திங்கள், 1 ஆகஸ்ட், 2011

குடியால் அழியும் குடும்பங்கள்....

‘குடிக்கப் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவேன்’ என பெற்ற தாயை மிரட்டிய மகனின் வார்த்தைகள் அவனுக்கே எமனாக முடிந்த அவலம் வேலூர் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வேலூர் நைனியப்ப நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். முழுநேர குடிகாரனாக இருந்த வெங்கடேசன் போதைக்கு இடையே அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மருத்துவமனைக்குள்ளேயே போதையில் ஆட்டம்போட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட அவர், குடிக்க பணம் கேட்டு குடும்பத்தினரை கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.

70 வயதான தாய் பூஷணத்திடம் அடிக்கடி போதையில் சண்டையிட்ட வெங்கடேசன், பணம் தராவிட்டால்¢ கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டுபோன பூஷணம் பெற்றமகனையே தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கூலிப்படையை சேர்ந்த 3பேர் அவருக்கு உதவ குடிபோதையில் அட்டகாசம் செய்த மகனை குடிபோதையிலேயே கொலை செய்யத் திட்டம் உருவானது. அதன்படி கூலிப்படையை சேர்ந்த சங்கர், பிரகாஷ், சரத்குமார் ஆகியோர் வெங்கடேசனை பாலாற்று கரைக்கு அழைத்துச் சென்று மதுவை ஊற்றிக்கொடுத்தனர். போதை தலைக்கேறியதும் நினைவிழந்த வெங்கடேசனை அடித்தே கொன்றது கூலிப்படை.

போதையாட்டம் தாங்க முடியாமல் பெற்ற மகனை கொலை செய்துவிட்டாலும் இன்று தனது குடும்பத்தை காப்பாற்ற யாருமே இல்லை என்று கண்ணீர்விட்டு கதறுகிறார் பூஷணம். வெங்கடேசனின் கொலையால் அவரது மனைவியும், 6 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

வேலூர் வெங்கடேசனின் கொலை நிகழ்வை மிஞ்சும் வகையில் சென்னையில் அரங்கேறியுள்ளது மற்றொரு மது அடிமையின்¢ கொடூர மரணம். வடபழனி, வ.உ.சி. நகர் 1வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. ஓரளவு வசதியான வீட்டில் பிறந்த இவர் தனது காதல் மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். உடற்பயிற்சிக்கூடம், கோழிக்கடை என பல்வேறு தொழில் செய்துவந்த பிரசன்னா, குடிபோதைக்கு அடிமையானதும் வாழ்க்கை திசை மாறியது. மதுபோதையில் மாதுக்களையும் பிரசன்னா நாடியதால், குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. உறவினர்களின் ஆலோசனைகளையெல்லாம் கண்டுகொள்ளாத பிரசன்னா, குடிபோதையில் வீட்டிலேயே கண்ட பெண்களுடன் ஆட்டம் போடுவதும், மனைவியை அடித்து சித்ரவதை செய்வதும் தொடர்கதையானது.

குடும்பச் சொத்துக்களை விற்று குடித்துவிட்டு கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஆடிய பிரசன்னாவின் போதை வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் மனைவி உமா மகேஸ்வரி. நண்பர்களுடன் சேர்ந்து தீட்டிய திட்டத்தின்படி அதிகாலையில் பிரசன்னாவின் வீட்டுக்குள் நுழைந்தது கூலிப்படை. போதை மயக்கத்தில் இருந்த பிரச்சன்னாவை வீட்டு வாசலுக்கு தூக்கிவந்த கூலிப்படையினர், அங்கிருந்த மின்கம்பிகளை பிரசன்னா உடலில் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சினர். அப்போதும் உயிர் போகாததால் கழுத்தை நெறித்து முடிக்கப்பட்டது பிரசன்னாவின் கதை.

காவல்துறையிடம் தப்பிக்க கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய உமா மகேஸ்வரி, சிறிதுநேரத்தில் கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டியதாக ஒப்புக்கொண்டார். குடிபோதையில் கணவர் செய்த சித்ரவதைகள் தாங்கமுடியாமல்தான் கொலை செய்ததாக கூறிய அவர், கணவரின் சகிக்க முடியாத போதை அட்டகாசங்களையும் பட்டியலிட்டார். உமா மகேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட, அவரது 2 குழந்தைகளும் ஆதரவன்றி தவிக்கின்றனர்.

பெண்களை அடித்து துன்புறுத்துதல், குழந்தைகள் கண்முன்னே சண்டையிடுதல், குடும்பச் சொத்துக்களை அழித்தல், என போதையில் மயக்கத்தில் தவறு செய்வதோடு குடிகாரர்கள் நின்றுவிடுவதில்லை. தங்களின் போதைக்கு இடையூறாக யார் வந்தாலும் அவர்களை தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள் என்பதை, நட்டநடு சாலையில் பலரின் கண் எதிரே கோவையில் அரங்கேறிய கொலை நிரூபித்துள்ளது.

மது குடிப்பதை தடுத்தால் குழந்தையைக்கூட கொல்லும் கொடூரன்களாக மாறிவிடுகின்றனர் குடிகாரர்கள். இதனை உண்மையாக்கும் விதத்தில் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளது ஒரு சோக நிகழ்வு. சாலைமாமண்டூரை சேர்ந்த தமிழரசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத் சொத்துக்களை விற்கத் தொடங்கியதால் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இருக்கும் சொத்துக்களையாவது காப்பாற்றும் வகையில் எஞ்சிய குடும்பச்சொத்துக்கள் தமிழரசனின் மகன் வெங்கடேசனின் பெயருக்கு மாற்றப்பட்டது. தனது குடிபோதைக்கு தடை ஏற்பட்டதால் போதை வெறிகொண்ட தமிழரசன், தனது 3 சிறு வயது குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தான். இதற்காக சிறுவன் வெங்கடேசன் உள்பட தனது 3 குழந்தைகளுக்கும் இனிப்பில் நஞ்சு கலந்து தமிழரசன் கொடுக்க, கள்ளங்கபடமறியா குழந்தைகளும், தந்தை கொடுத்ததை ஆவலுடன் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் மூவரும் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் அலறியடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் வெங்கடேசன் பரிதாபமாக உயிரைவிட்டான்.

குடிபோதைக்கு இடையூறாக வந்த பிஞ்சு மகனை கொன்ற தமிழரசன் சிறைக்கு சென்றுவிட, அவனது மற்ற இரு குழந்தைகளும், மனைவியும் ஆதரவின்றி தவிக்கின்றனர். இவையெல்லாம் கடந்தவாரத்தில் நிகழ்ந்தவை மட்டுமே எனக்கூறும் உளவியல் ஆய்வாளர்கள், குடிவெறியால் தமிழகம் முழுவதும், இத்தகைய கொலைகள் நடந்துகொண்டே இருப்பதாக வேதனையுடன் கூறுகின்றனர். குடிகாரன் குழந்தையை கொன்றாலும், குடிகாரனை மற்றவர்கள் கொன்றாலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் மொத்தமும் தெருவில் நிற்கும் அவலம் மட்டுமே மிச்சம் என்பதும் உளவியல் ஆய்வாளர்களின் கருத்து.

இந்த உண்மைகளையெல்லாம் உணர்ந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற குரல் உரக்க ஒலித்தாலும் அதனை கண்டுகொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு மதுக்கடை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், அதற்கு காரணம் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் என்பதை என்றைக்கும் சொல்வதில்லை. குடிபோதை தகராறுகளால் ஒருபுறம் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளையில், குடித்துவிட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ எகிறிக்கொண்டே செல்கிறது. மதுக்கடைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டை என்பதை பலமுறை சுட்டிக்காட்டினாலும் அதனை கண்டுகொள்ள யாரும் தயாராக இல்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக கூறும் ஆட்சியாளர்கள், எத்தனை ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் கூலிப்பணத்தை அரசு மதுக்கடையிலேயே கொடுத்துவிட்டு திரும்புகிறார்கள் என்பதை என்றாவது எண்ணியதுண்டா?

குற்றத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கு துணைபோவது போன்றதே என்கிறது இந்தியத் தண்டனைச் சட்டம். அப்படியானால் ஏழை மக்களின் பணம் அரசு மதுக்கடை என்ற பெயரில் பறிக்கப்படுவதற்கு அரசு துணைபோவது குற்றம் ஆகாதா? எத்தனை பேர் செத்தால் என்ன? எத்தனை குடும்பங்கள் அழிந்தால் என்ன? எங்களுக்குத் தேவை பணம் மட்டுமே என ஆட்சியாளர்கள் செயல்பட்டால், பாதிக்கப்பட்டவர்களே பதிலடி கொடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக