வியாழன், 21 ஜூலை, 2011

வரம்பு மீறும் ஊடகங்களுக்கு சவுக்கடி...

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என உலக ஊடகத்துறையின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் ராபர்ட் முர்டாக். கடந்தமாதம் வரை உலக புகழ்பெற்ற பத்திரிகைத் துறை தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த முர்டாக் இன்று பிரிட்டனின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்.



ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கராக வாழும் ராபர்ட் முர்டாக்கிற்கு பரம்பரை தொழிலே பத்திரிகைதான். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார் முர்டாக். ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிக்கையை இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்திய முர்டாக், அதிரடிச் செய்திகள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். குறிப்பாக இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தினர், பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் என பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்டு இவரது நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை வெளியிட்ட செய்திகள் லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்தது. புகழின் உச்சிக்கு சென்றாலும் சொத்து சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார் முர்டாக். அதன் விளைவாக போட்டியாக தோன்றும் ஊடகங்களை எப்படியாவது வளைத்து போட்டுவிடுவார். சண்டே டைம்ஸ், தி டெய்லி மிர்ரர், தி டெய்லி டெலிகிராப் என முர்டாக் வளைத்த பத்திரிகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.



பத்திரிகைகளை வளைத்தால் மட்டும் போதாது அவற்றின் விற்பனை அதிகரித்தால் மட்டுமே லாபம் என்பதை நன்கு உணர்ந்திருந்த முர்டாக் அதற்காக பல குறுக்கு வழிகளை அசாத்திய துணிச்சலுடன் தேர்வு செய்தார். பிரபலங்களின் தொலைபேசிகளை தொழில்நுட்ப பணியாளர்களைக்கொண்டு ஒட்டு கேட்டல், காவல்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அரசின் ரகசிய தகவல்களை திரட்டுதல், தனியார் புலனாய்வு ஆட்கள் மூலம் பிரபலங்களை பின்தொடர்ந்து கண்காணித்தல், என செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்ததன் விளைவாக ஊடக உலகில் முர்டாக்கின் மதிப்பு உயர்ந்தது. கூடவே அவரது சொத்து மதிப்பும் கணக்கிட முடியாமல் வளர்ந்தது. (இன்றைய தேதியில் மட்டும் முர்டாக்கின் சொத்து மதிப்பு ரூ. 3 லட்சம் கோடி) ஊடகத்தையே மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போல் நடத்தி லாபத்தை குவித்த முர்டாக் சொத்துகளை காப்பாற்றுவதற்காக அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொள்ள தவறவில்லை. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் முதல் இன்றைய பிரதமர் டேவின் கேமரூன் வரை ஆட்சியாளர்கள் அனைவரும் முர்டாக்கிற்கு நெருக்கம். இதன் மூலம் தன் மீது அவ்வப்போது எழுந்த புகார்களையெல்லாம் தூசி போல தட்டிவிட்டார். நெருக்கத்தை தொடர்வதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தாராளமாக நன்கொடையும் வழங்கினார் முர்டாக்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஸ்கை ஒளிபரப்பு நிறுவனத்தை முர்டாக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆக்கிரமிக்க முயன்றபோதுதான் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வெளிச்சத்துக்கு வந்தது. தோண்டத்தோண்ட பூதம்போல் வெளியான தொலைபேசி ஒட்டு கேட்பு தகவல்கள், முர்டாக்கின் ஊடக சாம்ராஜ்யத்தையே சரியச் செய்துள்ளது.



இதன் முதல்படியாக 168 ஆண்டுகளாக வெளிவந்த முர்டாக்கின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை இழுத்து மூடப்பட்டுள்ளது.அத்தோடு முடிந்துவிடவில்லை விவகாரம் ,இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொது விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பகிரங்க மன்னிப்பு கேட்ட முர்டாக், தொலைபேசி ஒட்டுகேட்புக்கு நேரடியாக பொறுப்பேற்க முடியாது என வீம்பு பிடிக்க, ஆத்திரமடைந்த பார்வையாளர் ஒருவர் முர்டாக்கை சிற்றுண்டி சாப்பிடும் தட்டை எடுத்து தாக்கினார்.



ராஜாபோல் வாழ்ந்து வந்த முர்டாக் நாடாளுமன்றத்தில் அனைவரது முன்னிலையிலும் தாக்கப்பட்ட இந்த நிகழ்வு வரம்பு மீறும் ஊடக துறையினருக்கு ஒரு சவுக்கடியாக விழுந்துள்ளது. பத்திரிகை கையில் இருக்கிறது நாம் வெளியிடுவதுதான் செய்தி, நமக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருக்கிறது, நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்கிற மிதப்பில் இருந்த முர்டாக் இந்த தாக்குதல் நிகழ்வையடுத்து இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துவிட்டார். (பிரிட்டனில் இருந்து வெளியேறிவிட்டார்) முர்டாக்கின் நிறுவனங்கள் இனியும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக மறைந்து போகும் என்பதை மறுப்பதற்கில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக