வியாழன், 21 ஜூலை, 2011

வரம்பு மீறும் ஊடகங்களுக்கு சவுக்கடி...

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என உலக ஊடகத்துறையின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் ராபர்ட் முர்டாக். கடந்தமாதம் வரை உலக புகழ்பெற்ற பத்திரிகைத் துறை தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த முர்டாக் இன்று பிரிட்டனின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்.



ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கராக வாழும் ராபர்ட் முர்டாக்கிற்கு பரம்பரை தொழிலே பத்திரிகைதான். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார் முர்டாக். ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிக்கையை இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்திய முர்டாக், அதிரடிச் செய்திகள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். குறிப்பாக இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தினர், பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் என பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்டு இவரது நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை வெளியிட்ட செய்திகள் லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்தது. புகழின் உச்சிக்கு சென்றாலும் சொத்து சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார் முர்டாக். அதன் விளைவாக போட்டியாக தோன்றும் ஊடகங்களை எப்படியாவது வளைத்து போட்டுவிடுவார். சண்டே டைம்ஸ், தி டெய்லி மிர்ரர், தி டெய்லி டெலிகிராப் என முர்டாக் வளைத்த பத்திரிகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.



பத்திரிகைகளை வளைத்தால் மட்டும் போதாது அவற்றின் விற்பனை அதிகரித்தால் மட்டுமே லாபம் என்பதை நன்கு உணர்ந்திருந்த முர்டாக் அதற்காக பல குறுக்கு வழிகளை அசாத்திய துணிச்சலுடன் தேர்வு செய்தார். பிரபலங்களின் தொலைபேசிகளை தொழில்நுட்ப பணியாளர்களைக்கொண்டு ஒட்டு கேட்டல், காவல்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அரசின் ரகசிய தகவல்களை திரட்டுதல், தனியார் புலனாய்வு ஆட்கள் மூலம் பிரபலங்களை பின்தொடர்ந்து கண்காணித்தல், என செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்ததன் விளைவாக ஊடக உலகில் முர்டாக்கின் மதிப்பு உயர்ந்தது. கூடவே அவரது சொத்து மதிப்பும் கணக்கிட முடியாமல் வளர்ந்தது. (இன்றைய தேதியில் மட்டும் முர்டாக்கின் சொத்து மதிப்பு ரூ. 3 லட்சம் கோடி) ஊடகத்தையே மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போல் நடத்தி லாபத்தை குவித்த முர்டாக் சொத்துகளை காப்பாற்றுவதற்காக அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொள்ள தவறவில்லை. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் முதல் இன்றைய பிரதமர் டேவின் கேமரூன் வரை ஆட்சியாளர்கள் அனைவரும் முர்டாக்கிற்கு நெருக்கம். இதன் மூலம் தன் மீது அவ்வப்போது எழுந்த புகார்களையெல்லாம் தூசி போல தட்டிவிட்டார். நெருக்கத்தை தொடர்வதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தாராளமாக நன்கொடையும் வழங்கினார் முர்டாக்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஸ்கை ஒளிபரப்பு நிறுவனத்தை முர்டாக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆக்கிரமிக்க முயன்றபோதுதான் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வெளிச்சத்துக்கு வந்தது. தோண்டத்தோண்ட பூதம்போல் வெளியான தொலைபேசி ஒட்டு கேட்பு தகவல்கள், முர்டாக்கின் ஊடக சாம்ராஜ்யத்தையே சரியச் செய்துள்ளது.



இதன் முதல்படியாக 168 ஆண்டுகளாக வெளிவந்த முர்டாக்கின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை இழுத்து மூடப்பட்டுள்ளது.அத்தோடு முடிந்துவிடவில்லை விவகாரம் ,இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொது விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பகிரங்க மன்னிப்பு கேட்ட முர்டாக், தொலைபேசி ஒட்டுகேட்புக்கு நேரடியாக பொறுப்பேற்க முடியாது என வீம்பு பிடிக்க, ஆத்திரமடைந்த பார்வையாளர் ஒருவர் முர்டாக்கை சிற்றுண்டி சாப்பிடும் தட்டை எடுத்து தாக்கினார்.



ராஜாபோல் வாழ்ந்து வந்த முர்டாக் நாடாளுமன்றத்தில் அனைவரது முன்னிலையிலும் தாக்கப்பட்ட இந்த நிகழ்வு வரம்பு மீறும் ஊடக துறையினருக்கு ஒரு சவுக்கடியாக விழுந்துள்ளது. பத்திரிகை கையில் இருக்கிறது நாம் வெளியிடுவதுதான் செய்தி, நமக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருக்கிறது, நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்கிற மிதப்பில் இருந்த முர்டாக் இந்த தாக்குதல் நிகழ்வையடுத்து இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துவிட்டார். (பிரிட்டனில் இருந்து வெளியேறிவிட்டார்) முர்டாக்கின் நிறுவனங்கள் இனியும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக மறைந்து போகும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தமிழக கோவில்களில் தங்கச்சுரங்கம்...!!!



27.06.2011...பக்தி திருத்தலமாக மட்டுமே அதுவரை அறியப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தங்கச்சுரங்கமாக மாறத் தயாராகிக்கொண்டிருந்தது. அதனை அறியாத பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்து கொண்டிருக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உள்ளே நுழைந்தது 7 பேர் கொண்ட குழு. கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்து, அதன் கீழ் இருந்த கமுக்க அறை ஒன்றை திறந்ததும் உலகின் ஒட்டுமொத்த கவனமும் கோவிலை நோக்கி திரும்பியது. காரணம் அங்கே கொட்டிக்கிடந்த தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிக்க முடியாத அணிகலன்கள்தான்.

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் உள்ளது பத்மநாப சுவாமி கோவில். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலை 1733ஆம் ஆண்டில் ராஜகோபுரங்களுடன் புதுப்பித்தார் மன்னர் மார்த்தாண்ட வர்மா. அதன்பின்னர் மன்னர் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த இக்கோவிலில் முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாக கடந்த 2008ஆம் ஆண்டில் போர்க்கொடி தூக்கினார் தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற இந்திய காவல்பணி அதிகாரி டி.பி. சுந்தர்ராஜன். கோவில் நிர்வாகத்தை கேரள அரசே ஏற்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.

சுந்தர்ராஜனின் கோரிக்கையை கேரள உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தங்கள் உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக உச்சநீதிமன்றத்தை நாடியது மன்னர் குடும்பம். இந்த வழக்கில்தான், கோவிலில் கமுக்க அறைகளை திறந்து உள்ளே இருக்கும் அணிகலன்களை மதிப்பிட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதற்காக 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற ஆணைப்படி கடந்த மாதம் 27ஆம் தேதி ஆய்வை தொடங்கிய குழுவினர் முதலில், கோவிலில் இருந்த 6 கமுக்க அறைகளுக்கும் தனித்தனி பெயரிட்டனர். அவற்றில் 2 அறைகள் மட்டும் 136 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதிகாரிகளின் ஆய்வு அங்கிருந்து தொடங்கியது.

முதல் அறையைத் திறந்ததுமே தங்க, வைர நகைகள், சிலைகள், கிரீடங்கள் என மலை மலையாகக் குவிந்து கிடந்த பொற்குவியலைக் கண்டு மலைத்து நின்றனர் அதிகாரிகள். அறைக்கு உள்ளேயே மேலும் சில அறைகள் இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அவற்றையும் திறந்தபோது அங்கேயும் குவியல் குவியலாக அணி மணிகள்¢ கொட்டிக்கிடந்தன.


18 அடி நீளமுள்ள தங்க அங்கி, சரம் சரமாக தங்கச் சங்கிலிகள், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட 4 அடி உயர விஷ்ணு சிலை, ஆயிரம் கிலோ எடையுள்ள தங்க காசுகள், மரகத கல் பதிக்கப்பட்ட அணிகலன்கள் என நீண்டு கொண்டே சென்றது பொற்குவியலின் பட்டியல். அள்ள அள்ள குறையாத அணிகலன்களின் மதிப்பு முதலில் 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஒரு லட்சம் கோடி, ஒன்றரை லட்சம் கோடி என்று சொல்லப்பட்டாலும், உண்மையான மதிப்பு 5 லட்சம் கோடியை தாண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

136 ஆண்டுகளாக திறக்கப்படாத மற்றொரு அறையின் பூட்டை திறக்க முடியாததால் அந்த அறையில் இருக்கும் நகைகளை மதிப்பிட முடியாத நிலை உள்ளது. உச்சநீதிமன்ற ஆணையைப் பெற்று அதனையும் திறந்தால் பொற்குவியலின் மதிப்பு தற்போதுள்ள மதிப்பைவிட 10 மடங்கு உயரும் என்ற தகவல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு சுரங்க அறை நகைகள் மூலமே உலகின் பணக்கார கடவுளாக மாறிவிட்ட பத்மநாப சுவாமிக்கு, புகழுடன் சேர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இதே பாதுகாப்பு அச்சுறுத்தலால்தான் பொற்குவியல் சேர்ந்ததற்கும் காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். போர்வெற்றி, நன்கொடைகள் மூலம் ஏராளமான ஆபரணங்களை சேர்த்த மன்னர்கள், வெளிநாட்டு படையெடுப்புகளில் இருந்து அவற்றை பாதுகாக்க அனைத்தையும் கோவில்களில் குவித்து வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.


வறட்சியான காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதும் மன்னர்கள் நகைகளை குவித்ததற்கு முக்கிய காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை, அந்த உயரிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்தையும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பத்மநாப சுவாமி கோவிலுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பதன் மூலம் பொற்குவியல் விவகாரம் தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்காலத்தில் குமரி பகுதியை ஆண்ட மன்னர்களும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு பொற்குவியலை வழங்கியதாக கூறப்படுவதால் அதில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருப்பதாக குமரி மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து சுசீந்திரம், வட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பொற்குவியலில் உள்ள பங்கை மீட்கக்கோரி கையெழுத்து இயக்கமே நடத்தப்பட்டுள்ளது.


பொற்குவியலில் பங்கு கேட்டு ஒருபுறம் போர்க்கொடி உயர்த்தப்படும் அதேநேரத்தில், தமிழகத்தில்¢ உள்ள முக்கிய கோவில்களிலும் பொற்குவியல் கொட்டிக்கிடப்பதாக புதிய பூதம் கிளம்பியுள்ளது. திருச்சி திருவரங்கம், மதுரை மீனாட்சி அம்மன், தஞ்சை பெரிய கோவில், போன்ற முக்கிய கோவில்களில் சுரங்க அறைகளில் நகைகள் வைக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கும் வரலாற்று ஆய்வாளர்கள், அவை இருக்கும் இடங்களைக்கூட துல்லியமாகக் கூறுகின்றனர். உதாரணமாக திருவரங்கத்தில் கருடாழ்வார் சிலைக்கு அருகே 2 அறைகளில் பொற்குவியல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலேபோய் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொற்குவியலோடு சேர்த்து பெருமாள் இருந்த கர்ப்பகிரகமே கமுக்க அறையாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பரவும் புதுப்புது தகவல்களால் முக்கிய கோவில்களில் பழைய ஆவணங்கள் புரட்டப்பட்டு வருகின்றன. பல இடங்களில் கமுக்க ஆய்வுகள் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.




கோவில்களுக்குள் புதைந்து கிடக்கும் நகைகளைக் கண்டுபிடிப்பது வரவேற்புக்குரிய ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் பழமையின் சின்னமாக விளங்கும் அவைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் மட்டுமே முன்னோர்கள் எண்ணம் நிறைவேறும்.

புதன், 13 ஜூலை, 2011

அரசு ஒப்பந்தம் பெற இளம்பெண் வினியோகம்...

தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியின் ஒரு ஓரத்தில் இருக்கிறது கண்ணுமாமூடு கிராமம். தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை அருகே இருக்கும் இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சொகுசு மாளிகையில் கடந்த 23ஆம் தேதி அதிரடியாய் நுழைந்த கேரள மாநில காவல்துறை ஊர்திகள். நீண்ட நேரம் நீடித்த விசாரணைக்கு பின்னரே சொகுசு மாளிகையின் உரிமையாளரான ஒப்பந்ததாரர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானது. சிங்கப்பூர் தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணைக்காக கண்ணுமாமூடு கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தனர். நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையில் இருந்து மணிகண்டனை ஈப்பில் ஏற்றி அழைத்துச் சென்ற காவல்துறையினர் அதற்கான காரணங்களை வெளியிட்டபோது கண்ணுமாமூடு கிராம மக்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர். ஏழை மக்களுக்கு உதவுவதாக அதுவரை நடித்து வந்த மணிகண்டன், கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 18வயது இளம்பெண்ணை தனது மாளிகையில் வைத்து சீரழித்து விட்டார் எனத் தெரிந்ததும் மக்கள் ஆவேசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.

ஆவேசத்துடன் கூடிய மக்கள் கூட்டத்தை கண்டதும் சொகுசு மாளிகையை சூழ்ந்திருந்த மணிகண்டனின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மக்கள் மீதும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் கல்வீசி தாக்கல் நடத்தப்பட்டது. இதையும் மீறி செய்தியாளர்கள் படமெடுத்தபோதும், சொகுசு மாளிகையில் இருந்து அனைத்து தடயங்களையும் அழித்திருக்கிறார்கள் மணிகண்டனின் ஆதரவாளர்கள்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பராவூரைச் சேர்ந்த துணைநடிகரான சுதீர் என்பவரது மகள்தான் அந்த இளம்பெண். 12வது படித்து வரும் அந்த பெண்ணை அவரது தந்தையே விலைமாதாக மாற்றிய நிகழ்வு கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இவ்வழக்கில் நடிகர், எர்ணாகுளத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர், தமிழகத்திற்கும் அந்த இளம்பெண் அழைத்து வரப்பட்டு சீரழிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதன் தொடர்ச்சியாகவே மணிகண்டன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வந்து விழுந்த தகவல்கள் பல்வேறு அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழித்துப்போடப்பட்டுள்ளது. காலம் காலமாக கையூட்டு வாங்கிக் கொண்டு அரசுப்பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக புகார் கூறப்படுவதால், பணம் பெறுவதற்கு பதிலாக மாற்றுத் திட்டங்களை வகுத்துள்ளனர் அதிகாரிகள். வீட்டிற்கு தேவையான பொருட்களை பெறுதல், வீட்டு மனைகளாக வாங்கிக் கொள்ளுதல், என பணிகளுக்கு தக்கபடி அதிகாரிகளின் நிபந்தனைகள் விரிகின்றன.

அளவுக்கு அதிகமான பணம், தேவைக்கு அதிகமான பொருட்கள் என வாங்கிக் குவித்துவிட்ட அதிகாரிகள் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளனர். அதுதான் பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கு இளம் பெண்ணை கேட்கும் குரூர அத்தியாயத்தின் தொடக்கம். இந்த கொடுமைக்கு கன்னியாகுமரி ஒப்பந்ததாரர் மணிகண்டனின் கைது நேரடியாக சாட்சியாக மாறியுள்ளது. கேரளாவில் பெற்றோராலேயே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட இளம் பெண்ணை தமிழகம் அழைத்து வந்த மணிகண்டன், தனது தேவையை தீர்த்துக் கொண்டதுடன், பல்வேறு அதிகாரிகளின் ஆசைகளை நிறைவேற்றவும் அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த மணிகண்டன், பணி ஒப்பந்தம் பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் எடுத்து செய்த பணி ஒன்றை எதிர்த்து போராடிய நபர் மர்மமான முறையில் இறந்து போனதையே இதற்கு சாட்சியாக சொல்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்கள்.


ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண ஒப்பந்ததாரராக இருந்த மணிகண்டன், தற்போது நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு மாளிகை, மகிழுந்து, வேறு பல ஊர்திகள் என உல்லாசமாக உலாக வந்ததை சுட்டிக்காட்டும் மக்கள், இவை அனைத்துக்கும் அதிகாரிகளின் ஆசிர்வாதமே முக்கிய காரணம் என்கின்றனர். கேரளாவிலும் தனது தொழிலை விரிவுபடுத்திய மணிகண்டன், சின்னத்திரை தொடர்கள் தயாரிப்புக்கும் பண உதவி செய்து வந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி பல கேரள சின்னத்திரை நடிகைகளையும் தமிழகத்திற்கு அழைத்து வந்தாராம் மணிகண்டன். அப்படி அழைத்து வரப்பட்ட அனைவருமே அதிகாரிகளுக்காகத்தான் என்கின்றனர்.

அதிகாரிகளுக்கு பெண்ணாசை காட்டியே தனது தொழிலை வளர்த்துக் கொண்ட மணிகண்டன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து துறை அலுவலகங்களிலும் நெருக்கமான வட்டத்தை உருவாக்கியுள்ளார். இதற்காக துறை வாரியான பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளை மட்டுமின்றி மாவட்ட அளவில் பொறுப்புகளை கவனிக்கும் அதிகாரிகளையும் தக்கமுறையில் மகிழ்வித்துவந்தாராம் மணிகண்டன். பணிகள் வழங்கும் அதிகாரிகள் மட்டுமல்லாமல் தனது தெரிந்த காவல்துறை அதிகாரிகளுடனும் கேரளத்து இளம் பெண்ணை மணிகண்டன் அனுப்பியுள்ளார். இந்த தைரியத்தில்தான் கேரள காவல்துறையினர் தன்னை கைது செய்தபோது கூட அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். தன்னால் பயனடைந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகளின் மிகப்பெரிய பட்டியலையே கேரள காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் மணிகண்டன். அதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு வீடு, நிலம், போன்றவற்றை வாங்கிக் கொடுத்ததையும் ஒப்புக் கொண்ட மணிகண்டன், நிலப்பிரச்சனை காரணமாக தன்னை மாட்டி விட்டதே கேரள காவல்துறை அதிகாரி டோமின் தங்கச்சரிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரள காவல்துறையினரிடம் மணிகண்டன் அளிக்கும் ஒவ்வொரு வாக்குமூலமும் தமிழகத்தில் சில அதிகாரிகளின் பதவிக்கே ஆபத்தாக முடியும் என்பதால் பலர் கலக்கமடைந்துள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரி ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பல காவல்துறை அதிகாரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மணிகண்டனுக்கு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் அதேநேரத்தில் மணிகண்டனுக்கு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் யார்? யார்? இதுவரை அவருக்கு ஒப்பந்தங்கள் வழங்கிய அரசு அதிகாரிகள் யார்? என ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கன்னியாகுமரியோடு முடிந்துவிடவில்லை இந்த பெண் விவகாரம், இளம்பெண்ணின் தந்தையான சுதீர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்ட மணிகண்டன், அந்த பெண்ணை சென்னை, உதகை, கொடைக்கானல் என பல ஊர்களுக்கும் பல அதிகாரிகளோடு அனுப்பியதும் அம்பலமாகியுள்து. இதனை உண்மையாக்கும் விதத்தில் கோவையைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் கைதாகியுள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பாளையம் வடமதுரையை சேர்ந்த முருகேசன், பெரும் வசதி கொண்டவரல்ல என்பதால், ஏதாவது ஒரு ஒப்பந்ததாரர் மூலமே அவருக்கு கேரள பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு உதவிய ஒப்பந்ததாரர் யார்? உதவிக்கான கைமாறாக முருகேசன் என்னவெல்லாம் செய்து கொடுத்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


கேரள காவல்துறையினரிடம் முருகேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தமிழக அதிகாரிகள் 9 பேர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளதால் மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மணிகண்டன் போன்ற ஒரு சிலர் மட்டுமின்றி தமிழகத்தில் இன்று நடைபெறும் பெரும்பாலான அரசுப் பணிகள் இதுபோன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக தகுதியற்ற ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


இப்படி அற்ப ஆசைக்காக அரசுப் பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படும் அவலம் அம்பலமாகியுள்ளதால், குறுக்கு வழியில் ஒப்பந்தம் பெற்ற மணிகண்டன் போன்ற ஒப்பந்ததாரர்கள் செய்த பணிகளின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலேயே பல பணிகள் பெயரளவில் மட்டுமே நடைபெற்றுள்ளதாக புகார் கூறியுள்ள பொதுமக்கள், இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு அதிகாரிகளை கேரள காவல்துறையினர் கைது செய்தபோதும், இங்குள்ள அதிகாரிகள் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காப்பதும் பொதுமக்களின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்குக்கூட இது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு செயல்படாவிட்டால் முறைகேட்டாளர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும் துணைபோவது போல் ஆகிவிடும் என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


மக்கள் நலனுக்காக அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அதனை செயல்படுத்துவதில் முறைகேடுகளும் மோசடிகளும் தலைவிரித்தாடுவதால் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே போய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் உணர வேண்டியவர்கள் உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.