ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வணிகமயமாக்கப்படும் தாய்மை...



கையில் குழந்தையுடன் கண்ணீர்விட்டு கதறியபடி கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ராஜேஸ்வரி. வாடகைத்தாயாக இருந்ததற்கு பணம் தராமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மோசடி செய்துவிட்டதாக புகார் மனு ஒன்றையும் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் அளித்தார். தான் ஏமாந்த கதையையும் கண்ணீரோடு விவரித்தார் ராஜேஸ்வரி.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவக்குமார் என்பவரின் மனைவிதான் இந்த ராஜேஸ்வரி. குடும்ப வறுமையால் அடுத்தவேளை உணவுக்கே வழியின்றி வாடிய இருவரும் பிழைப்புத்தேடி கோவை மாவட்டம் சூலூரில் குடியேறியுள்ளனர். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இருவரும் கூலி வேலை செய்து நாட்களை கழித்து வந்தனர். இந்த நிலையில்தான் ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன்பு அந்த தம்பதியின் கண்ணில் பட்டது ‘வாடகைத்தாய் தேவை’ என்ற விளம்பரம். வறுமையை போக்க வழிதெரியாத சூழ்நிலையில் தனியார் மருத்துவமனை சார்பில் நாளிதழில் வெளியாகி இருந்த அந்த விளம்பரம் ஆபத்பாண்டவனாய் தெரிய உடனடியாக மருத்துவமனையை தொடர்புகொண்டார் ராஜேஸ்வரி.

மருத்துவமனைக்கு அழைத்து பேசிய நிர்வாகம், வாடகைத்தாயாக இருக்க ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், மாதம் 12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டது. தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் உரியமுறையில் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், மருத்துவமுறைப்படி வாடகைத்தாயாக மாறினார் ராஜேஸ்வரி. ஆனால் 3 மாதங்களிலேயே தனது போக்கை மாற்றிக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது. குழந்தைகேட்டு பணம் கொடுத்த பெற்றோர், தொடர்ந்து பணம் செலுத்ததால் மேல்சிகிச்சை அளிக்கமுடியாது எனக்கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, சிகிச்சை அளிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால், நள்ளிரவில் ஈவு, இரக்கமின்றி மருத்துவமனையில் இருந்து அவரை வெளியேற்றியது நிர்வாகம்.

தயவு தாட்சண்யம் இன்றி மருத்துவமனை நிர்வாகத்தால் விரட்டபட்டபோதும் சொந்த செலவில் 10 மாதம் வரை சிகிச்சை பெற்று கடந்த மாதம் 11ஆம் தேதி குழந்தையை பெற்றெடுத்தார் ராஜேஸ்வரி. அடுத்தவர்களுக்காக பெற்றுக்கொண்ட குழந்தையை என்னசெய்வதென்று தெரியாத அவர், வேறுவழியின்றி காவல்துறை உதவியை நாடினார். தன்னை ஏமாற்றிய மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தரும்படி காவல்நிலையத்தில் புகார்¢ அளித்தார் ராஜேஸ்வரி. முதலில் விசாரிப்பதாக உறுதியளித்த காவல்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனையின் பெயரைக்கேட்டதும் யோசிக்கத் தொடங்கினர். ஏனென்றால், ராஜேஸ்வரி வாடகைத்தாய் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும், கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு புகார்களையும் நடுநிலையோடு விசாரிக்க வேண்டிய காவல்துறையினர், அதனை செய்யத் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

காவல்துறையினர் மூலம் மிரட்டுவதாக கூறப்படும் புகாரை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ராஜேஸ்வரிதான் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அவர், நாட்கள் செல்லச்செல்ல கூடுதல் பணம் கேட்டு நச்சரித்ததாக குற்றம் சாட்டியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணம்கொடுத்தால் மட்டுமே குழந்தையை ஒப்படைக்கமுடியும் என தனிநபர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருதரப்பு புகார்களிலும் பணம் மட்டுமே முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது தெரியவந்தது. மேலும் போதிய சான்றுகளை கொடுக்க ராஜேஸ்வரி தரப்போ, மருத்துவமனை நிர்வாகமோ முன்வராததால் இருதரப்பும் உள்நோக்கத்துடன் செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி வழக்கை முடித்துக்கொண்டது காவல்துறை. இதன்மூலம் கோவையை உலுக்கிய வாடகைத்தாய் சர்ச்சை ஓய்ந்ததாலும், வாடகைத்தாய் என்ற ஆக்கப்பூர்வமான அறிவியல் வாய்ப்பு பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

குழந்தைப்பெற வழியே இல்லாத தம்பதிகள் மற்றொருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாடகைத்தாய் முறை சிறிதும் வணிகநோக்கத்துடன் நடைபெறக்கூடாது என்கிறது சட்டம். ஆனால் கோவை நிகழ்வு முற்றிலும் வணிக நோக்கத்திற்காக நடந்துள்ளது. கோவையில் மட்டுமல்ல இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது வாடகைத்தாய் வணிகம். வாடகைத்தாய் குறித்து தனியார் மருத்துவமனைகள் எவ்வித விளம்பரமும் செய்யக்கூடாது என சட்டவிதிகள் இருந்தாலும், அதனை சிறிதும் மதிக்காத மருத்துவமனைகள், இதுகுறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றன. அதனை பார்த்து பணத்துக்காக வரும் ஏழைப் பெண்களை மூளைச்சலவை செய்து குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் மருத்துவமனை நிர்வாகம், குழந்தை கேட்டு வரும் தம்பதிகளிடம் முடிந்தவரை பணம் கறந்து விடுகின்றனர். குழந்தை பெற்றுத்தரும் பெண்ணுக்கு 10 மாதங்களும் உரிய சிகிச்சைஅளிப்பதுடன், எதிர்காலத்தில் குழந்தை தொடர்பான எவ்வித சர்ச்சையும் ஏற்படாதவகையில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என விதிகள் கூறினாலும், பல மருத்துவமனைகள் இதனை பின்பற்றுவதில்லை என்கின்றனர் மருத்துவத்துறை வல்லுனர்கள்.

குழந்தை பெறும் எந்திரமாக ஏழைப் பெண்ணையும், பணம் தரும் எந்திரமாக குழந்தை வேண்டுவோரையும் மருத்துவமனை நிர்வாகங்கள் கருதுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இருதரப்பினரையும் கடைசிவரை நேரடியாக சந்திக்க அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல லட்சம் ரூபாய் லாபம் பார்க்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.

மருத்துவமனை நிர்வாகத்திற்கு சிறிதும் சளைக்காதவகையில் ஒருசில வாடகைத்தாய்களும் பணம்பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. முதலில் குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ளும் இவர்கள் கர்ப்பமான பின்னர் கூடுதல் தொகை கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்வதாகக்கூறி களத்தில் இறங்கும் தனி நபர்கள் சிலர் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி, இதனை லாபம் தரும் தொழிலாகவே மாற்றிவிடுகின்றனர்.

இரண்டு தரப்பாலும், கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனை, முடிந்தவரை பணம் பறிக்கும் வாடகைத்தாய் தரப்பினர் என கீழ்த்தரமான தொழிலாகிவிட்ட ‘வாடகைத்தாய்’ முறையால் பாதிக்கப்படுவது அவர்களால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகள்தான். இத்தகைய சர்ச்சைகள் ஓயும்வரை குழந்தைகள் வேண்டா வெறுப்பாகவே வளர்க்கப்படுவதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்குவராமல் குழந்தைகள் அனாதைகளாக விடப்படும் ஆபத்தும் உள்ளது.

வாடகைத்தாய் முறைக்கென சில பொது விதிமுறைகள் இருந்தாலும், முறைகேடு செய்பவர்களை தண்டிக்க கடுமையான விதிமுறைகள் இல்லை. இதனால் தாய்மையின் பெயரில் நடைபெறும் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய அவலங்களை ஒழிக்க முடியும் என்கின்றனர்.

முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க வாடகைத்தாய் முறையையே தவிர்ப்பது நல்லது என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்து. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் செயற்கை கருத்தரித்தல், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற வழிகளில் குழந்தை பெற வாய்ப்பிருப்பதாக கூறும் மருத்துவர்கள், கடைசி முயற்சியாக மட்டுமே வாடகைத்தாய் முறையை நாடவேண்டும் என்கின்றனர். அதற்கேற்ப குழந்தையில்லா தம்பதிகளின் மனநிலையைப் பக்குவப்படுத்த வேண்டியதும் மருத்துவமனையின் கடமை என வலியுறுத்தப்படுகிறது.

மக்களின் மனநிலை மாறினாலும், மருத்துவ உலகின் மகத்தான சாதனைகளில் ஒன்றான வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலோனோர் கடைசி கட்டத்தில் மட்டும் இந்தமுறை நாடுகிறார்கள் என்பதும் அவர்களது கருத்து. வேறு வழியே இல்லாதநிலையில் வாடகைத்தாய் முறையை நாடும்போது, அதுவும் மோசடியானால் அவர்களின் ஏமாற்றத்தை ஈடுசெய்வது கடினம். எனவே, கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனிநபர்களின் பேராசையால் தாய்மையின் புனிதத்தன்மை கெட்டுவிடாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

ஆளும் கட்சியின் கைப்பாவையா தேர்தல் ஆணையம்?

தமிழக மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட (ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்) உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர், இன்றே (22.09.2011) வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த, தேர்தல் தேதி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. அதேநேரத்தில் புதிய குழப்பங்களும், கேள்விகளும் ஏராளமாய் எழுந்துள்ளன.


1. வழக்கமாக வேட்பாளர் தேர்வுக்காக குறைந்தது ஒருவார கால அவகாசம் அளித்து, வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படும் நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்ட 14 மணிநேரத்தில் மனுத்தாக்கல் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?
2. அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் ஒருவாரத்திற்குள் வேட்பாளர்கள் நேர்காணல், தேர்வு உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு அனைவரும் மனுத்தாக்கல் செய்யமுடியுமா?
3. பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கான மாநகராட்சிகள் எவை? பொதுப்பிரிவினருக்கான மாநகராட்சிகள் எவை? என்பதும் இன்றுவரை தௌ¤வாக அறிவிக்கப்படாததால் வேட்பாளர்களை அறிவிப்பது எப்படி?
4. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவடையாத நிலையில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதால் குளறுபடிகளுக்கு வழிவகுக்காதா?
5. முதல்கட்டத் தேர்தலுக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கும் (அக்.17, 19) ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் கள்ளஓட்டு பதிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால் ஒருவர் இருமுறை வாக்களிக்கும் ஆபத்து.
7. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதா?

இப்படி நீண்டுகொண்டே செல்லும் குழப்பங்களின் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும் அ.தி.மு.க மட்டும் எப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதைப்போல் ஆளும்கட்சிக்கு மட்டும் உள்ளாட்சி தொகுதிகள் குறித்த முழுப்பட்டியல் கொடுக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. சசிகலாவுக்கு நெருக்கமானவர் என்று குற்றம்சாட்டப்பட்ட சோ. அய்யரை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்தபோதே, அவர் அ.தி.மு.க.வின் விசுவாசியாக செயல்படுவார் என்று புகார்கள் கூறப்பட்டன. அது உண்மையாவதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. அப்படியானால் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு என்பதெல்லாம் பொய்யா??????????

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஜால்ரா சத்தம் ஓய்ந்தது...

“மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா” இந்த வசனம் கடந்த ஒருமாதகாலம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எத்தனை முறை ஒலித்தது என்று போட்டிவைத்தால் கணக்கில் புலி என சொல்பவர்கள் கூட நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஏனென்றால் அந்தளவுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதான எதிர்க்கட்சி(!) உறுப்பினர்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி சட்டப்பேரவை சபாநாயகர் கூட வார்த்தைக்கு வார்த்தை இந்த வாசகத்தை உச்சரிக்க தவறவில்லை. சட்டப்பேரவை என்பது ஆட்சியாளர்களை புகழும் அவையாக இருந்து வருவது மரபு(!) என்றாலும் கடந்த ஒருமாதத்தில் இந்த ஜால்ரா சத்தம் சற்று அதிகமாகவே ஒலித்தது. இந்த வாசகத்தை கூறி அழைப்பதில் மட்டுமல்ல முதலமைச்சரை புகழ்வதிலும் கடும் போட்டி நிலவியது.

அமைச்சர்கள் 4 வரி பேசினால் அதில் நிச்சயம் இரண்டுவரி அம்மாவுக்கான புகழ்மாலையாக இருந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இடதுசாரிகள் அடித்த ஜால்ரா அடுத்த கூட்டத்தொடர்வரை நிச்சயம் தாங்கும். அதற்கு ஒரே ஒரு உதாரணம் சிவகங்கை தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனின் பேச்சு. தமிழகத்தில் சில திட்டங்கள் நிறைவேற்றாப்படவில்லை என்ற புகாருக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, வழக்கம்போல் பழியைத்தூக்கி மத்திய அரசு மீது போட்டார். மத்திய அரசு போதிய நிதியை வழங்க மறுப்பதால்தான் அத்திட்டங்களை செயல்படுத்தமுடியவில்லை என்று கூறினார். அவரின் மனநிலையை உணர்ந்துகொண்ட குணசேகரன் பேசும்போது, இந்த பிரச்சனைகளை தீர்க்க விரைவில் மத்தியில் அம்மா தலைமையில் மாற்றத்தை (ஆட்சி) கொண்டுவருவோம் என்றபோது முதலமைச்சரே ஒருநிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார். இவரை மிஞ்சமுயன்றவர்களில் முக்கியமானவர் சபாநாயகர் ஜெயக்குமார், இவர் தான் வகிக்கும் பதவியை சுத்தமாக மறந்துவிட்டு பேசினார் என்றே சொல்லலாம். பொதுவாக சட்டப்பேரவையில் சபாநாயகர்தான் முதன்மையானவர். அதற்குபிறகுதான் முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம். ஆனால் இவர் சபாநாயகர் இருக்கையிலும் அதிமுகவின் அடிமட்டத்தொண்டனாகவே செயல்பட்டார். தான் செய்த தவறுகளை அனைவர் மத்தியிலும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் குறை கூறினாலும், அது ஏதோ தனக்கு வழங்கப்பட்ட விருதுபோல் நினைத்து இவர் பேசிக்கொண்டிருந்தார்.

இவர்கள் உதாரணம் மட்டுமே இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பலர் முயன்றதை நாள்தோறும் ஊடகங்களில் காணமுடிந்தது. (வெளியே தெரிந்ததே என்றால், உண்மையில் நடந்தது எவ்வளவு இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஒருநாளின் ஒட்டுமொத்த நிகழ்வுகளில் ஒருமணிநேரம் மட்டுமே ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது)

ஒருபுறம் ஜால்ரா சத்தங்கள் காதை பிளக்க மறுபுறம் மேசையை தட்டும் சத்தமும் தினசரி அவையை அதிரவைத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவையில் நடைபெற்ற விவாதங்கள் அல்ல விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கைகள்தான். (ஆளுநர் உரை உள்பட சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்ற மொத்த நாட்கள் 33. முதலமைச்சர் படித்த அறிக்கைகள் 21.)ஆட்சியில் இல்லாதபோது கொடநாட்டில் தங்கி அறிக்கை வெளியிட்டதை மறக்கமுடியாமலோ, என்னவோ சட்டப்பேரவையிலும் நாள்தோறும் ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்ற வேண்டியத் திட்டங்களைக்கூட எவ்வித எதிர்பேச்சும் இன்றி அறிக்கையில் அறிவித்தார். புதிய அறிவிப்புகள் வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும் தவறாமல் இடம்பெற்ற அம்சம் தி.மு.க.வை திட்டுவது. அவர் படித்த அத்தனை அறிக்கைகளிலும் குறைந்தது இரண்டு பக்கங்களாவது தி.மு.க.வுக்கும், அதன் தலைவருக்கும் அர்ச்சனைகள் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் அலாதியானது. அம்மாவே திட்டிவிட்டார் நாம் திட்டாவிட்டால் அம்மா கோபித்துக்கொள்வார் என்று கருதியோ என்னவோ, சாதாரணமாக கேள்வி கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தி.மு.க. ஆட்சியை வறுத்தெடுத்த பின்னரே கேள்விக்கு வந்தனர்.

சரி, ஜால்ரா அடித்துவிட்டாவது அவரவர் கடமையை சரியாக செய்தார்களா என்றாலும் இல்லை என்பதே உண்மை. ஆம், எந்த துறையானாலும் முக்கிய அறிவிப்பு என்றால் அதனை முதலமைச்சர்தான் வெளியிடுவார், எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியது, அல்லது சம்பிரதாயத்துக்காக வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே அந்தந்த துறை அமைச்சர்கள் வெளியிட்டார்கள். One Woman Government என்று சொல்லக்கூடிய அனைத்துமே அம்மாதான் என்பது இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதேநேரத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில்கூட ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றதாக தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பல நாட்கள் அவைக்கு வராமல் ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக பேசவேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டணியை தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார். இதனால் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அம்சங்களில் கூட பாராட்டுமழை பொழிந்தது மனசாட்சியுள்ளவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்யாத பணியை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது கட்சியை சேர்ந்த ஒருவர், சிறையில் தி.மு.க.வினருக்கு அளிக்கப்படும் சிறப்பு கவனிப்புகளை சுட்டிக்காட்டி அரசை குறைசொன்னார். ஆனால் அவர் வாங்கிக்கட்டிக்கொண்டதுதான் மிச்சம். முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்துள்ள தே.மு.தி.க.வினர் எங்களுக்கு(அ.தி.மு.க) பாடம் நடத்தத் தேவையில்லை என்ற ஜெயலலிதாவின் அனல்கக்கும் பேச்சால் ஆடிப்போனது தே.மு.தி.க. அதன்பின்னர் அக்கட்சியினர் அனைவரும் கப்சிப். இதேபோல் மற்றவர்களை பின்பற்றி கடந்த ஆட்சியை குறைசொல்லி காரியம் சாதிக்க முயன்ற பா.ம.க.உறுப்பினர் கலையரசு அவமானப்படுத்தப்பட்டார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், நடுநிலையாக செயல்படவேண்டிய சபாநாயகர் ஜெயக்குமார் என நான்குபேரும் அவரையும், அவரது கட்சியையும் மட்டம்தட்டி பேசினர்.

அரசின் குறைகளை சுட்டிக்காட்டி அரசியல் செய்ய வேண்டிய தி.மு.க.வினரோ இருக்கை பிரச்சனையை காரணம் காட்டி ஒட்டுமொத்த கூட்டத்தொடரையும் பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடித்தனர். துணிச்சலுடன் செயல்பட்டு சட்டப்பேரவையை ரணகளமாக்கவேண்டிய அவர்கள், அதனை திருக்குறள் கேட்கும் இடமாக மாற்றி வெளிநடப்பு நாடகம் நடத்தினர்.


மொத்தத்தில் திறமையற்ற எதிர்க்கட்சி, தவறை சுட்டிக்காட்டாத கூட்டணி கட்சிகள், கேள்வி கேட்கத் தயங்கிய உறுப்பினர்கள் என சட்டப்பேரவை ஜனநாயகம் ஒருமாதத்திற்கும் மேலாக சங்கடப்படுத்தப்பட்டது. முதலமைச்சரை புகழ்வதற்கும், தி.மு.க.வை குறை சொல்வதற்கும் மட்டுமே பயன்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததால் ஜால்ரா சத்தம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தீராத வலி...மாறாத சோகம்...



சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாது சுடும் மணலில் படுத்து சிரிப்பு... பெண்ணின் உடையணிந்தபடி சுற்றித்திரியும் இளைஞர்... சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டு உலா வருவோர்... நட்ட நடு சாலையில் குட்டிக்கரணம் போடும் மகனை பரிதாபத்துடன் வேடிக்கை பார்க்கும் தாய்.. என வினோதமான உலகமாக காட்சியளிக்கிறது ஏர்வாடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் ஏர்வாடியில் பெரிய மனநல மருத்துவமனையோ, அரசு மனநல காப்பகமோ இல்லை. ஆனாலும் மனநோயாளிகள் வருகை அதிகரிப்பதற்கு காரணம் இங்குள்ள தர்காதான்.

இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாக(?) மாறிவிட்டது ஏர்வாடி. குடும்பத்தினர் இங்கு விட்டுச்சென்றதால் கிழிந்த உடையுடன் பரிதாபமாக உலாவரும் மனநோயாளிகள், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொண்டு ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க விருதுநகரைச் சேர்ந்த பச்சம்மாளின் நிலையோ பரிதாபம். மனநலம் பாதிக்கப்பட்ட தனது 20 வயது மகனை மருத்துவமனை, மருத்துவமனையாக அழைத்துச்சென்ற இவர் இறுதியில் வந்து சேர்ந்த இடம் ஏர்வாடி. மருத்துவமனைகளில் பணம் மட்டுமே செலவானதாக கூறும் பச்சம்மாள், இதற்குமேல் செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் இங்கு வந்ததாக கூறுகிறார். பச்சம்மாளைப்போல் எத்தனையோ பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆண்டுக்கணக்கில் ஏர்வாடியில் தங்கியிருக்கின்றனர். தர்காவில் இடம் கிடைக்காத பலர் தெருவோர மரத்தடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கட்டிவைத்தும் பாதுகாக்கின்றனர்.



இவ்வளவுபேர் வரும் அளவுக்கு தர்காவில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்தால் மிஞ்சுவது வியப்பு மட்டுமே. அதற்கு காரணம் ஏர்வாடியில் நடைபெறுவது சிகிச்சை அல்ல. வழிபாடு மட்டுமே... இதற்காகவே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தாலும் அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. கடந்த 2001ஆம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்தனர்.



இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டிவைக்கத் தடை விதித்ததுடன், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய ஆணையிட்டது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மனநல காப்பகத்தை அமைக்கவும் ஆணையிட்டது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தபின்னும் உச்சநீதிமன்ற ஆணை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஏர்வாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது மருத்துவக் குழுவினர் வந்து சென்றனர். ஆனால் நாளடைவில் அதுவும் குறைந்துவிட்டது. மாதம் 4 ஆயிரம் நோயாளிகள் வரும் நிலையில் 2 மனநல மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இவ்வளவு குறைபாடுகள் உள்ளபோதும், சிகிச்சைகள் கூட அளிக்கப்படாத ஏர்வாடி போன்ற இடங்களை மக்கள் நாடுவது ஏன் என்று விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் பரிதாபத்தின் உச்சம். ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அவர்களை குணப்படுத்துவற்கு மருந்து கொடுப்பதைவிட, அவர்களை அரை மயக்கம் அல்லது, தூக்கத்தில் வைத்திருப்பதற்கே அதிக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் அமைதியான நிலைக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறினாலும், நோயின் தாக்கம் தூங்கி விடுவதில்லை. விளைவு மனநோயின் உச்சத்திற்கே சென்றுவிடுகின்றனர் பாதிக்கப்பட்டோர். அதன்பின்னர் சிகிச்சை அளிப்பதும் கடினமாகிவிடுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் நோய் குணமாகாத நிலையில், வேறு போக்கிடம் இல்லாததால் ஏர்வாடியில் கொண்டு விடப்படும் மனநோயாளிகள் கடவுளின் கருணையை எதிர்பார்த்தபடியே காலத்தை ஓட்டுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஒரு சிலர் சுயநினைவை பெற்றாலும் வீட்டுக்குச் செல்லும்படி கடவுள் கனவில் சொல்லுவார் என காத்துக்கிடக்கும் பரிதாப நிலையும் காணப்படுகிறது.

ஒரு சிலர் நோய் குணமடைந்து சென்றாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் தயங்குவதால் அவர்கள், அதே அழுக்கு உடையுடன் ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர். ஆண்டுக்கணக்கில் இங்கே இவர்கள் சுற்றிக்கொண்டிருக்க அரசு மருத்துவமனைகளோ மனநலம் பாதிக்கப் பட்டவர்களை குறிப்பிட்ட காலத்தில் வெளியேற்றி விடுகின்றன. இடம் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்திய அளவில் 40 ஆயிரம் பேருக்கு ஒரு மன நல மருத்துவமனை மட்டுமே இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள் 800 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் 400 மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்களில் 300 மருத்துவர்கள் சென்னையில் மட்டுமே பணிபுரிவதால் மற்ற மாவட்டங்களில் உள்ள மனநோயாளிகளின் நிலையோ சோகம்தான்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. தனியார் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதற்கே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி இருப்பதால், மனநலம் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சிகிச்சை என்பதே எட்டாக்கனி ஆகிவிடுகிறது.


தனியார் நடத்தும் மனநல காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சையோ, பராமரிப்போ அளிக்கப்படுவதில்லை. பணத்துக்காக ஆடு மாடுகளை போல் நோயாளிகளை நடத்தும் சில காப்பக நிர்வாகிகள் போதிய உணவுகூட தரமறுப்பதால், நோயாளிகளின் பாதிப்பு அதிகமாகி, அவர்களின் ஆவேச செயல்களும் அதிகமாகிவிடுகின்றன. இதுபோன்ற நிலையை மாற்ற அனைத்து மாவட்டக்களிலும் அரசு மனநல காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 கோடி பேர் ஏதாவது ஒரு வகையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தேவைக்கேற்ப மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நிறைவேறாத ஆசை, மனஅழுத்தம், மன உளைச்சல் போன்றவை அதிகரித்து வருவதால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் மனநோய்க்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரவின்றி விட்டுச்செல்லும் மக்களின் மனநிலை மாறுவது மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சபல பெண்களும், ரவுடிக்கும்பலும்...

ஆன்மீக மணம் கமழும் பக்தி பரவசமான திருவண்ணாமலை நகரம் இப்போது போக்கிலிகளின் அட்டகாசங்களால் பீதியில் உறைந்து போய் கிடக்கிறது. இளம் பெண்களையும், குழந்தைகளையும் கடத்திச் செல்லும் கூலிப்படை கும்பலால் பெற்றோர்களும், உற்றார்களும் மிரண்டு போய் நிற்கிறார்கள்.

‘தனது இளம் வயது பேத்தியை திரும்ப ஒப்படைக்க இரண்டரை கிரவுண்ட் இடத்தை எழுதித் தரவேண்டும்’ என்ற போக்கிலி கும்பலின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்து போயுள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சரோஜா.

அங்குள்ள மண்ணடித் தெருவில் வசித்துவரும் சரோஜாவின் மகள் கவுரி. திருமணமாகி 3 பெண்பிள்ளைகளுக்கு தாயான கவுரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்கிலி ஒருவருடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை மயக்கி அழைத்துச் சென்ற போக்கிலி ராஜேஷ் என்பவர், கவுரி குடும்பத்திற்கு சொந்தமான 25 பவுன் தங்க நகைகள், மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்தோடு நின்றுவிடாத அவர்கள் கவுரியின் 3 மகள்களையும் தங்களுடன் அழைத்துச்சென்றுவிட்டனர்.

அழைத்துச்செல்லப்பட்ட 3 பெண்பிள்ளைகள் போக்கிலி கும்பலிடம் சிக்கி சீரழிவதை தடுப்பதற்காக அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் படி கவுரி குடும்பத்தினர் கேட்டுள்ளனர். குறைந்த பட்சம் நந்தினி என்ற 15வயது பெண்ணை மட்டுமாவது விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த போக்கிலி கும்பல், நகரின் முக்கிய பகுதியில் உள்ள கவுரி குடும்பத்திற்கு சொந்தமான இரண்டரை கிரவுண்ட் நிலத்தை எழுதிக்கொடுத்தால் மட்டுமே பெண்ணை ஒப்படைக்க முடியும் என மிரட்டியுள்ளனர்.

போக்கிலிகளின் மிரட்டலால் பயந்துபோன கவுரியின் கணவர் ஊரைவிட்டே ஓடிவிட, உறவினர்கள் மட்டும் தைரியமாக பெண்ணை மீட்க போராடினர். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததெலலாம் அடி - உதை மட்டுமே. கொலை செய்துவிடுவதாகவும் போக்கிலிகள் மிரட்டியதால் உயிர்பயத்தில் காவல்துறையின் உதவியை நாடினார் கவுரியின் தாயார் சரோஜா. தனது பேத்தியை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு திருவண்ணாமலை நகர காவல்நிலையம் சென்றவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் பேசிய விதம் பேரிடியாய் இறங்கியது. புகாருக்குள்ளானவர்களை அழைத்து விசாரிக்கக்கூட முன்வராத காவல்துறை அதிகாரிகள், போக்கிலிகளுக்கு ஆதரவாக சமாதானம் செய்து வைப்பதிலேயே முனைப்பு காட்டினர்.

இளம்பெண்ணை மீட்கப்போராடும் சரோஜாவுக்கு மட்டுமல்ல. தனது 2 வயது மகனை மீட்க போராடும் அரசு ஊழியரான சங்கருக்கும் இதேநிலைதான். 4 மாதங்களுக்கு முன்பு நான்கரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகைகளுடன், மனைவி நித்யா மற்றும் 2 மகன்களை போக்கிலிக்கும்பல் அழைத்துச் சென்றுவிட, 2 வயது மகனை மட்டுமாவது மீட்டுவிட துடிக்கிறார் சங்கர். மகனை ஒப்படைக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் புல்லட் சிவா என்ற போக்கிலி, தரமறுத்தவர்களை அடியாட்கள் மூலம் அடித்து விரட்டியுள்ளார்.

வேறு வழியே இல்லாமல் காவல் நிலையத்தை நாடிய சங்கருக்கு அசிங்கமான அர்ச்சனைகள் மட்டுமே மிஞ்சியது. இவர்கள் மட்டுமல்ல சத்யா, பரிமளா என பணம் மற்றும் சொத்துக்காக போக்கிலிகளால் அழைத்துச்செல்லப்பட்ட பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவர்களில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. போக்கிலி கும்பலுடன் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ள மறைமுக ஒப்பந்தமே இதற்கு காரணம் என கண்ணீருடன் கூறுகின்றனர்.

காவல்துறையினரின் ஆசியுடன் புல்லட் சிவா தலைமையிலான போக்கிலி கும்பல் செய்யும் அட்டுழியங்களை பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிட...! ஒவ்வொன்றும் அசிங்கத்தின் உச்சகட்டம். கவர்ச்சியான உடையணிந்து, உயர்ரக இருசக்கர ஊர்திகளில் உலா வரும் இந்த கும்பல், வசதியான குடும்பப்பெண்களை மயக்குவதையே வேலையாக செய்கின்றனர். அவர்களில் பெரிய அளவில் பின்புலம் இல்லாத பெண்களை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்செல்லும் போக்கிலிகள், பெண்களின் வீட்டிலிருக்கும் நகை, பணத்தை பறித்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழத்தொடங்குகின்றனர். இதனையே தொடர் தொழிலாக செய்யும் போக்கிலிகள், அடுத்த பெண் கிடைத்ததும் முந்தைய பெண்களை அடித்து துரத்திவிடுகின்றனர்.

பெண்களை ஏமாற்றுதல், தட்டிக்கேட்பவர்களை அடித்து உதைத்தல் என போக்கிலி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்த புகார்களை பதிவு செய்யவே மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து செய்வதன் மூலம் காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, வழிப்பறி, கொள்ளை என சிவா தலைமயிலான போக்கிலி கும்பல் மீது கூறப்படும் அனைத்து புகார்களும் கிடப்பில் போடப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

காவல்துறையின் ஒத்துழைப்புடன், பல போக்கிலி கும்பல்களின் ஆதரவும் இருப்பதால் இந்த கும்பலின் அட்டூழியம் எல்லை மீறிச்செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இதனால் பல குழந்தைகள் தாயை இழந்து தவிக்கும் அவலம் அரங்கேறுகிறது. அற்ப மகிழ்ச்சிக்காக சில குடும்பப் பெண்களும் போக்கிலிகளுக்கு துணைபோவதால் அவர்களது குடும்பமே அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போக்கிலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமே இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியும் எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏலச்சீட்டு மோசடி, நிதிநிறுவன மோசடி போல இதுவும் தொடர்கதையாகிவிடும் என எச்சரிக்கின்றனர்.

போக்கிலிகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டும் இருப்பதே இந்த கும்பலின் அத்துமீறல்களுக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில் சட்டத்தை காக்கவேண்டியவர்கள் அதனை மீறும் போக்கிலிகளுக்கு துணைபோவதை தடுக்காதவரை எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. எது எதுக்கோ தனிப்படை அமைக்கும் காவல்துறையினர் போக்கிலிகளை ஒழிக்க தனிப்படை அமைக்க முன்வராதது ஏன்? அவர்களால் வரும் வருமானம் குறைந்துவிடும் என்பதற்காகவா? அல்லது அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என்பதாலா? என அடுக்கடுக்காய் எழுகின்றன கேள்விகள்.

போக்கிலிகள் தமிழகத்தை விட்டே விரட்டப்படுவார்கள் என பதவியேற்ற நாளிலேயே சூளுரைத்தார் முதலமைச்சர். ஆனால் வேலியும், ஆடும் சேர்ந்து பயிரை மேய்வதுபோல் காவல்துறையினரும், போக்கிலிகளும் சேர்ந்து அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அத்துமீறும் போக்கிலிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், அவர்களுக்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருவண்ணாமலை மக்களின் எதிர்பார்ப்பு. நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

குடியால் அழியும் குடும்பங்கள்....

‘குடிக்கப் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவேன்’ என பெற்ற தாயை மிரட்டிய மகனின் வார்த்தைகள் அவனுக்கே எமனாக முடிந்த அவலம் வேலூர் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வேலூர் நைனியப்ப நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். முழுநேர குடிகாரனாக இருந்த வெங்கடேசன் போதைக்கு இடையே அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மருத்துவமனைக்குள்ளேயே போதையில் ஆட்டம்போட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட அவர், குடிக்க பணம் கேட்டு குடும்பத்தினரை கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.

70 வயதான தாய் பூஷணத்திடம் அடிக்கடி போதையில் சண்டையிட்ட வெங்கடேசன், பணம் தராவிட்டால்¢ கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டுபோன பூஷணம் பெற்றமகனையே தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கூலிப்படையை சேர்ந்த 3பேர் அவருக்கு உதவ குடிபோதையில் அட்டகாசம் செய்த மகனை குடிபோதையிலேயே கொலை செய்யத் திட்டம் உருவானது. அதன்படி கூலிப்படையை சேர்ந்த சங்கர், பிரகாஷ், சரத்குமார் ஆகியோர் வெங்கடேசனை பாலாற்று கரைக்கு அழைத்துச் சென்று மதுவை ஊற்றிக்கொடுத்தனர். போதை தலைக்கேறியதும் நினைவிழந்த வெங்கடேசனை அடித்தே கொன்றது கூலிப்படை.

போதையாட்டம் தாங்க முடியாமல் பெற்ற மகனை கொலை செய்துவிட்டாலும் இன்று தனது குடும்பத்தை காப்பாற்ற யாருமே இல்லை என்று கண்ணீர்விட்டு கதறுகிறார் பூஷணம். வெங்கடேசனின் கொலையால் அவரது மனைவியும், 6 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

வேலூர் வெங்கடேசனின் கொலை நிகழ்வை மிஞ்சும் வகையில் சென்னையில் அரங்கேறியுள்ளது மற்றொரு மது அடிமையின்¢ கொடூர மரணம். வடபழனி, வ.உ.சி. நகர் 1வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. ஓரளவு வசதியான வீட்டில் பிறந்த இவர் தனது காதல் மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். உடற்பயிற்சிக்கூடம், கோழிக்கடை என பல்வேறு தொழில் செய்துவந்த பிரசன்னா, குடிபோதைக்கு அடிமையானதும் வாழ்க்கை திசை மாறியது. மதுபோதையில் மாதுக்களையும் பிரசன்னா நாடியதால், குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. உறவினர்களின் ஆலோசனைகளையெல்லாம் கண்டுகொள்ளாத பிரசன்னா, குடிபோதையில் வீட்டிலேயே கண்ட பெண்களுடன் ஆட்டம் போடுவதும், மனைவியை அடித்து சித்ரவதை செய்வதும் தொடர்கதையானது.

குடும்பச் சொத்துக்களை விற்று குடித்துவிட்டு கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஆடிய பிரசன்னாவின் போதை வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் மனைவி உமா மகேஸ்வரி. நண்பர்களுடன் சேர்ந்து தீட்டிய திட்டத்தின்படி அதிகாலையில் பிரசன்னாவின் வீட்டுக்குள் நுழைந்தது கூலிப்படை. போதை மயக்கத்தில் இருந்த பிரச்சன்னாவை வீட்டு வாசலுக்கு தூக்கிவந்த கூலிப்படையினர், அங்கிருந்த மின்கம்பிகளை பிரசன்னா உடலில் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சினர். அப்போதும் உயிர் போகாததால் கழுத்தை நெறித்து முடிக்கப்பட்டது பிரசன்னாவின் கதை.

காவல்துறையிடம் தப்பிக்க கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய உமா மகேஸ்வரி, சிறிதுநேரத்தில் கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டியதாக ஒப்புக்கொண்டார். குடிபோதையில் கணவர் செய்த சித்ரவதைகள் தாங்கமுடியாமல்தான் கொலை செய்ததாக கூறிய அவர், கணவரின் சகிக்க முடியாத போதை அட்டகாசங்களையும் பட்டியலிட்டார். உமா மகேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட, அவரது 2 குழந்தைகளும் ஆதரவன்றி தவிக்கின்றனர்.

பெண்களை அடித்து துன்புறுத்துதல், குழந்தைகள் கண்முன்னே சண்டையிடுதல், குடும்பச் சொத்துக்களை அழித்தல், என போதையில் மயக்கத்தில் தவறு செய்வதோடு குடிகாரர்கள் நின்றுவிடுவதில்லை. தங்களின் போதைக்கு இடையூறாக யார் வந்தாலும் அவர்களை தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள் என்பதை, நட்டநடு சாலையில் பலரின் கண் எதிரே கோவையில் அரங்கேறிய கொலை நிரூபித்துள்ளது.

மது குடிப்பதை தடுத்தால் குழந்தையைக்கூட கொல்லும் கொடூரன்களாக மாறிவிடுகின்றனர் குடிகாரர்கள். இதனை உண்மையாக்கும் விதத்தில் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளது ஒரு சோக நிகழ்வு. சாலைமாமண்டூரை சேர்ந்த தமிழரசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத் சொத்துக்களை விற்கத் தொடங்கியதால் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இருக்கும் சொத்துக்களையாவது காப்பாற்றும் வகையில் எஞ்சிய குடும்பச்சொத்துக்கள் தமிழரசனின் மகன் வெங்கடேசனின் பெயருக்கு மாற்றப்பட்டது. தனது குடிபோதைக்கு தடை ஏற்பட்டதால் போதை வெறிகொண்ட தமிழரசன், தனது 3 சிறு வயது குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தான். இதற்காக சிறுவன் வெங்கடேசன் உள்பட தனது 3 குழந்தைகளுக்கும் இனிப்பில் நஞ்சு கலந்து தமிழரசன் கொடுக்க, கள்ளங்கபடமறியா குழந்தைகளும், தந்தை கொடுத்ததை ஆவலுடன் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் மூவரும் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் அலறியடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் வெங்கடேசன் பரிதாபமாக உயிரைவிட்டான்.

குடிபோதைக்கு இடையூறாக வந்த பிஞ்சு மகனை கொன்ற தமிழரசன் சிறைக்கு சென்றுவிட, அவனது மற்ற இரு குழந்தைகளும், மனைவியும் ஆதரவின்றி தவிக்கின்றனர். இவையெல்லாம் கடந்தவாரத்தில் நிகழ்ந்தவை மட்டுமே எனக்கூறும் உளவியல் ஆய்வாளர்கள், குடிவெறியால் தமிழகம் முழுவதும், இத்தகைய கொலைகள் நடந்துகொண்டே இருப்பதாக வேதனையுடன் கூறுகின்றனர். குடிகாரன் குழந்தையை கொன்றாலும், குடிகாரனை மற்றவர்கள் கொன்றாலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் மொத்தமும் தெருவில் நிற்கும் அவலம் மட்டுமே மிச்சம் என்பதும் உளவியல் ஆய்வாளர்களின் கருத்து.

இந்த உண்மைகளையெல்லாம் உணர்ந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற குரல் உரக்க ஒலித்தாலும் அதனை கண்டுகொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு மதுக்கடை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், அதற்கு காரணம் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் என்பதை என்றைக்கும் சொல்வதில்லை. குடிபோதை தகராறுகளால் ஒருபுறம் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளையில், குடித்துவிட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ எகிறிக்கொண்டே செல்கிறது. மதுக்கடைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டை என்பதை பலமுறை சுட்டிக்காட்டினாலும் அதனை கண்டுகொள்ள யாரும் தயாராக இல்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக கூறும் ஆட்சியாளர்கள், எத்தனை ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் கூலிப்பணத்தை அரசு மதுக்கடையிலேயே கொடுத்துவிட்டு திரும்புகிறார்கள் என்பதை என்றாவது எண்ணியதுண்டா?

குற்றத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கு துணைபோவது போன்றதே என்கிறது இந்தியத் தண்டனைச் சட்டம். அப்படியானால் ஏழை மக்களின் பணம் அரசு மதுக்கடை என்ற பெயரில் பறிக்கப்படுவதற்கு அரசு துணைபோவது குற்றம் ஆகாதா? எத்தனை பேர் செத்தால் என்ன? எத்தனை குடும்பங்கள் அழிந்தால் என்ன? எங்களுக்குத் தேவை பணம் மட்டுமே என ஆட்சியாளர்கள் செயல்பட்டால், பாதிக்கப்பட்டவர்களே பதிலடி கொடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

வியாழன், 21 ஜூலை, 2011

வரம்பு மீறும் ஊடகங்களுக்கு சவுக்கடி...

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என உலக ஊடகத்துறையின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் ராபர்ட் முர்டாக். கடந்தமாதம் வரை உலக புகழ்பெற்ற பத்திரிகைத் துறை தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த முர்டாக் இன்று பிரிட்டனின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்.



ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கராக வாழும் ராபர்ட் முர்டாக்கிற்கு பரம்பரை தொழிலே பத்திரிகைதான். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார் முர்டாக். ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிக்கையை இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்திய முர்டாக், அதிரடிச் செய்திகள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். குறிப்பாக இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தினர், பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் என பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்டு இவரது நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை வெளியிட்ட செய்திகள் லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்தது. புகழின் உச்சிக்கு சென்றாலும் சொத்து சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார் முர்டாக். அதன் விளைவாக போட்டியாக தோன்றும் ஊடகங்களை எப்படியாவது வளைத்து போட்டுவிடுவார். சண்டே டைம்ஸ், தி டெய்லி மிர்ரர், தி டெய்லி டெலிகிராப் என முர்டாக் வளைத்த பத்திரிகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.



பத்திரிகைகளை வளைத்தால் மட்டும் போதாது அவற்றின் விற்பனை அதிகரித்தால் மட்டுமே லாபம் என்பதை நன்கு உணர்ந்திருந்த முர்டாக் அதற்காக பல குறுக்கு வழிகளை அசாத்திய துணிச்சலுடன் தேர்வு செய்தார். பிரபலங்களின் தொலைபேசிகளை தொழில்நுட்ப பணியாளர்களைக்கொண்டு ஒட்டு கேட்டல், காவல்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அரசின் ரகசிய தகவல்களை திரட்டுதல், தனியார் புலனாய்வு ஆட்கள் மூலம் பிரபலங்களை பின்தொடர்ந்து கண்காணித்தல், என செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்ததன் விளைவாக ஊடக உலகில் முர்டாக்கின் மதிப்பு உயர்ந்தது. கூடவே அவரது சொத்து மதிப்பும் கணக்கிட முடியாமல் வளர்ந்தது. (இன்றைய தேதியில் மட்டும் முர்டாக்கின் சொத்து மதிப்பு ரூ. 3 லட்சம் கோடி) ஊடகத்தையே மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போல் நடத்தி லாபத்தை குவித்த முர்டாக் சொத்துகளை காப்பாற்றுவதற்காக அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொள்ள தவறவில்லை. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் முதல் இன்றைய பிரதமர் டேவின் கேமரூன் வரை ஆட்சியாளர்கள் அனைவரும் முர்டாக்கிற்கு நெருக்கம். இதன் மூலம் தன் மீது அவ்வப்போது எழுந்த புகார்களையெல்லாம் தூசி போல தட்டிவிட்டார். நெருக்கத்தை தொடர்வதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தாராளமாக நன்கொடையும் வழங்கினார் முர்டாக்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஸ்கை ஒளிபரப்பு நிறுவனத்தை முர்டாக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆக்கிரமிக்க முயன்றபோதுதான் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வெளிச்சத்துக்கு வந்தது. தோண்டத்தோண்ட பூதம்போல் வெளியான தொலைபேசி ஒட்டு கேட்பு தகவல்கள், முர்டாக்கின் ஊடக சாம்ராஜ்யத்தையே சரியச் செய்துள்ளது.



இதன் முதல்படியாக 168 ஆண்டுகளாக வெளிவந்த முர்டாக்கின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை இழுத்து மூடப்பட்டுள்ளது.அத்தோடு முடிந்துவிடவில்லை விவகாரம் ,இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொது விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பகிரங்க மன்னிப்பு கேட்ட முர்டாக், தொலைபேசி ஒட்டுகேட்புக்கு நேரடியாக பொறுப்பேற்க முடியாது என வீம்பு பிடிக்க, ஆத்திரமடைந்த பார்வையாளர் ஒருவர் முர்டாக்கை சிற்றுண்டி சாப்பிடும் தட்டை எடுத்து தாக்கினார்.



ராஜாபோல் வாழ்ந்து வந்த முர்டாக் நாடாளுமன்றத்தில் அனைவரது முன்னிலையிலும் தாக்கப்பட்ட இந்த நிகழ்வு வரம்பு மீறும் ஊடக துறையினருக்கு ஒரு சவுக்கடியாக விழுந்துள்ளது. பத்திரிகை கையில் இருக்கிறது நாம் வெளியிடுவதுதான் செய்தி, நமக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருக்கிறது, நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்கிற மிதப்பில் இருந்த முர்டாக் இந்த தாக்குதல் நிகழ்வையடுத்து இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துவிட்டார். (பிரிட்டனில் இருந்து வெளியேறிவிட்டார்) முர்டாக்கின் நிறுவனங்கள் இனியும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக மறைந்து போகும் என்பதை மறுப்பதற்கில்லை.