வெள்ளி, 30 ஜூலை, 2010

நாடாளுமன்றமா? நாடகமேடையா?


ஒரு நாளைக்கு ஒரு கோடி ... இது லாட்டரி குலுக்கலில் விழும் பரிசுத்தொகை அல்ல, நம் நாட்டின் நாடாளுமன்றம் ஒரு நாள் செயல்பட ஆகும் குறைந்தபட்ச செலவு. அதுவும் என்ன செயல்பாடு தெரியுமா? காலை 11 மணிக்கு 5 நிமிடம், 12 மணிக்கு 5 நிமிடங்கள், விருப்பம் இருந்தால் பிற்பகல் 2 மணிக்கு 5 நிமிடங்கள் யாரையும் பேச விடாமல் கூச்சல் போடத்தான் இந்த செலவு. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூடதொடரின் போதும் விலைவாசி பிரச்சனை, ஊழல் என ஏதாவது ஒரு காரணத்தை காட்டி கூச்சல் போடும் எதிர்க்கட்சியினருக்கு தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் கிடைத்திருப்பது விலைவாசி உயர்வு பிரச்சனை. இப்பிரச்சனையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க கோரியும், வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நடக்கும் அமளிகளால் நாடாளுமன்றம் முடங்கியதுடன், மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறது. மக்களின் பிரச்சனையை தீர்க்க போராடுவதாக கூறி அவர்களின் வரிப்பணத்தை வீணடிப்பது எந்த வகையில் நியாயம்?

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனே ஒதுக்கொள்ளகூடாது என்பதை எழுதப்படாத விதியாகவே பின்பற்றி வருகின்றன ஆளும் கட்சிகள். அவர்கள் எதைகேட்டாலும் தாங்கள் நினைத்ததை மட்டுமே செய்யப்போகிற ஆளும் கட்சி அவர்களை விரும்பியபடி கேள்வி கேட்ககூட அனுமதி மறுப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்று கருதுகிறார்கள். விளைவு நாடாளுமன்றத்தில் அமளி! அடுத்தடுத்து அவை ஒத்திவைப்பு ! என்ற செய்தியை மட்டுமே பார்க்கமுடிகிறது வெகுஜனம். ஆள்பவர்களோ, எதிர்க்கட்சியினரோ தாங்கள் செய்வதுதான் சரி என்ற கொள்கையோடு செயல்படும்வரை இந்த நிலை தொடரத்தான் செய்யுமமக்களாட்சி நடத்துகிறோம் என்று மார்தட்டும் ஆளும் கட்சி மக்களுக்காக ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்கொள்ள கூடாதா? இதுகூட முடியாவிட்டால் உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்!

(பொ)கோழி கூவி பொழுது விடியாது என்பதைப்போல் எத்தனை கத்தினாலும் விலையை குறைக்கமாட்டர்கள் என்று தெரிந்தும் எதிர்க்கட்சிகளின் இந்த வீம்பு ஏன்? வழக்கமான கேள்வி நேரத்தில் இப்பிரச்சனையைவிவாதித்தால் கேள்விகளை மறந்து விடுவீர்களா என்ன? அதெல்லாம் முடியாது மக்களின் முக்கிய பிரச்சனையை தீர்த்தபின்தான் அடுத்தவேலை என்று முடிவு செய்தால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிடுங்கள் அப்புறம் அவர்கள் எப்படி நாடாளுமன்றத்தை கூட்டுவார்கள் என்று பார்ப்போம் !!!அதவிட்டுட்டு சும்மா அமளி ! கண்டனம் ! போராட்டம்னு!.. போங்க பாஸ், வீட்ல சின்ன பசங்க யாராவது இருந்த வரசொல்லுங்க ... !