வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சாதிவாரி... சாத்தானா? சாதனையா?


நீ என்ன சாதி...? விரைவில் வீடு வீடாக அரசு ஊழியர்கள் கேட்கப்போகும் கேள்வி இது? ஆம் 80 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கப்போகும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில்தான் இந்த கொடுமை அரங்கேறப்போகிறது. சாதியை கேட்பதில் என்ன கொடுமை? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அது கொடுமைதான்! இதை நான் சொல்லவில்லை நமது அரசே சொல்லி இருக்கிறது... சாதாரண கொடுமை இல்லையாம் வன்கொடுமை என்று சொல்லி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்க வழி செய்கிறது PCR Act எனப்படும் Protection of Civil Rights act.தீண்டாமையை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின்படி கீழ் சாதியை சேர்ந்த ஒருவரை அவரின் சாதியின் பெயரை கூறி திட்டினால் அது குற்றம். இதற்காக பதிவான வழக்குகள் ஏராளம்.இப்படி ஒரு சட்டம் நடைமுறையில் இருக்கும் நமது நாட்டில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போகிறார்கள். சாதியை சொல்வதே குற்றம் என்றால் வீடு வீடாக போய் அதனை கேட்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா? அதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு யார் தண்டனை அளிப்பது?

அவசியதேவை

இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. அதேநேரத்தில் எதற்காக சாதிவாரி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது. இப்போதுள்ள நிலையில் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை விட பொருளாதார இடஒதுக்கீடே அவசியமானது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்களின் கருத்து. நாடாளுமன்ற சபாநாயகர் (இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்) உள்ளிட்ட தலைவர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்

போலிகள் ஜாக்கிரதை

சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று கோருவது சாதியைக் காப்பாற்றுவதற்காக அன்று; மாறாக சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை சாதியின் பெயரால்தான் பெற முடியும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பது ஒரு பிரிவு அரசியல் தலைவர்களின் வாதம்.இந்த வாதத்தை தமிழகத்தில் MGR முதலமைச்சராக இருந்தபோது வலியுறுத்திய தலைவர்களிடம்,ஒவ்வொரு சாதியிலும் உள்ளவர்களின் விபரங்களை அளிக்கும்படி கேட்டார் MGR. அதன்படி அவர்கள் கொடுத்த ஒவ்வொரு சாதி மக்களின் எண்ணிக்கையும் அப்போதைய ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட 3 மடங்கு அதிகமாம் !இப்படி ஒரு நிலை ஏற்ப்பட்டால் யோசிக்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான வைப்புகள் அதிகம் என்பதை மறுக்கமுடியாது. ஏனெனில் வாக்காளர் பட்டியலில் மக்களின் பெயரைச் சேர்க்கவே போட்டிபோடும் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி பலம் வாய்ந்தது என்பதை காட்ட இதிலும் முயற்சிப்பார்கள். எனவே சாதிவாரி கணக்கெடுப்பில் போலிகளை தடுக்க வேண்டியது அவசியம்.இல்லையென்றால் சாதனையாக வேண்டிய சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டிற்கே சாத்தானாக மாறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக