செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தமிழகம் சந்தித்த தேர்தல்கள்_03

காங்கிரஸ் கட்சியை விரட்டியடித்த தி.மு.க…

1967, பிப்ரவரி 5...
தமிழகத்தின் அரசியல் சரித்திரத்தை புரட்டிபோட்ட அரசியல் சுனாமி தமிழ்நாட்டில் வீசத்தொடங்கிய நாள் இதுதான். இந்தி எதிர்ப்பு போராட்டமாய் தொடங்கி அடங்காத கலவர நெருப்பு...அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு... பெருகிவிட்ட ஊழல்...என தமிழகம் முழுவதும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசிக்கொண்டிருந்தது. இதனை கட்டுப்படுத்தவேண்டிய முதலமைச்சர் பக்தவச்சலம் தலைமையிலான அரசோ தங்கள் அரசை காப்பாற்றிக்கொள்ளவே முடியாத நிலையில் திணறிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் 1967ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5, 18, மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் அரசை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப தி.மு.க.வும் வியூகங்களை வகுத்தன.

மெகா கூட்டணி



சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரசுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் கூட்டணியை அமைத்தார் தி.மு.க.தலைவர் அண்ணா. அதற்காக கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஒரேமேடையில் ஏற்றி பிரம்மாண்ட மாநாட்டை சென்னை விருகம்பாக்கத்தில் அண்ணா நடத்தினார். 1966, டிசம்பர் 29ஆம் தேதிமுதல் 4 நாட்கள் நடைபெற்ற மாபெரும் மாநாட்டின் முதல் நாளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் அண்ணா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மறுநாள் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க. தலைவர் சி.என். அண்ணாதுரை, சுதந்திரா கட்சித்¢ தலைவர் ராஜாஜி, முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், நாம் தமிழர் கட்சித் தலைவர் சி.பா. ஆதித்தனர், தமிழரசு கழகம் தலைவர் ம.பொ.சிவஞானம், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மூக்கையா தேவர் ஆகியோர் ஓரேமேடையில் அமர்ந்திருந்தனர்.
மாநாட்டில் பேசிய ராஜாஜி, ‘ஏதோ மாயம் போல் இந்த மெகா கூட்டணி அமைந்திருக்கிறது’ என்றார். தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து வந்த தான் அதே கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஆச்சர்யமானது என்றும், இது சரித்திரத்தில் இடம்பெறும் என்றும் ராஜாஜி குறிப்பிட்டார்.( அவர் சொன்னதுபோல் தமிழகத்தின் சரித்திரத்தை யார் சொன்னாலும் இந்த கூட்டணி குறித்து சொல்லாமல் விடமுடியாத மாற்றத்தை ஏற்படுத்தியது). காங்கிரஸ் கட்சி என்ற பழம் அழுகிவிட்டதால் துர்நாற்றம் வீசத் தொடங்கிட்டதாக குறிப்பிட்ட அவர் அதனை தமிழகத்தை விட்டு அகற்றுவோம் என்று சூளுரைத்தார். மாநாட்டில் பேசிய காயிதே மில்லத், காங்கிரஸ் எனும் விஷபாம்பின் தோலை உரிக்க வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பேசிய சி.பா. ஆதித்தனார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அதே கருத்தை வலியுறுத்தினர்.

‘சைதாப்பேட்டையில் ரூ.11 லட்சம்’



இம்மாநாட்டில் அண்ணா ஆற்றிய உரை அவரது சிறந்த உரைகளில் ஒன்றாக இன்றும் நினைவு கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் பேசிய அண்ணா, ‘இனத்தையும், மொழியையும் காப்பற்றவே அரசியலில் ஈடுபட்டுள்ளேனே தவிர மந்திரி சபை அமைத்து கருணாநிதிக்கு ஒரு மந்திரி பதவியும், நெடுஞ்செழியனுக்கு ஒரு மந்திரி பதவியும் கொடுப்பதற்காக அல்ல’ என்றார். எப்படியாவது ஆட்சியில் அமர்வது நம் நோக்கமல்ல, தரணியிலே தமிழகம் தலை நிமிர்ந்து வாழவேண்டும் அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது என்றும் அண்ணா கூறினார். அரசியலில் ராஜாஜியை போல் வேறு எந்த தலைவர்களையும் தான் கண்டித்தது இல்லை என்று கூறிய அண்ணா, அவரே திமுக கூட்டணியில் இணைந்திருப்பது விதிவகுத்தது என்றார். காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும்வரை ஓயப்போவதில்லை என்றும் அண்ணா சூளுரைத்தார். மாநாட்டிலேயே (1.1.1967) திமுக வேட்பாளர்களின் பட்டியலையும் அண்ணா வெளியிட்டார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த அண்ணா சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுபவர் ‘பதினோரு லட்சம்’ (கருணாநிதி)என்று படித்ததும் மாநாட்டில் பறந்த விசில் சத்தம் விண்ணைத் தொட்டது. (தேர்தல் நிதி திரட்டுவதற்காக 10 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது கருணாநிதி 11 லட்சம் திரட்டி கொடுத்ததால் அண்ணா அப்படி அழைத்தார்)

படி அரிசி திட்டம்

இத்தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்தி எதிர்ப்பு மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் படி அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அண்ணா அறிவித்தார். மெகா கூட்டணி, கவர்ச்சியான தேர்தல் அறிக்கை என பலமாக களமிறங்கிய திமுக அணி பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்ததை முக்கிய பிரச்சனையாக மக்கள் மத்தியில் வைத்த திமுகவினர் ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு? காமராஜர் அண்ணாச்சி கடலை பருப்பு விலை என்னாச்சு?’ என்று ஊர் ஊராக கோஷமிட்டது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.



திமுகவின் பிரச்சாரத்தினால் அந்த அணி வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். (12.01.1967ஆம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டில் அவருக்கும், எம்.ஆர். ராதாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கோபமடைந்த எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டது தனிக்கதை) இந்த தேர்தலில் சென்னை பரங்கி மலை தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் சுடப்பட்டதால் திமுகவிற்கு அனுதாப அலை பெருகியது. அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்ட அக்கட்சி எம்.ஜி.ஆர். கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை சுவரொட்டிகளாக அச்சடித்து தெருவுக்கு தெரு ஒட்டியது. எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு படமும் திமுக அணிக்கான பலநூறு வாக்குகளாக மாறியது. இப்படி அதிர்ஷ்ட காற்று தொடர்ந்து வீசியதால் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

ஆட்சிக் கட்டிலில் தி.மு.க.



174 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. 137 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற சுதந்திரா கட்சி 20 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 இடங்களையும் கைப்பற்றின. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் அண்ணாதுரை சுமார் 80, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். சைதாப்பேட்டையில் போட்டியிட்ட மு. கருணாநிதி 20,484 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகண்டார். ( கருணாநிதி - 53,401, விநாயகமூர்த்தி(காங்.) - 32,917). நெடுஞ்செழியன் உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் அனைவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்¢ காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தினர். குறிப்பாக தி.மு.க.வின் நட்சத்திர வேட்பாளர் எம்.ஜி.ஆர். பிரச்சாரத்திற்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்தபடியே அபார வெற்றிபெற்று சாதனை படைத்தார். அவருக்கு 54,106 வாக்குகளும், அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதிக்கு 26, 432 வாக்குகளும் கிடைத்தன. தி.மு.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், என்.வி. நடராஜன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

காங்கிரஸ் படுதோல்வி

தி.மு.க.வுக்கு ஆட்டிக்கட்டிலை வழங்கிய 1967ஆம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வியை கொடுத்தது. அக்கட்சியின் தேசிய தலைவர் காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் தோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய தளபதியாக விளங்கிய தி.மு.க.வைச் சேர்ந்த பெ. சீனிவாசனிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோல்வியை தழுவினார்.(சீனிவாசன் - 33,421, காமராஜர் - 32,136). அன்றைய நாள்வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் ராஜரத்தினம் 41,655 வாக்குகள் பெற்ற நிலையில் பக்தவச்சலத்திற்கு 32,729 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஓரேயொரு ஆறுதலாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பூவராகவன் மட்டும் 8,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு 42,230 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் செல்வராஜுக்கு 33,363 வாக்குகளும் கிடைத்தன.
தேர்தலில் படுதோல்வியடைந்தாலும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் காமராஜர். தோல்விக்கு பொறுப்பேற்று அரசியலில் இருந்தே ஒதுங்கிக்கொள்ளவும் காமராஜர் முன்வந்தார். ஆனால் பிரதமர் இந்திரா காந்தி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தேர்தல் தோல்வியால் இழந்த தமிழக ஆட்சிக்கட்டிலை இன்றுவரை மீட்டெடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறிவருகிறது. 1967ஆம் ஆண்டில் தேர்தலில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட சரிவைவிட அடுத்து வந்ததேர்தலில் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சிக்கு பேரிடி காத்திருந்தது...(தொடரும்)