ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வணிகமயமாக்கப்படும் தாய்மை...



கையில் குழந்தையுடன் கண்ணீர்விட்டு கதறியபடி கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ராஜேஸ்வரி. வாடகைத்தாயாக இருந்ததற்கு பணம் தராமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மோசடி செய்துவிட்டதாக புகார் மனு ஒன்றையும் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் அளித்தார். தான் ஏமாந்த கதையையும் கண்ணீரோடு விவரித்தார் ராஜேஸ்வரி.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவக்குமார் என்பவரின் மனைவிதான் இந்த ராஜேஸ்வரி. குடும்ப வறுமையால் அடுத்தவேளை உணவுக்கே வழியின்றி வாடிய இருவரும் பிழைப்புத்தேடி கோவை மாவட்டம் சூலூரில் குடியேறியுள்ளனர். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இருவரும் கூலி வேலை செய்து நாட்களை கழித்து வந்தனர். இந்த நிலையில்தான் ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன்பு அந்த தம்பதியின் கண்ணில் பட்டது ‘வாடகைத்தாய் தேவை’ என்ற விளம்பரம். வறுமையை போக்க வழிதெரியாத சூழ்நிலையில் தனியார் மருத்துவமனை சார்பில் நாளிதழில் வெளியாகி இருந்த அந்த விளம்பரம் ஆபத்பாண்டவனாய் தெரிய உடனடியாக மருத்துவமனையை தொடர்புகொண்டார் ராஜேஸ்வரி.

மருத்துவமனைக்கு அழைத்து பேசிய நிர்வாகம், வாடகைத்தாயாக இருக்க ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், மாதம் 12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டது. தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் உரியமுறையில் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், மருத்துவமுறைப்படி வாடகைத்தாயாக மாறினார் ராஜேஸ்வரி. ஆனால் 3 மாதங்களிலேயே தனது போக்கை மாற்றிக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது. குழந்தைகேட்டு பணம் கொடுத்த பெற்றோர், தொடர்ந்து பணம் செலுத்ததால் மேல்சிகிச்சை அளிக்கமுடியாது எனக்கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, சிகிச்சை அளிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால், நள்ளிரவில் ஈவு, இரக்கமின்றி மருத்துவமனையில் இருந்து அவரை வெளியேற்றியது நிர்வாகம்.

தயவு தாட்சண்யம் இன்றி மருத்துவமனை நிர்வாகத்தால் விரட்டபட்டபோதும் சொந்த செலவில் 10 மாதம் வரை சிகிச்சை பெற்று கடந்த மாதம் 11ஆம் தேதி குழந்தையை பெற்றெடுத்தார் ராஜேஸ்வரி. அடுத்தவர்களுக்காக பெற்றுக்கொண்ட குழந்தையை என்னசெய்வதென்று தெரியாத அவர், வேறுவழியின்றி காவல்துறை உதவியை நாடினார். தன்னை ஏமாற்றிய மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தரும்படி காவல்நிலையத்தில் புகார்¢ அளித்தார் ராஜேஸ்வரி. முதலில் விசாரிப்பதாக உறுதியளித்த காவல்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனையின் பெயரைக்கேட்டதும் யோசிக்கத் தொடங்கினர். ஏனென்றால், ராஜேஸ்வரி வாடகைத்தாய் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும், கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு புகார்களையும் நடுநிலையோடு விசாரிக்க வேண்டிய காவல்துறையினர், அதனை செய்யத் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

காவல்துறையினர் மூலம் மிரட்டுவதாக கூறப்படும் புகாரை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ராஜேஸ்வரிதான் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அவர், நாட்கள் செல்லச்செல்ல கூடுதல் பணம் கேட்டு நச்சரித்ததாக குற்றம் சாட்டியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணம்கொடுத்தால் மட்டுமே குழந்தையை ஒப்படைக்கமுடியும் என தனிநபர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருதரப்பு புகார்களிலும் பணம் மட்டுமே முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது தெரியவந்தது. மேலும் போதிய சான்றுகளை கொடுக்க ராஜேஸ்வரி தரப்போ, மருத்துவமனை நிர்வாகமோ முன்வராததால் இருதரப்பும் உள்நோக்கத்துடன் செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி வழக்கை முடித்துக்கொண்டது காவல்துறை. இதன்மூலம் கோவையை உலுக்கிய வாடகைத்தாய் சர்ச்சை ஓய்ந்ததாலும், வாடகைத்தாய் என்ற ஆக்கப்பூர்வமான அறிவியல் வாய்ப்பு பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

குழந்தைப்பெற வழியே இல்லாத தம்பதிகள் மற்றொருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாடகைத்தாய் முறை சிறிதும் வணிகநோக்கத்துடன் நடைபெறக்கூடாது என்கிறது சட்டம். ஆனால் கோவை நிகழ்வு முற்றிலும் வணிக நோக்கத்திற்காக நடந்துள்ளது. கோவையில் மட்டுமல்ல இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது வாடகைத்தாய் வணிகம். வாடகைத்தாய் குறித்து தனியார் மருத்துவமனைகள் எவ்வித விளம்பரமும் செய்யக்கூடாது என சட்டவிதிகள் இருந்தாலும், அதனை சிறிதும் மதிக்காத மருத்துவமனைகள், இதுகுறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றன. அதனை பார்த்து பணத்துக்காக வரும் ஏழைப் பெண்களை மூளைச்சலவை செய்து குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் மருத்துவமனை நிர்வாகம், குழந்தை கேட்டு வரும் தம்பதிகளிடம் முடிந்தவரை பணம் கறந்து விடுகின்றனர். குழந்தை பெற்றுத்தரும் பெண்ணுக்கு 10 மாதங்களும் உரிய சிகிச்சைஅளிப்பதுடன், எதிர்காலத்தில் குழந்தை தொடர்பான எவ்வித சர்ச்சையும் ஏற்படாதவகையில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என விதிகள் கூறினாலும், பல மருத்துவமனைகள் இதனை பின்பற்றுவதில்லை என்கின்றனர் மருத்துவத்துறை வல்லுனர்கள்.

குழந்தை பெறும் எந்திரமாக ஏழைப் பெண்ணையும், பணம் தரும் எந்திரமாக குழந்தை வேண்டுவோரையும் மருத்துவமனை நிர்வாகங்கள் கருதுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இருதரப்பினரையும் கடைசிவரை நேரடியாக சந்திக்க அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல லட்சம் ரூபாய் லாபம் பார்க்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.

மருத்துவமனை நிர்வாகத்திற்கு சிறிதும் சளைக்காதவகையில் ஒருசில வாடகைத்தாய்களும் பணம்பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. முதலில் குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ளும் இவர்கள் கர்ப்பமான பின்னர் கூடுதல் தொகை கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்வதாகக்கூறி களத்தில் இறங்கும் தனி நபர்கள் சிலர் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி, இதனை லாபம் தரும் தொழிலாகவே மாற்றிவிடுகின்றனர்.

இரண்டு தரப்பாலும், கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனை, முடிந்தவரை பணம் பறிக்கும் வாடகைத்தாய் தரப்பினர் என கீழ்த்தரமான தொழிலாகிவிட்ட ‘வாடகைத்தாய்’ முறையால் பாதிக்கப்படுவது அவர்களால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகள்தான். இத்தகைய சர்ச்சைகள் ஓயும்வரை குழந்தைகள் வேண்டா வெறுப்பாகவே வளர்க்கப்படுவதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்குவராமல் குழந்தைகள் அனாதைகளாக விடப்படும் ஆபத்தும் உள்ளது.

வாடகைத்தாய் முறைக்கென சில பொது விதிமுறைகள் இருந்தாலும், முறைகேடு செய்பவர்களை தண்டிக்க கடுமையான விதிமுறைகள் இல்லை. இதனால் தாய்மையின் பெயரில் நடைபெறும் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய அவலங்களை ஒழிக்க முடியும் என்கின்றனர்.

முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க வாடகைத்தாய் முறையையே தவிர்ப்பது நல்லது என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்து. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் செயற்கை கருத்தரித்தல், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற வழிகளில் குழந்தை பெற வாய்ப்பிருப்பதாக கூறும் மருத்துவர்கள், கடைசி முயற்சியாக மட்டுமே வாடகைத்தாய் முறையை நாடவேண்டும் என்கின்றனர். அதற்கேற்ப குழந்தையில்லா தம்பதிகளின் மனநிலையைப் பக்குவப்படுத்த வேண்டியதும் மருத்துவமனையின் கடமை என வலியுறுத்தப்படுகிறது.

மக்களின் மனநிலை மாறினாலும், மருத்துவ உலகின் மகத்தான சாதனைகளில் ஒன்றான வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலோனோர் கடைசி கட்டத்தில் மட்டும் இந்தமுறை நாடுகிறார்கள் என்பதும் அவர்களது கருத்து. வேறு வழியே இல்லாதநிலையில் வாடகைத்தாய் முறையை நாடும்போது, அதுவும் மோசடியானால் அவர்களின் ஏமாற்றத்தை ஈடுசெய்வது கடினம். எனவே, கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனிநபர்களின் பேராசையால் தாய்மையின் புனிதத்தன்மை கெட்டுவிடாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.