திங்கள், 27 டிசம்பர், 2010

என்ன செய்து கிழித்தாய்...?


இன்று காலை வழக்கம் போல் வீட்டுக் காலண்டரை கிழித்தபோதுதான் தெரிந்தது இந்த வருடத்தில் இன்னும் 5 நாட்கள் மட்டுமே மிச்சமிருப்பது. அட ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிடுச்சா என ஆச்சர்யபட்டபோதுதான் என்னை பார்த்து காலண்டர் கேட்டது (படபடவென பறந்தபடி) “ இந்த ஒரு வருடத்தில் என்ன கிழிச்சிட்ட நீ என்னத்தவிர” . இந்த கேள்விக்கான பதிலை பல மணிநேரம் யோசித்தபோதும் உருப்படியா எதுவும் கிழித்தது போல் தோன்றவில்லை. 360 நாட்களுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாடியபோது என்ன நினைத்தோம்...! அதில் என்னவெல்லாம் செய்து முடித்தோம்...! என்று யோசிக்கிறேன்,யோசிக்கிறேன், யோசிக்கிறேன், இன்னும் யோசிக்கிறேன்... ம்ம்ம்... எதுவும் செய்யல... சரி அடுத்தவருடமாவது இதையெல்லாம் செஞ்சிருவோம்!!!!!!!!!!!!!!!!!!!!

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வரலாற்றுச் சுவடுகளில் வரலாற்று பிழை

“தினத்தந்தியில வந்தா சரியாத்தான் இருக்கும்” இது தமிழ்நாட்டு வாசகர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அப்பேர்பட்ட தினத்தந்தி ஒரு வரலாற்று நூலை வெளியிடுகிறதென்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா என்ன? வளர்ந்துவரும் வாசகன் என்ற அடிப்படையில் தினத்தந்தியின் “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் மீது எனக்கும் இருந்தது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதனை சற்றும் பொய்யாக்காமல் கடந்த 30ம் தேதி (30.11.2010) வெளியிடப்பட்டது “வரலாற்றுச் சுவடுகள்”. சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தினத்தந்தியின் இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி பெற்றுக்கொண்டார்.





இந்த நூலை எப்படியாவது வெளியானவுடன் வாங்கி படித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு 3வது நாளில்தான் புத்தகம் கிடைத்தது. நீண்டகாலமாய் வரலாற்று புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த எனக்கு “வரலாற்றுச் சுவடுகள்” ஒரு புதையல் போலவே தெரிந்தது. புரட்ட புரட்ட புரண்டு கொண்டிருந்த 864 பக்கங்கள், 308 கட்டுரைகள், பக்கத்துக்கு பக்கம் வண்ணப்படங்கள் என வரலாற்று பொக்கிஷம் என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த புத்தகம். எடுத்த எடுப்பிலேயே அட்டை டூ அட்டை படிப்பதையே வழக்கமாக கொண்டதால் (முன், பின் அட்டைகளின் உள் மற்றும் வெளிப்பக்கங்களை முதலில் படித்துவிடுவேன், அதுதான் அட்டை டூ அட்டை) எனக்கு இந்த புத்தகத்தில் ஏதோ ஒன்று குறைவதைப்போல பட்டது. ஒருமுறைக்கு இருமுறை புரட்டிப் பார்த்தபோதுதான் புரிந்தது நூலின் தலைப்புக்கு கீழே இடம்பெறும் நூலாசிரியர் பெயர் இடம் பெறவில்லை என்பது. ஒருவேளை செய்தித்தாளில் வெளிவந்த தொடரின் தொகுப்புதானே என்று நினைக்கத் தோன்றினாலும் அதற்கான குறிப்புகளும் அந்த வரிசையில் இல்லை.(சந்தேகமிருந்தால் புத்தகத்தை வாங்கி பார்க்கவும்) ச்சே... ச்சே... தினத்தந்தி வெளியிட்ட நூலில் இப்படி ஒரு குறையா? இருக்கவே இருக்காது என்ற அதீத நம்பிக்கையில் மறுபடியும் தேடினேன். இம்முறையும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது நூல் வெளியீட்டு விழாவிலும் அதுகுறித்த வார்த்தைகள் ஒலிக்கவேயில்லை. மீண்டும் யோசித்து பார்த்தபோதுதான் புரிந்தது, விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் உள்பட அனைவரும் தினத்தந்தியையும், அதன் அதிபர்களையும் வானளாவ புகழ்ந்தார்களே தவிர, நூலாசிரியர் குறித்து மருந்துக்கூட வாய்திறக்கவில்லை என்ற உண்மை. சரி தினத்தந்தி வெளியிட்ட செய்தியிலாவது அரிய ஆவணங்களை தொகுத்த ஆசிரியரின் பெயரை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து பேப்பரை புரட்டினால் (01.12.2010ஆம் தேதி இதழ்) அங்கும் ஏமாற்றமே. ஆறுமணிக்கு நடைபெற்ற விழாவை 3 மணிமுதலே தொகுத்து வெளியிட்ட தினத்தந்தி வரலாற்றுச் சிறப்பை தனக்கு பெற்றுத்தந்திருக்கும் நூல் ஆசிரியரை ஏனோ மறந்துவிட்டது. என்னடா இது ஒரு சிறந்த நூலை படித்துவிட்டு அதன் ஆசிரியரை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி? என ஆர்வம் உந்த நண்பர்களிடம் வரலாற்றுச் சுவடுகளின் ஆசிரியர் குறித்து விசாரித்தேன். அப்போதுதான், மூத்த பத்திரிக்கையாளர் ஐ. சண்முகநாதன் அவர்கள்தான் இந்த புகழுக்குச் சொந்தக்காரர் என்பது தெரிந்தது. நண்பர்களிடம் எனது ஆர்வத்தை பகிர்ந்து கொண்டபோதுதான் தெரிந்தது சண்முகநாதன் ஐயா எழுதிய “ஒரு தமிழனின் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு” மற்றும் “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு” ஆகிய நூல்களுக்கு கிடைத்த வரவேற்பு. அதனால் அந்த புகழே போதுமென தன்னடக்கத்துடன் இருந்திருக்கலாம் என்றும் நண்பர்கள் வாயிலாக அறிந்தேன். “தன்னடக்கம் பேணுதல் சான்றோர் குணம்” என்றாலும் “உழைத்தவர்களை உயர்த்தி பேசுவதுதானே ஆன்றோர்க்கு அழகு” என்ற கேள்வி மட்டும் ஏனோ எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. விழாவிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு வேண்டுமானால் அவரின் பெருமை தெரியாமல் போயிருக்கலாம் (அல்லது தெரிந்தும் பேசாதிருந்திருக்கலாம்). ஆனால் தனக்கு புகழை தேடித்தந்தவரை தினத்தந்திக்கு தெரியாதா என்று சிலர் கேட்டுவிட்டால்? இது உழைப்புச் சுரண்டல் என்று பேசிவிட்டால்? அது நான் நேசிக்கும் தினத்தந்திக்கு அவப்பெயராகிவிடுமே என்ற அச்சத்தில்தான் இதனை இங்கே பதிவு செய்கிறேன். பாரம்பரியமிக்க தினத்தந்தியின் வரலாற்றில் இத்தகைய தவறுகள் வரலாற்று பிழையாக மாறிவிடும் என்பதை உரியவர்கள் உணரவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

“ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”