திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தீராத வலி...மாறாத சோகம்...



சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாது சுடும் மணலில் படுத்து சிரிப்பு... பெண்ணின் உடையணிந்தபடி சுற்றித்திரியும் இளைஞர்... சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டு உலா வருவோர்... நட்ட நடு சாலையில் குட்டிக்கரணம் போடும் மகனை பரிதாபத்துடன் வேடிக்கை பார்க்கும் தாய்.. என வினோதமான உலகமாக காட்சியளிக்கிறது ஏர்வாடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் ஏர்வாடியில் பெரிய மனநல மருத்துவமனையோ, அரசு மனநல காப்பகமோ இல்லை. ஆனாலும் மனநோயாளிகள் வருகை அதிகரிப்பதற்கு காரணம் இங்குள்ள தர்காதான்.

இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாக(?) மாறிவிட்டது ஏர்வாடி. குடும்பத்தினர் இங்கு விட்டுச்சென்றதால் கிழிந்த உடையுடன் பரிதாபமாக உலாவரும் மனநோயாளிகள், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொண்டு ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க விருதுநகரைச் சேர்ந்த பச்சம்மாளின் நிலையோ பரிதாபம். மனநலம் பாதிக்கப்பட்ட தனது 20 வயது மகனை மருத்துவமனை, மருத்துவமனையாக அழைத்துச்சென்ற இவர் இறுதியில் வந்து சேர்ந்த இடம் ஏர்வாடி. மருத்துவமனைகளில் பணம் மட்டுமே செலவானதாக கூறும் பச்சம்மாள், இதற்குமேல் செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் இங்கு வந்ததாக கூறுகிறார். பச்சம்மாளைப்போல் எத்தனையோ பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆண்டுக்கணக்கில் ஏர்வாடியில் தங்கியிருக்கின்றனர். தர்காவில் இடம் கிடைக்காத பலர் தெருவோர மரத்தடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கட்டிவைத்தும் பாதுகாக்கின்றனர்.



இவ்வளவுபேர் வரும் அளவுக்கு தர்காவில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்தால் மிஞ்சுவது வியப்பு மட்டுமே. அதற்கு காரணம் ஏர்வாடியில் நடைபெறுவது சிகிச்சை அல்ல. வழிபாடு மட்டுமே... இதற்காகவே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தாலும் அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. கடந்த 2001ஆம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்தனர்.



இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டிவைக்கத் தடை விதித்ததுடன், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய ஆணையிட்டது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மனநல காப்பகத்தை அமைக்கவும் ஆணையிட்டது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தபின்னும் உச்சநீதிமன்ற ஆணை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஏர்வாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது மருத்துவக் குழுவினர் வந்து சென்றனர். ஆனால் நாளடைவில் அதுவும் குறைந்துவிட்டது. மாதம் 4 ஆயிரம் நோயாளிகள் வரும் நிலையில் 2 மனநல மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இவ்வளவு குறைபாடுகள் உள்ளபோதும், சிகிச்சைகள் கூட அளிக்கப்படாத ஏர்வாடி போன்ற இடங்களை மக்கள் நாடுவது ஏன் என்று விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் பரிதாபத்தின் உச்சம். ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அவர்களை குணப்படுத்துவற்கு மருந்து கொடுப்பதைவிட, அவர்களை அரை மயக்கம் அல்லது, தூக்கத்தில் வைத்திருப்பதற்கே அதிக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் அமைதியான நிலைக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறினாலும், நோயின் தாக்கம் தூங்கி விடுவதில்லை. விளைவு மனநோயின் உச்சத்திற்கே சென்றுவிடுகின்றனர் பாதிக்கப்பட்டோர். அதன்பின்னர் சிகிச்சை அளிப்பதும் கடினமாகிவிடுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் நோய் குணமாகாத நிலையில், வேறு போக்கிடம் இல்லாததால் ஏர்வாடியில் கொண்டு விடப்படும் மனநோயாளிகள் கடவுளின் கருணையை எதிர்பார்த்தபடியே காலத்தை ஓட்டுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஒரு சிலர் சுயநினைவை பெற்றாலும் வீட்டுக்குச் செல்லும்படி கடவுள் கனவில் சொல்லுவார் என காத்துக்கிடக்கும் பரிதாப நிலையும் காணப்படுகிறது.

ஒரு சிலர் நோய் குணமடைந்து சென்றாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் தயங்குவதால் அவர்கள், அதே அழுக்கு உடையுடன் ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர். ஆண்டுக்கணக்கில் இங்கே இவர்கள் சுற்றிக்கொண்டிருக்க அரசு மருத்துவமனைகளோ மனநலம் பாதிக்கப் பட்டவர்களை குறிப்பிட்ட காலத்தில் வெளியேற்றி விடுகின்றன. இடம் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்திய அளவில் 40 ஆயிரம் பேருக்கு ஒரு மன நல மருத்துவமனை மட்டுமே இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள் 800 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் 400 மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்களில் 300 மருத்துவர்கள் சென்னையில் மட்டுமே பணிபுரிவதால் மற்ற மாவட்டங்களில் உள்ள மனநோயாளிகளின் நிலையோ சோகம்தான்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. தனியார் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதற்கே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி இருப்பதால், மனநலம் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சிகிச்சை என்பதே எட்டாக்கனி ஆகிவிடுகிறது.


தனியார் நடத்தும் மனநல காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சையோ, பராமரிப்போ அளிக்கப்படுவதில்லை. பணத்துக்காக ஆடு மாடுகளை போல் நோயாளிகளை நடத்தும் சில காப்பக நிர்வாகிகள் போதிய உணவுகூட தரமறுப்பதால், நோயாளிகளின் பாதிப்பு அதிகமாகி, அவர்களின் ஆவேச செயல்களும் அதிகமாகிவிடுகின்றன. இதுபோன்ற நிலையை மாற்ற அனைத்து மாவட்டக்களிலும் அரசு மனநல காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 கோடி பேர் ஏதாவது ஒரு வகையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தேவைக்கேற்ப மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நிறைவேறாத ஆசை, மனஅழுத்தம், மன உளைச்சல் போன்றவை அதிகரித்து வருவதால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் மனநோய்க்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரவின்றி விட்டுச்செல்லும் மக்களின் மனநிலை மாறுவது மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக