திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தீராத வலி...மாறாத சோகம்...



சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாது சுடும் மணலில் படுத்து சிரிப்பு... பெண்ணின் உடையணிந்தபடி சுற்றித்திரியும் இளைஞர்... சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டு உலா வருவோர்... நட்ட நடு சாலையில் குட்டிக்கரணம் போடும் மகனை பரிதாபத்துடன் வேடிக்கை பார்க்கும் தாய்.. என வினோதமான உலகமாக காட்சியளிக்கிறது ஏர்வாடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் ஏர்வாடியில் பெரிய மனநல மருத்துவமனையோ, அரசு மனநல காப்பகமோ இல்லை. ஆனாலும் மனநோயாளிகள் வருகை அதிகரிப்பதற்கு காரணம் இங்குள்ள தர்காதான்.

இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாக(?) மாறிவிட்டது ஏர்வாடி. குடும்பத்தினர் இங்கு விட்டுச்சென்றதால் கிழிந்த உடையுடன் பரிதாபமாக உலாவரும் மனநோயாளிகள், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொண்டு ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க விருதுநகரைச் சேர்ந்த பச்சம்மாளின் நிலையோ பரிதாபம். மனநலம் பாதிக்கப்பட்ட தனது 20 வயது மகனை மருத்துவமனை, மருத்துவமனையாக அழைத்துச்சென்ற இவர் இறுதியில் வந்து சேர்ந்த இடம் ஏர்வாடி. மருத்துவமனைகளில் பணம் மட்டுமே செலவானதாக கூறும் பச்சம்மாள், இதற்குமேல் செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் இங்கு வந்ததாக கூறுகிறார். பச்சம்மாளைப்போல் எத்தனையோ பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆண்டுக்கணக்கில் ஏர்வாடியில் தங்கியிருக்கின்றனர். தர்காவில் இடம் கிடைக்காத பலர் தெருவோர மரத்தடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கட்டிவைத்தும் பாதுகாக்கின்றனர்.



இவ்வளவுபேர் வரும் அளவுக்கு தர்காவில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்தால் மிஞ்சுவது வியப்பு மட்டுமே. அதற்கு காரணம் ஏர்வாடியில் நடைபெறுவது சிகிச்சை அல்ல. வழிபாடு மட்டுமே... இதற்காகவே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தாலும் அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. கடந்த 2001ஆம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்தனர்.



இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டிவைக்கத் தடை விதித்ததுடன், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய ஆணையிட்டது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மனநல காப்பகத்தை அமைக்கவும் ஆணையிட்டது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தபின்னும் உச்சநீதிமன்ற ஆணை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஏர்வாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது மருத்துவக் குழுவினர் வந்து சென்றனர். ஆனால் நாளடைவில் அதுவும் குறைந்துவிட்டது. மாதம் 4 ஆயிரம் நோயாளிகள் வரும் நிலையில் 2 மனநல மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இவ்வளவு குறைபாடுகள் உள்ளபோதும், சிகிச்சைகள் கூட அளிக்கப்படாத ஏர்வாடி போன்ற இடங்களை மக்கள் நாடுவது ஏன் என்று விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் பரிதாபத்தின் உச்சம். ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அவர்களை குணப்படுத்துவற்கு மருந்து கொடுப்பதைவிட, அவர்களை அரை மயக்கம் அல்லது, தூக்கத்தில் வைத்திருப்பதற்கே அதிக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் அமைதியான நிலைக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறினாலும், நோயின் தாக்கம் தூங்கி விடுவதில்லை. விளைவு மனநோயின் உச்சத்திற்கே சென்றுவிடுகின்றனர் பாதிக்கப்பட்டோர். அதன்பின்னர் சிகிச்சை அளிப்பதும் கடினமாகிவிடுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் நோய் குணமாகாத நிலையில், வேறு போக்கிடம் இல்லாததால் ஏர்வாடியில் கொண்டு விடப்படும் மனநோயாளிகள் கடவுளின் கருணையை எதிர்பார்த்தபடியே காலத்தை ஓட்டுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஒரு சிலர் சுயநினைவை பெற்றாலும் வீட்டுக்குச் செல்லும்படி கடவுள் கனவில் சொல்லுவார் என காத்துக்கிடக்கும் பரிதாப நிலையும் காணப்படுகிறது.

ஒரு சிலர் நோய் குணமடைந்து சென்றாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் தயங்குவதால் அவர்கள், அதே அழுக்கு உடையுடன் ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர். ஆண்டுக்கணக்கில் இங்கே இவர்கள் சுற்றிக்கொண்டிருக்க அரசு மருத்துவமனைகளோ மனநலம் பாதிக்கப் பட்டவர்களை குறிப்பிட்ட காலத்தில் வெளியேற்றி விடுகின்றன. இடம் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்திய அளவில் 40 ஆயிரம் பேருக்கு ஒரு மன நல மருத்துவமனை மட்டுமே இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள் 800 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் 400 மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்களில் 300 மருத்துவர்கள் சென்னையில் மட்டுமே பணிபுரிவதால் மற்ற மாவட்டங்களில் உள்ள மனநோயாளிகளின் நிலையோ சோகம்தான்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. தனியார் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதற்கே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி இருப்பதால், மனநலம் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சிகிச்சை என்பதே எட்டாக்கனி ஆகிவிடுகிறது.


தனியார் நடத்தும் மனநல காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சையோ, பராமரிப்போ அளிக்கப்படுவதில்லை. பணத்துக்காக ஆடு மாடுகளை போல் நோயாளிகளை நடத்தும் சில காப்பக நிர்வாகிகள் போதிய உணவுகூட தரமறுப்பதால், நோயாளிகளின் பாதிப்பு அதிகமாகி, அவர்களின் ஆவேச செயல்களும் அதிகமாகிவிடுகின்றன. இதுபோன்ற நிலையை மாற்ற அனைத்து மாவட்டக்களிலும் அரசு மனநல காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 கோடி பேர் ஏதாவது ஒரு வகையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தேவைக்கேற்ப மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நிறைவேறாத ஆசை, மனஅழுத்தம், மன உளைச்சல் போன்றவை அதிகரித்து வருவதால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் மனநோய்க்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரவின்றி விட்டுச்செல்லும் மக்களின் மனநிலை மாறுவது மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சபல பெண்களும், ரவுடிக்கும்பலும்...

ஆன்மீக மணம் கமழும் பக்தி பரவசமான திருவண்ணாமலை நகரம் இப்போது போக்கிலிகளின் அட்டகாசங்களால் பீதியில் உறைந்து போய் கிடக்கிறது. இளம் பெண்களையும், குழந்தைகளையும் கடத்திச் செல்லும் கூலிப்படை கும்பலால் பெற்றோர்களும், உற்றார்களும் மிரண்டு போய் நிற்கிறார்கள்.

‘தனது இளம் வயது பேத்தியை திரும்ப ஒப்படைக்க இரண்டரை கிரவுண்ட் இடத்தை எழுதித் தரவேண்டும்’ என்ற போக்கிலி கும்பலின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்து போயுள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சரோஜா.

அங்குள்ள மண்ணடித் தெருவில் வசித்துவரும் சரோஜாவின் மகள் கவுரி. திருமணமாகி 3 பெண்பிள்ளைகளுக்கு தாயான கவுரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்கிலி ஒருவருடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை மயக்கி அழைத்துச் சென்ற போக்கிலி ராஜேஷ் என்பவர், கவுரி குடும்பத்திற்கு சொந்தமான 25 பவுன் தங்க நகைகள், மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்தோடு நின்றுவிடாத அவர்கள் கவுரியின் 3 மகள்களையும் தங்களுடன் அழைத்துச்சென்றுவிட்டனர்.

அழைத்துச்செல்லப்பட்ட 3 பெண்பிள்ளைகள் போக்கிலி கும்பலிடம் சிக்கி சீரழிவதை தடுப்பதற்காக அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் படி கவுரி குடும்பத்தினர் கேட்டுள்ளனர். குறைந்த பட்சம் நந்தினி என்ற 15வயது பெண்ணை மட்டுமாவது விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த போக்கிலி கும்பல், நகரின் முக்கிய பகுதியில் உள்ள கவுரி குடும்பத்திற்கு சொந்தமான இரண்டரை கிரவுண்ட் நிலத்தை எழுதிக்கொடுத்தால் மட்டுமே பெண்ணை ஒப்படைக்க முடியும் என மிரட்டியுள்ளனர்.

போக்கிலிகளின் மிரட்டலால் பயந்துபோன கவுரியின் கணவர் ஊரைவிட்டே ஓடிவிட, உறவினர்கள் மட்டும் தைரியமாக பெண்ணை மீட்க போராடினர். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததெலலாம் அடி - உதை மட்டுமே. கொலை செய்துவிடுவதாகவும் போக்கிலிகள் மிரட்டியதால் உயிர்பயத்தில் காவல்துறையின் உதவியை நாடினார் கவுரியின் தாயார் சரோஜா. தனது பேத்தியை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு திருவண்ணாமலை நகர காவல்நிலையம் சென்றவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் பேசிய விதம் பேரிடியாய் இறங்கியது. புகாருக்குள்ளானவர்களை அழைத்து விசாரிக்கக்கூட முன்வராத காவல்துறை அதிகாரிகள், போக்கிலிகளுக்கு ஆதரவாக சமாதானம் செய்து வைப்பதிலேயே முனைப்பு காட்டினர்.

இளம்பெண்ணை மீட்கப்போராடும் சரோஜாவுக்கு மட்டுமல்ல. தனது 2 வயது மகனை மீட்க போராடும் அரசு ஊழியரான சங்கருக்கும் இதேநிலைதான். 4 மாதங்களுக்கு முன்பு நான்கரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகைகளுடன், மனைவி நித்யா மற்றும் 2 மகன்களை போக்கிலிக்கும்பல் அழைத்துச் சென்றுவிட, 2 வயது மகனை மட்டுமாவது மீட்டுவிட துடிக்கிறார் சங்கர். மகனை ஒப்படைக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் புல்லட் சிவா என்ற போக்கிலி, தரமறுத்தவர்களை அடியாட்கள் மூலம் அடித்து விரட்டியுள்ளார்.

வேறு வழியே இல்லாமல் காவல் நிலையத்தை நாடிய சங்கருக்கு அசிங்கமான அர்ச்சனைகள் மட்டுமே மிஞ்சியது. இவர்கள் மட்டுமல்ல சத்யா, பரிமளா என பணம் மற்றும் சொத்துக்காக போக்கிலிகளால் அழைத்துச்செல்லப்பட்ட பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவர்களில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. போக்கிலி கும்பலுடன் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ள மறைமுக ஒப்பந்தமே இதற்கு காரணம் என கண்ணீருடன் கூறுகின்றனர்.

காவல்துறையினரின் ஆசியுடன் புல்லட் சிவா தலைமையிலான போக்கிலி கும்பல் செய்யும் அட்டுழியங்களை பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிட...! ஒவ்வொன்றும் அசிங்கத்தின் உச்சகட்டம். கவர்ச்சியான உடையணிந்து, உயர்ரக இருசக்கர ஊர்திகளில் உலா வரும் இந்த கும்பல், வசதியான குடும்பப்பெண்களை மயக்குவதையே வேலையாக செய்கின்றனர். அவர்களில் பெரிய அளவில் பின்புலம் இல்லாத பெண்களை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்செல்லும் போக்கிலிகள், பெண்களின் வீட்டிலிருக்கும் நகை, பணத்தை பறித்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழத்தொடங்குகின்றனர். இதனையே தொடர் தொழிலாக செய்யும் போக்கிலிகள், அடுத்த பெண் கிடைத்ததும் முந்தைய பெண்களை அடித்து துரத்திவிடுகின்றனர்.

பெண்களை ஏமாற்றுதல், தட்டிக்கேட்பவர்களை அடித்து உதைத்தல் என போக்கிலி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்த புகார்களை பதிவு செய்யவே மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து செய்வதன் மூலம் காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, வழிப்பறி, கொள்ளை என சிவா தலைமயிலான போக்கிலி கும்பல் மீது கூறப்படும் அனைத்து புகார்களும் கிடப்பில் போடப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

காவல்துறையின் ஒத்துழைப்புடன், பல போக்கிலி கும்பல்களின் ஆதரவும் இருப்பதால் இந்த கும்பலின் அட்டூழியம் எல்லை மீறிச்செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இதனால் பல குழந்தைகள் தாயை இழந்து தவிக்கும் அவலம் அரங்கேறுகிறது. அற்ப மகிழ்ச்சிக்காக சில குடும்பப் பெண்களும் போக்கிலிகளுக்கு துணைபோவதால் அவர்களது குடும்பமே அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போக்கிலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமே இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியும் எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏலச்சீட்டு மோசடி, நிதிநிறுவன மோசடி போல இதுவும் தொடர்கதையாகிவிடும் என எச்சரிக்கின்றனர்.

போக்கிலிகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டும் இருப்பதே இந்த கும்பலின் அத்துமீறல்களுக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில் சட்டத்தை காக்கவேண்டியவர்கள் அதனை மீறும் போக்கிலிகளுக்கு துணைபோவதை தடுக்காதவரை எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. எது எதுக்கோ தனிப்படை அமைக்கும் காவல்துறையினர் போக்கிலிகளை ஒழிக்க தனிப்படை அமைக்க முன்வராதது ஏன்? அவர்களால் வரும் வருமானம் குறைந்துவிடும் என்பதற்காகவா? அல்லது அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என்பதாலா? என அடுக்கடுக்காய் எழுகின்றன கேள்விகள்.

போக்கிலிகள் தமிழகத்தை விட்டே விரட்டப்படுவார்கள் என பதவியேற்ற நாளிலேயே சூளுரைத்தார் முதலமைச்சர். ஆனால் வேலியும், ஆடும் சேர்ந்து பயிரை மேய்வதுபோல் காவல்துறையினரும், போக்கிலிகளும் சேர்ந்து அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அத்துமீறும் போக்கிலிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், அவர்களுக்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருவண்ணாமலை மக்களின் எதிர்பார்ப்பு. நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

குடியால் அழியும் குடும்பங்கள்....

‘குடிக்கப் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவேன்’ என பெற்ற தாயை மிரட்டிய மகனின் வார்த்தைகள் அவனுக்கே எமனாக முடிந்த அவலம் வேலூர் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வேலூர் நைனியப்ப நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். முழுநேர குடிகாரனாக இருந்த வெங்கடேசன் போதைக்கு இடையே அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மருத்துவமனைக்குள்ளேயே போதையில் ஆட்டம்போட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட அவர், குடிக்க பணம் கேட்டு குடும்பத்தினரை கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.

70 வயதான தாய் பூஷணத்திடம் அடிக்கடி போதையில் சண்டையிட்ட வெங்கடேசன், பணம் தராவிட்டால்¢ கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டுபோன பூஷணம் பெற்றமகனையே தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கூலிப்படையை சேர்ந்த 3பேர் அவருக்கு உதவ குடிபோதையில் அட்டகாசம் செய்த மகனை குடிபோதையிலேயே கொலை செய்யத் திட்டம் உருவானது. அதன்படி கூலிப்படையை சேர்ந்த சங்கர், பிரகாஷ், சரத்குமார் ஆகியோர் வெங்கடேசனை பாலாற்று கரைக்கு அழைத்துச் சென்று மதுவை ஊற்றிக்கொடுத்தனர். போதை தலைக்கேறியதும் நினைவிழந்த வெங்கடேசனை அடித்தே கொன்றது கூலிப்படை.

போதையாட்டம் தாங்க முடியாமல் பெற்ற மகனை கொலை செய்துவிட்டாலும் இன்று தனது குடும்பத்தை காப்பாற்ற யாருமே இல்லை என்று கண்ணீர்விட்டு கதறுகிறார் பூஷணம். வெங்கடேசனின் கொலையால் அவரது மனைவியும், 6 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

வேலூர் வெங்கடேசனின் கொலை நிகழ்வை மிஞ்சும் வகையில் சென்னையில் அரங்கேறியுள்ளது மற்றொரு மது அடிமையின்¢ கொடூர மரணம். வடபழனி, வ.உ.சி. நகர் 1வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. ஓரளவு வசதியான வீட்டில் பிறந்த இவர் தனது காதல் மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். உடற்பயிற்சிக்கூடம், கோழிக்கடை என பல்வேறு தொழில் செய்துவந்த பிரசன்னா, குடிபோதைக்கு அடிமையானதும் வாழ்க்கை திசை மாறியது. மதுபோதையில் மாதுக்களையும் பிரசன்னா நாடியதால், குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. உறவினர்களின் ஆலோசனைகளையெல்லாம் கண்டுகொள்ளாத பிரசன்னா, குடிபோதையில் வீட்டிலேயே கண்ட பெண்களுடன் ஆட்டம் போடுவதும், மனைவியை அடித்து சித்ரவதை செய்வதும் தொடர்கதையானது.

குடும்பச் சொத்துக்களை விற்று குடித்துவிட்டு கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஆடிய பிரசன்னாவின் போதை வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் மனைவி உமா மகேஸ்வரி. நண்பர்களுடன் சேர்ந்து தீட்டிய திட்டத்தின்படி அதிகாலையில் பிரசன்னாவின் வீட்டுக்குள் நுழைந்தது கூலிப்படை. போதை மயக்கத்தில் இருந்த பிரச்சன்னாவை வீட்டு வாசலுக்கு தூக்கிவந்த கூலிப்படையினர், அங்கிருந்த மின்கம்பிகளை பிரசன்னா உடலில் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சினர். அப்போதும் உயிர் போகாததால் கழுத்தை நெறித்து முடிக்கப்பட்டது பிரசன்னாவின் கதை.

காவல்துறையிடம் தப்பிக்க கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய உமா மகேஸ்வரி, சிறிதுநேரத்தில் கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டியதாக ஒப்புக்கொண்டார். குடிபோதையில் கணவர் செய்த சித்ரவதைகள் தாங்கமுடியாமல்தான் கொலை செய்ததாக கூறிய அவர், கணவரின் சகிக்க முடியாத போதை அட்டகாசங்களையும் பட்டியலிட்டார். உமா மகேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட, அவரது 2 குழந்தைகளும் ஆதரவன்றி தவிக்கின்றனர்.

பெண்களை அடித்து துன்புறுத்துதல், குழந்தைகள் கண்முன்னே சண்டையிடுதல், குடும்பச் சொத்துக்களை அழித்தல், என போதையில் மயக்கத்தில் தவறு செய்வதோடு குடிகாரர்கள் நின்றுவிடுவதில்லை. தங்களின் போதைக்கு இடையூறாக யார் வந்தாலும் அவர்களை தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள் என்பதை, நட்டநடு சாலையில் பலரின் கண் எதிரே கோவையில் அரங்கேறிய கொலை நிரூபித்துள்ளது.

மது குடிப்பதை தடுத்தால் குழந்தையைக்கூட கொல்லும் கொடூரன்களாக மாறிவிடுகின்றனர் குடிகாரர்கள். இதனை உண்மையாக்கும் விதத்தில் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளது ஒரு சோக நிகழ்வு. சாலைமாமண்டூரை சேர்ந்த தமிழரசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத் சொத்துக்களை விற்கத் தொடங்கியதால் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இருக்கும் சொத்துக்களையாவது காப்பாற்றும் வகையில் எஞ்சிய குடும்பச்சொத்துக்கள் தமிழரசனின் மகன் வெங்கடேசனின் பெயருக்கு மாற்றப்பட்டது. தனது குடிபோதைக்கு தடை ஏற்பட்டதால் போதை வெறிகொண்ட தமிழரசன், தனது 3 சிறு வயது குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தான். இதற்காக சிறுவன் வெங்கடேசன் உள்பட தனது 3 குழந்தைகளுக்கும் இனிப்பில் நஞ்சு கலந்து தமிழரசன் கொடுக்க, கள்ளங்கபடமறியா குழந்தைகளும், தந்தை கொடுத்ததை ஆவலுடன் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் மூவரும் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் அலறியடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் வெங்கடேசன் பரிதாபமாக உயிரைவிட்டான்.

குடிபோதைக்கு இடையூறாக வந்த பிஞ்சு மகனை கொன்ற தமிழரசன் சிறைக்கு சென்றுவிட, அவனது மற்ற இரு குழந்தைகளும், மனைவியும் ஆதரவின்றி தவிக்கின்றனர். இவையெல்லாம் கடந்தவாரத்தில் நிகழ்ந்தவை மட்டுமே எனக்கூறும் உளவியல் ஆய்வாளர்கள், குடிவெறியால் தமிழகம் முழுவதும், இத்தகைய கொலைகள் நடந்துகொண்டே இருப்பதாக வேதனையுடன் கூறுகின்றனர். குடிகாரன் குழந்தையை கொன்றாலும், குடிகாரனை மற்றவர்கள் கொன்றாலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் மொத்தமும் தெருவில் நிற்கும் அவலம் மட்டுமே மிச்சம் என்பதும் உளவியல் ஆய்வாளர்களின் கருத்து.

இந்த உண்மைகளையெல்லாம் உணர்ந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற குரல் உரக்க ஒலித்தாலும் அதனை கண்டுகொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு மதுக்கடை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், அதற்கு காரணம் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் என்பதை என்றைக்கும் சொல்வதில்லை. குடிபோதை தகராறுகளால் ஒருபுறம் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளையில், குடித்துவிட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ எகிறிக்கொண்டே செல்கிறது. மதுக்கடைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டை என்பதை பலமுறை சுட்டிக்காட்டினாலும் அதனை கண்டுகொள்ள யாரும் தயாராக இல்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக கூறும் ஆட்சியாளர்கள், எத்தனை ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் கூலிப்பணத்தை அரசு மதுக்கடையிலேயே கொடுத்துவிட்டு திரும்புகிறார்கள் என்பதை என்றாவது எண்ணியதுண்டா?

குற்றத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கு துணைபோவது போன்றதே என்கிறது இந்தியத் தண்டனைச் சட்டம். அப்படியானால் ஏழை மக்களின் பணம் அரசு மதுக்கடை என்ற பெயரில் பறிக்கப்படுவதற்கு அரசு துணைபோவது குற்றம் ஆகாதா? எத்தனை பேர் செத்தால் என்ன? எத்தனை குடும்பங்கள் அழிந்தால் என்ன? எங்களுக்குத் தேவை பணம் மட்டுமே என ஆட்சியாளர்கள் செயல்பட்டால், பாதிக்கப்பட்டவர்களே பதிலடி கொடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.