத் தேர்தல்

“ நான் நீண்டநாள் உயிரோடு இருக்கமாட்டேன்,எனக்கு வயதாகிவிட்டது.தமிழகத்தின் நலனை காக்க காமராஜருக்கு வாக்களியுங்கள்” என்ற தந்தை பெரியாரின் உருக்கமான அறிக்கைதான் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் தொடக்கம். அன்றைய சூழலில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்துவந்த தி.மு.க.வில் பிளவு, சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதமிருந்த தியாகி சங்கரலிங்கனார் மரணம். போன்ற பரபரப்புகள் அடங்காத நிலையில்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 21.02.1962ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.



1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வினர் 15 பேர் வெற்றிபெற்றதால் கடும் அதிருப்தியில் இருந்த அன்றைய முதலமைச்சர் காமராஜர், இத்தேர்தலில் (1962) தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்திருந்தார். குறிப்பாக தி.மு.க.வசம் இருந்த 15 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு புதிய வியூகத்துடன் காமராஜர் களம் இறங்கினார்.

அதேநேரத்தில் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களில் வெற்றிபெறுவது என்ற உறுதியுடன் தேர்தலுக்குத் தி.மு.க. தயாரானது. இதற்காக, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுதந்திரா கட்சியை தொடங்கி இருந்த ராஜாஜியுடன், தி.மு.க.தலைவர் அண்ணா கூட்டணி அமைத்தார். இதற்கு தி.மு.க.வினர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. ‘தி.மு.க.வை தனது எதிரி என்று கூறிவந்த ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா’ என்று அக்கட்சியினர் தொண்டர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத அண்ணா திட்டமிட்டபடி சுதந்திரா கட்சியுடன் இணைந்து தி.மு.க. தேர்தலை சந்திக்கும் என அறிவித்தார். மறுபுறம் தி.மு.க.வில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய கட்சியை தொடங்கி இருந்த ஈ.வி.கே. சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனி அணியாக களமிறங்கினார்.

மும்முனை பிரச்சாரம்

‘தமிழ்நாடு பெயர்மாற்றம்’ ‘புதிய தொழிற்சாலைகள் திறப்பு’(திருச்சி பாய்லர் தொழிற்சாலை, ஆவடி ராணுவ டாங்க் தயாரிக்கும் தொழிற்சாலை) என 5 ஆண்டுகால (1957 - 1962) ஆட்சியில் காமராஜர் பெரும் நற்பெயரை சேர்த்திருந்தாலும் தி.மு.க.வினரை வீழ்த்துவதற்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார், காமராஜர்தான் தனது வாரிசு என்று வெளிப்படையாக அறிவித்தார்.



காமராஜரை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை என்று கூறிய அவர், இல்லாவிட்டால் தி.மு.க.குதிரையில் சவாரி செய்யும் ராஜாஜி தமிழகத்தை அழித்துவிடுவார் என்று எச்சரித்தார். சுயமரியாதை தலைவராக போற்றப்பட்ட பெரியாரின் இந்த அறிவிப்பு காமராஜரின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது. பெரியாரிடம் இருந்து பிரிந்து சென்றாலும் அவரையே தலைவராக நினைத்துகொண்டிருந்த அண்ணா, இந்த அறிவிப்பைக்கண்டு சிறிதும் கலக்கமடையவில்லை. தனது அழகுத் தமிழ் மற்றும் அடுக்குமொழி பேச்சால் மக்கள் செல்வாக்கை பெற முயன்றார்.



அண்ணாவின் பேச்சில் மயங்கிய மக்கள் அவர் செல்லும் இடங்களெல்லாம் அலைகடலென திரண்டனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜாஜியும், அக்கட்சியை கடுமையாக விமர்சித்தார். வெளிப்படையான ஜாதிக்கட்சிகளைவிட காங்கிரஸ் கட்சியில் சாதிப்பாகுபாடு தலைவிரித்தாடுவதாக அவர் ஊர் ஊராய் பிரச்சாரம் செய்தார். தி.மு.க.வுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட திரைப்படத்துறையினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பொதுக்கூட்டங்கள் களைகட்டின.


இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் திமுகவில் இருந்து வெளியேறிய தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.வி.கே. சம்பத் பிரச்சாரம் செய்தார். ‘தி.மு.க.வில் வன்முறை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அண்ணா ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுகிறார்’ என்ற சம்பத்தின் பேச்சுக்கள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன.இவருக்கு ஆதரவாக சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் பிரச்சாரம் செய்தனர்.

வியூகத்தால் வென்ற பெருந்தலைவர்



தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 2வது சட்டப்பேரவைத் தேர்தலான இத்தேர்தலில் 38 இரட்டைத் தொகுதிகள் கலைக்கப்பட்டு அவற்றுக்கு இணையான ஒற்றைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த தொகுதிகளையும், திமுகவினர் வசமிருந்த தொகுதிகளையும், கைப்பற்றுவதையே இலக்காக கொண்டு காலநேரம் பார்க்காமல் காமராஜர் ஆற்றிய களப்பணிக்கு கை மேல் பலன் கிடைத்தது. மொத்தமுள்ள 206 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 139 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. குறிப்பாக கடந்த தேர்தலில் தி.மு.க.வெற்றிபெற்ற 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே வென்றனர். சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுதந்திரா கட்சி வேட்பாளரை விட 13,444 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். (வாக்குகள் விபரம் : காமராஜர் - 46,950. ராமமூர்த்தி - 33,506.) ஆனால் இந்த வெற்றியை அவரால் முழுமையாக கொண்டாட முடியவில்லை காரணம் தி.மு.க.வின் வளர்ச்சி.

தி.மு.க.வின் வெற்றியும் - சோகமும்

1957ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற 15 தொகுதிகளை இழந்தாலும் புதிதாக 50 தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக தனது வளர்ச்சியை பறைசாற்றியது. அக்கட்சியின் சார்பில் தஞ்சாவூரில் போட்டியிட்ட மு.கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பரிசுத்த நாடாரை 1,928 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.வாக்குகள் விபரம் : மு.கருணாநிதி - 32,145. பரிசுத்த நாடார் - 30,217. (1957ல் குளித்தலையில் வெற்றிபெற்ற கருணாநிதி 1962ல் காமராஜரின் வியூகத்தை அறிந்து தொகுதி மாறியதாகவும் கூறப்படுவதுண்டு). கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நெடுஞ்செழியன் திருவல்லிக்கேணி தொகுதியில் 10,370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 50 தொகுதிகளை தி.மு.க.வினர் அதிரடியாக கைப்பற்றியபோதும் அதனை உற்சாகமாக கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். காரணம் கட்சியின் தலைவர் அண்ணா தனது சொந்த தொகுதியான காஞ்சிபுரத்தில் 9,190 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியாரிடம் தோல்வியடைந்தார்.( நடேச முதலியார் - 46,018. அண்ணா - 36,828.)

தோல்வியும் நன்மைக்கே!

‘தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டுவிடப்போவதில்லை, எனது தம்பிமார்கள் 50பேரின் உருவில் சட்டசபைக்கு செல்கிறேன்’ என தோல்வியைக்கூட ஏற்றுக்கொண்டார் அண்ணா. தோல்வியிலும் ஒரு நன்மை உண்டு என்பது அண்ணா விஷயத்திலும் நடந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த அவர், தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களால், நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அங்கு தனித் தமிழ்நாடு கேட்டு அவர் ஆற்றிய உரை அண்ணாவின் புகழை தேசம் முழுவதும் கொண்டு சேர்த்தது.

அண்ணா தோல்வியிலும் வெற்றியைக் கண்டாலும் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக சரிவு தொடங்கியது. இதனால் 1962ல் பெற்ற வெற்றியே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெற்ற கடைசி வெற்றியானது... (தொடரும்)

வெள்ளி, 4 மார்ச், 2011

தமிழகம் சந்தித்த தேர்தல்கள்_01

1956, மே 17.
பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களால் திணறிக்கொண்டிருந்தது திருச்சி மாநகரம். திமுகவின் 4 நாள் மாநாடு அன்று தொடங்கியதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் சாரைசாரையாக மலைக்கோட்டை மாநகரில் அணி திரண்டனர் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி சகாப்தம் தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவிழாவாக அமைந்த அந்த மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது குறித்து ஜனநாயக முறைப்படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு தனித்தனி வண்ணங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டு வாக்கெடுப்புத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும் தொண்டர்கள் போட்டி போட்டு தங்கள் கருத்துகள் அடங்கிய சீட்டுக்களை பெட்டியில் போட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் எண்ணம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதாகவே இருந்தது. உயர்ந்த எண்ணத்தால் நிறைந்திருந்த அவர்களின் மனங்களை குளிர வைக்கும் வகையில் கனமழையும் கொட்டியது. நீண்டநேரம் கொட்டிய மழையிலும் வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்றது. முடிவில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக இருந்தது. இதனை வலியுறுத்தி 56,942பேர் வாக்களித்த நிலையில், இக்கருத்துக்கு எதிராக 4,203 பேர் வாக்களித்தனர். இந்த முடிவுகளின் படி தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் மாநாட்டில் வகுக்கப்பட்டது.

அதேநேரத்தில் தமிழகத்துடன் இணைந்திருந்த ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்த தலைவர்கள் ஒருபுறமும், குலக்கல்வியை அறிமுகப்படுத்தியதால் முதலமைச்சர் பதவியை இழந்த ராஜாஜியின் ஆதரவாளர்கள் மறுபுறமும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் 1957ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 2வது நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்பார்த்துக்கொண்டிருந்த திமுக முதல்முறையாக 124 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 11 நாடாளுமன்ற தொகுதிகளிலும் களமிறங்கியது.

தன்னம்பிக்கை தளராத கர்மவீரர்

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருந்த பிளவு இத்தேர்தலில் வெளிப்படையாக தெரிந்தது. சாத்தூரில் போட்டியிட்ட முதலமைச்சர் காமராஜரை எதிர்த்து அவரது கட்சியினரே சீர்திருத்த காங்கிரஸ் என்ற பெயரில் ஜெயராம ரெட்டியார் என்பவரை வேட்பாளராக நிறுத்தினர். அதேநேரத்தில் திமுக தேர்தலில் பங்கேற்பதை விரும்பாத தந்தை பெரியார் காமராஜருக்கு ஆதரவளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களுக்கு காமராஜர் செய்த நன்மைகளுக்காக அவரை சொந்தக்கட்சியில் உள்ள பிராமணர்களே தோற்கடிக்க முயற்சிப்பதாக கூறியிருந்தார். காமராஜரை முதலமைச்சராக நீடிக்கச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றும் பெரியார் அறிவித்தார்.



சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தாலும் பெரியாரின் ஆதரவை காமராஜர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “பெரியாரின் திராவிடர் கழகம் எனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தால் அவது அவர்களது இஷ்டம். நான் அதை கேட்கவில்லை” என்று அதிரடியாய் அறிவித்தார்.



காங்கிரஸ், திமுக, சீர்திருத்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பார்வர்ட் பிளாக், பிரஜா சோசலிஸ்ட் என ஏராளமான கட்சி வேட்பாளர்களும் களமிறங்கியதால் தேர்தல் பரப்புரை களை கட்டியது. விறுவிறுப்பான பல நிகழ்வுகளுக்கு மத்தியில் 1957ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. சொந்த கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி காமராஜர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராஜருக்கு 36, 400 வாக்குகளும், ஜெயராம ரெட்டியாருக்கு 31,683 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

திமுகவின் த்ரில் வெற்றி



இத்தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய திமுக 15 தொகுதிகளை கைப்பற்றியது. அக்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் வெற்றிபெற்றார். அண்ணா 31,861 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசன் 20,178 வாக்குகளும் பெற்றனர். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் கருணாநிதி 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு 22,785 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்திற்கு 14,489 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் சேலத்தில் தோல்வியடைந்தார். அதேநேரத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. ஈ.வி.கே. சம்பத் மற்றும் ஆர். தர்மலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர். முதல் தேர்தலிலேயே அதிரடியாய் 15 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த அண்ணாவுக்கு அடுத்த தேர்தலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...(தொடரும்)