வெள்ளி, 15 ஜூன், 2012

மண்ணை கவ்விய மம்தா...



ஒரு விவசாயி வைத்திருந்த 2 உழவுமாடுகளில் ஒரு மாடு வயல்வேலைக்கு செல்லும்போதெல்லாம் முரண்டுபிடித்தது. விவசாயியும் அந்த மாட்டிற்கு பச்சைப்புல், புண்ணாக்கு தண்ணீர் போன்றவற்றை வைத்து கவனித்து வளர்த்துவந்துள்ளார். பருவமழை பெய்தபோது அந்த மாடு அளவுக்கு அதிகமாக முரண்டுபிடிக்க நொந்துபோன விவசாயி, அந்த மாட்டை அடிமாட்டுக்கு(கறிக்கு) விற்றுவிட்டு புதிய மாடுவாங்கி பழைய மாட்டுடன் ஜோடி சேர்த்துவிட்டாராம். முரண்டுபிடித்தால் கவனிக்கப்படுவோம் என்று நினைத்த அந்த மாடு, அழுதபடியே லாரியில் ஏற்றப்பட்டதாம். அந்த நிலைதான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

சாதாரண காட்டன் புடவை, ரப்பர் செருப்பு என எளிமையின் மறுஉருவமாக உலாவந்த மம்தா பானர்ஜி, தங்கள் மாநிலத்திற்கே பெருமை சேர்க்க வந்த அவதாரம் என மேற்குவங்க மாநில மக்கள் கருதினர். அதனால்தான் 30ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மம்தாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். மத்திய அமைச்சர் பதவியை உதறிவிட்டு மேற்குவங்க முதலமைச்சர் பதவியேற்றபோதும் மம்தாவின் நடை உடையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம். அதுவரை மக்கள் தலைவியாக கருதப்பட்ட மம்தா, முதலமைச்சர் பதவியை அடைந்தவுடன் மமதையின் ராணியாக மாறத்தொடங்கினார். 35 ஆண்டுகள் ஆட்சிகட்டிலில் இருந்த கம்யூனிஸ்டுகளை வீழ்த்திவிட்டோம் இனியாரும் நமக்கு கால்தூசியே என்ற போக்கு அவரது பேச்சுக்களில் வெளிப்பட்டது. 



சில்லரை வணிகத்தில் நேரடி அன்னியமுதலீடு, ஓய்வூதிய சீர்திருத்த மசோதா என மத்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சியான பா.ஜ.க. எதிர்ப்பதற்கு முன் மம்தா எதிர்த்தார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், இடம்பெற்றிருந்த மம்தாவிடம் 19 எம்.பி.க்கள் இருப்பதால் மத்திய அரசும் அவரது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல திட்டங்களை நிறுத்திவைத்தது. ஒரு சில நேரங்களில் மேற்குவங்கத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கி காரியம் சாதித்தது மத்திய அரசு. மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல, மத்திய அரசின் அன்றாட செயல்பாடுகளிலேயே மூக்கை நுழைத்தார் மம்தா. இந்த முடிவு எங்களை கேட்காமல் எடுக்கப்பட்டது, இந்த விவகாரத்தில் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என அதிரடியாக மம்தா கிளப்பிய சர்ச்சைகளால் பலநேரங்களில் மத்திய அரசு திணறிப்போனது. இதற்கெல்லாம் உச்சமாக ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு அறிவித்ததற்காக, அவரது திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை உடனடியாக மாற்றியபோதுதான் அவரது மமதைப்போக்கு அம்பலமானது. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்த ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் படித்ததற்காவே ஒரு அமைச்சரின் பதவியை பறித்தது இதுவரை இந்தியா பார்த்திராதது. மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதியின் பதவியை பறித்ததற்கு மம்தா கூறிய காரணம், தம்மை கலந்தாலோசிக்காமல் ரயில்வே கட்டணங்களை உயர்த்தினார் என்பதுதான். அமைச்சராக ஒருவர் பதவியேற்கும்போதே, அரசின் ரகசியங்களை பிறரிடத்தில் வெளியிடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள். இது மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ள மம்தாவுக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் கண்ணசைவின்படியே அனைத்தும் நடக்கவேண்டும் என்பதில் மம்தா உறுதியாக இருந்தார்.  ரயில்வே அமைச்சரின் பதவியை காலி செய்ததுடன், தான் கைகாட்டிய முகுல்ராய்க்கு அந்த பதவியை வழங்கச் செய்தார். அவரும் தலைமைக்கு விசுவாசம் காட்டுவதற்காக, பதவியேற்றவுடனேயே கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார். கட்டணம் குறைக்கப்பட்டது நல்லதுதான் என்றாலும், அரசின் கூட்டுமுடிவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளை, எவ்வித ஆலோசனையும் இன்றி ரத்து செய்தால் மத்தியில் அரசு எதற்கு? இவ்வளவும் மம்தாவின் கண்ணசைவில் நடந்தது. இப்படி மத்திய அரசின் முடிவுகளை தன் இஷ்டம்போல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா மாற்றினால் பிரதமர் பதவி ஏன்? (பிரதமர் ஏற்கனவே பொம்மையாக வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், அரசின் அறிவிப்புகளை அவர் வழியாகவே வெளியிடுகிறார் சோனியா)

மம்தாவின் இத்தனை ஆட்டங்களையும் மத்திய அரசு பொறுத்துக்கொண்டதற்கு காரணம் பெரும்பான்மையின்மை. கூட்டணி அரசில் முக்கிய பங்குவகிக்கும் மம்தா விலகிக்கொண்டால் அரசே கவிழ்ந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் சோனியா.

ஆனால், இதற்கெல்லாம் உச்சமாக நாட்டின் முதல்குடிமகனான குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மம்தா அரங்கேற்றிய கீழ்த்தரமான அரசியல் அனைவரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர் என்ற மரியாதைக்காக மம்தாவை டெல்லிக்கு அழைத்தார் சோனியா காந்தி. அதனை ஏற்று டெல்லி சென்ற மம்தா, விமான நிலையத்தில் இருந்து, நேரடியாக முலாயம் சிங் வீட்டில் சென்று இறங்கினார். சோனியாவை மறுநாள் சந்திக்க இருந்த நிலையில் வேண்டுமென்றே முலாயம்சிங்கை மம்தா சந்திக்க காரணம், தனக்குள்ள அரசியல் பலத்தை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தவே. மறுநாள் சோனியாகாந்தியை மம்தா சந்தித்து பேசினார். அப்போது மேற்குவங்கத்தை சேர்ந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்து ஆதரவும் கேட்டுள்ளார் சோனியா. இதனை பின்னர் செய்தியாளர்களிடம் வலியச்சென்று வெளியிட்டார் மம்தா பானர்ஜி. இதேபெயர்களை திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பிற கூட்டணி தலைவர்களுக்கும் ஏற்கனவே தூதர்கள் மூலம் சோனியா தெரியப்படுத்தியிருந்தார். அவர்களெல்லாம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை சோனியா அறிவிப்பார் என்று கூறியிருந்த நிலையில் மம்தா மட்டும் பெயர்களை வெளியிட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த ஆச்சர்யத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே சோனியா வீட்டில் இருந்து நேரடியாக முலாயம்சிங் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி,அவருடன் இணைந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு புதிய வேட்பாளர்களை அறிவித்தார். 



அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜியுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மீது இருக்கும் வெறுப்பையே மம்தா பானர்ஜி இவ்வாறு காட்டினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறியதை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. மேற்குவங்கத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால், அவர் தமது மாநிலத்திற்கு வரும்போதெல்லாம் மரபுப்படி, மம்தா விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவும், தம்மைவிட உயர்ந்தபதவிக்கு தமது மாநிலத்தை சேர்ந்தவர் வருவதை தடுக்கவுமே பிரணாப் முகர்ஜியை மம்தா நிராகரித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமானால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 16,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும் என்ற மம்தாவின் நிபந்தனையையும் பிரணாப் ஏற்க மறுத்ததால் அவரை மம்தா நிராகரித்தார்.

தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மம்தாவின் அதிரடி அரசியல் 2 நாட்கள்கூட நீடிக்காததுதான் சோகம். இதுவரை அவர் போட்ட முட்டுக்கட்டையெல்லாம் பொறுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, தங்கள் கவுரவத்திற்கே மம்தா விடுத்த சவாலை முறியடிக்கும்வகையில் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக இன்று (15.06.2012) அறிவித்துவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நற்பெயர் பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடன் சேர்ந்து அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கப்போவதாக மம்தா சூளுரைத்தாரோ அதே சமாஜ்வாதிக் கட்சி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதுதான். அதுவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிலநிமிடங்களில் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்ததன்மூலம் மம்தாவின் முகத்தில் கரியை பூசியுள்ளது சமாஜ்வாதி கட்சி. 

இதேபோல் யாரெல்லாம் தங்களது வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று மம்தா எதிர்பார்த்தாரோ அவர்களெல்லாம் அடுத்தடுத்து பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் மம்தாவின் மமதைக்கு சரியான அடி கிடைத்துள்ளதுடன், குட்ட குட்ட குனிகிறார்கள் என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த மம்தா முதல்முறையாக அவர்கள் நிமிர்ந்துகொண்டதால் மண்ணைக் கவ்வியுள்ளார். ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகிப்போயுள்ளன என்பதை மம்தா இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரும் ஒருநாள் இருந்தஇடம் தெரியாமல் போய்விடநேரிடும்....