வெள்ளி, 15 ஜூன், 2012

மண்ணை கவ்விய மம்தா...



ஒரு விவசாயி வைத்திருந்த 2 உழவுமாடுகளில் ஒரு மாடு வயல்வேலைக்கு செல்லும்போதெல்லாம் முரண்டுபிடித்தது. விவசாயியும் அந்த மாட்டிற்கு பச்சைப்புல், புண்ணாக்கு தண்ணீர் போன்றவற்றை வைத்து கவனித்து வளர்த்துவந்துள்ளார். பருவமழை பெய்தபோது அந்த மாடு அளவுக்கு அதிகமாக முரண்டுபிடிக்க நொந்துபோன விவசாயி, அந்த மாட்டை அடிமாட்டுக்கு(கறிக்கு) விற்றுவிட்டு புதிய மாடுவாங்கி பழைய மாட்டுடன் ஜோடி சேர்த்துவிட்டாராம். முரண்டுபிடித்தால் கவனிக்கப்படுவோம் என்று நினைத்த அந்த மாடு, அழுதபடியே லாரியில் ஏற்றப்பட்டதாம். அந்த நிலைதான் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

சாதாரண காட்டன் புடவை, ரப்பர் செருப்பு என எளிமையின் மறுஉருவமாக உலாவந்த மம்தா பானர்ஜி, தங்கள் மாநிலத்திற்கே பெருமை சேர்க்க வந்த அவதாரம் என மேற்குவங்க மாநில மக்கள் கருதினர். அதனால்தான் 30ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மம்தாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். மத்திய அமைச்சர் பதவியை உதறிவிட்டு மேற்குவங்க முதலமைச்சர் பதவியேற்றபோதும் மம்தாவின் நடை உடையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம். அதுவரை மக்கள் தலைவியாக கருதப்பட்ட மம்தா, முதலமைச்சர் பதவியை அடைந்தவுடன் மமதையின் ராணியாக மாறத்தொடங்கினார். 35 ஆண்டுகள் ஆட்சிகட்டிலில் இருந்த கம்யூனிஸ்டுகளை வீழ்த்திவிட்டோம் இனியாரும் நமக்கு கால்தூசியே என்ற போக்கு அவரது பேச்சுக்களில் வெளிப்பட்டது. 



சில்லரை வணிகத்தில் நேரடி அன்னியமுதலீடு, ஓய்வூதிய சீர்திருத்த மசோதா என மத்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சியான பா.ஜ.க. எதிர்ப்பதற்கு முன் மம்தா எதிர்த்தார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், இடம்பெற்றிருந்த மம்தாவிடம் 19 எம்.பி.க்கள் இருப்பதால் மத்திய அரசும் அவரது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல திட்டங்களை நிறுத்திவைத்தது. ஒரு சில நேரங்களில் மேற்குவங்கத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கி காரியம் சாதித்தது மத்திய அரசு. மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல, மத்திய அரசின் அன்றாட செயல்பாடுகளிலேயே மூக்கை நுழைத்தார் மம்தா. இந்த முடிவு எங்களை கேட்காமல் எடுக்கப்பட்டது, இந்த விவகாரத்தில் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என அதிரடியாக மம்தா கிளப்பிய சர்ச்சைகளால் பலநேரங்களில் மத்திய அரசு திணறிப்போனது. இதற்கெல்லாம் உச்சமாக ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு அறிவித்ததற்காக, அவரது திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை உடனடியாக மாற்றியபோதுதான் அவரது மமதைப்போக்கு அம்பலமானது. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்த ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் படித்ததற்காவே ஒரு அமைச்சரின் பதவியை பறித்தது இதுவரை இந்தியா பார்த்திராதது. மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதியின் பதவியை பறித்ததற்கு மம்தா கூறிய காரணம், தம்மை கலந்தாலோசிக்காமல் ரயில்வே கட்டணங்களை உயர்த்தினார் என்பதுதான். அமைச்சராக ஒருவர் பதவியேற்கும்போதே, அரசின் ரகசியங்களை பிறரிடத்தில் வெளியிடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள். இது மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ள மம்தாவுக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் கண்ணசைவின்படியே அனைத்தும் நடக்கவேண்டும் என்பதில் மம்தா உறுதியாக இருந்தார்.  ரயில்வே அமைச்சரின் பதவியை காலி செய்ததுடன், தான் கைகாட்டிய முகுல்ராய்க்கு அந்த பதவியை வழங்கச் செய்தார். அவரும் தலைமைக்கு விசுவாசம் காட்டுவதற்காக, பதவியேற்றவுடனேயே கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார். கட்டணம் குறைக்கப்பட்டது நல்லதுதான் என்றாலும், அரசின் கூட்டுமுடிவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளை, எவ்வித ஆலோசனையும் இன்றி ரத்து செய்தால் மத்தியில் அரசு எதற்கு? இவ்வளவும் மம்தாவின் கண்ணசைவில் நடந்தது. இப்படி மத்திய அரசின் முடிவுகளை தன் இஷ்டம்போல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா மாற்றினால் பிரதமர் பதவி ஏன்? (பிரதமர் ஏற்கனவே பொம்மையாக வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், அரசின் அறிவிப்புகளை அவர் வழியாகவே வெளியிடுகிறார் சோனியா)

மம்தாவின் இத்தனை ஆட்டங்களையும் மத்திய அரசு பொறுத்துக்கொண்டதற்கு காரணம் பெரும்பான்மையின்மை. கூட்டணி அரசில் முக்கிய பங்குவகிக்கும் மம்தா விலகிக்கொண்டால் அரசே கவிழ்ந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் சோனியா.

ஆனால், இதற்கெல்லாம் உச்சமாக நாட்டின் முதல்குடிமகனான குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மம்தா அரங்கேற்றிய கீழ்த்தரமான அரசியல் அனைவரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர் என்ற மரியாதைக்காக மம்தாவை டெல்லிக்கு அழைத்தார் சோனியா காந்தி. அதனை ஏற்று டெல்லி சென்ற மம்தா, விமான நிலையத்தில் இருந்து, நேரடியாக முலாயம் சிங் வீட்டில் சென்று இறங்கினார். சோனியாவை மறுநாள் சந்திக்க இருந்த நிலையில் வேண்டுமென்றே முலாயம்சிங்கை மம்தா சந்திக்க காரணம், தனக்குள்ள அரசியல் பலத்தை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தவே. மறுநாள் சோனியாகாந்தியை மம்தா சந்தித்து பேசினார். அப்போது மேற்குவங்கத்தை சேர்ந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்து ஆதரவும் கேட்டுள்ளார் சோனியா. இதனை பின்னர் செய்தியாளர்களிடம் வலியச்சென்று வெளியிட்டார் மம்தா பானர்ஜி. இதேபெயர்களை திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பிற கூட்டணி தலைவர்களுக்கும் ஏற்கனவே தூதர்கள் மூலம் சோனியா தெரியப்படுத்தியிருந்தார். அவர்களெல்லாம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை சோனியா அறிவிப்பார் என்று கூறியிருந்த நிலையில் மம்தா மட்டும் பெயர்களை வெளியிட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த ஆச்சர்யத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே சோனியா வீட்டில் இருந்து நேரடியாக முலாயம்சிங் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி,அவருடன் இணைந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு புதிய வேட்பாளர்களை அறிவித்தார். 



அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜியுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மீது இருக்கும் வெறுப்பையே மம்தா பானர்ஜி இவ்வாறு காட்டினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறியதை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. மேற்குவங்கத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால், அவர் தமது மாநிலத்திற்கு வரும்போதெல்லாம் மரபுப்படி, மம்தா விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவும், தம்மைவிட உயர்ந்தபதவிக்கு தமது மாநிலத்தை சேர்ந்தவர் வருவதை தடுக்கவுமே பிரணாப் முகர்ஜியை மம்தா நிராகரித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமானால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 16,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும் என்ற மம்தாவின் நிபந்தனையையும் பிரணாப் ஏற்க மறுத்ததால் அவரை மம்தா நிராகரித்தார்.

தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மம்தாவின் அதிரடி அரசியல் 2 நாட்கள்கூட நீடிக்காததுதான் சோகம். இதுவரை அவர் போட்ட முட்டுக்கட்டையெல்லாம் பொறுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, தங்கள் கவுரவத்திற்கே மம்தா விடுத்த சவாலை முறியடிக்கும்வகையில் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக இன்று (15.06.2012) அறிவித்துவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நற்பெயர் பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடன் சேர்ந்து அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கப்போவதாக மம்தா சூளுரைத்தாரோ அதே சமாஜ்வாதிக் கட்சி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதுதான். அதுவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிலநிமிடங்களில் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்ததன்மூலம் மம்தாவின் முகத்தில் கரியை பூசியுள்ளது சமாஜ்வாதி கட்சி. 

இதேபோல் யாரெல்லாம் தங்களது வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று மம்தா எதிர்பார்த்தாரோ அவர்களெல்லாம் அடுத்தடுத்து பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் மம்தாவின் மமதைக்கு சரியான அடி கிடைத்துள்ளதுடன், குட்ட குட்ட குனிகிறார்கள் என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த மம்தா முதல்முறையாக அவர்கள் நிமிர்ந்துகொண்டதால் மண்ணைக் கவ்வியுள்ளார். ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகிப்போயுள்ளன என்பதை மம்தா இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரும் ஒருநாள் இருந்தஇடம் தெரியாமல் போய்விடநேரிடும்.... 

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மெரினா கடற்கரையில் பூவாடைக்காரி...


தம்பி ஜோசியம் பார்க்கிறிங்களா, கரெக்டா சொல்லுவேன் தம்பி... இந்த வசனங்களை மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் செல்லும்போதெல்லாம் கேட்டிருக்கிறேன். 5, 10 வருமானத்திற்காக இப்படி கேட்கிறார்கள் என்பதால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போவது வழக்கம்... ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஒரு மாலைநேரத்தில் நண்பருடன் மெரினா கடற்கரைக்கு சென்றபோது இந்தக்குரலை கேட்கவில்லை. சரி இன்றாவது ஜோசியக்காரர்கள் தொல்லை இல்லை என்ற நினைப்போடு, அலைகளின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த எங்களை, ஆள்நடமாட்டம் குறைந்த கடற்கரையின் ஒரு ஓரத்தில் ஒலித்த ஒரு பாட்டுச் சத்தம் நின்று திரும்பி பார்க்க வைத்தது. 10, 15 பெண்கள் கூடி நிற்க, 2பேர் உருமி மேளம் இசைத்துக்கொண்டு அந்த பாட்டை பாடிக்கொண்டிருந்தனர். 


ஏதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்த நாங்கள் அருகில் சென்று பார்த்தபோது, கூட்டத்தின் நடுவே மஞ்சள் உடையணிந்த குண்டு பெண்மணி நிற்க, அவருக்கு முன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் (பூவாடைக்காரி) உருவம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பக்தியுடன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த ஒருவர், அம்மன் முன் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணிற்கும் தீபாராதனைக்காட்டி ஏதோதோ கூறிக்கொண்டிருந்தார். வழக்கமாக கோவில் திருவிழாக்களின்போது மட்டுமே இத்தகைய காட்சிகளை பார்த்திருப்பதால், கடற்கரையில் இப்படி நடந்தது வினோதமாக இருந்தது. அதனால் கூட்டத்தோடு கூட்டமாய் சிறிது நேரம் நின்றபடி, அங்கு என்ன நடக்கிறது என ஒரு பெண்ணிடம் கேட்டோம்.


அருள் இறக்குறோம் தம்பி... பூவாடைக்காரிய வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறோம்... என்று அந்த பெண் பக்தியுடன் கூற, புரியலையே என்றோம். அதாவது தம்பி, அங்க நிக்குதே அந்தம்மாவோட மாமியார், மாமனார் செத்துபோனபின்னாடி வெளியிலேயே இருக்காங்க, அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்குத்தான் இந்த பூச, அதோ அங்க உக்காந்திருக்கே (அப்போதுதான் கவனித்தோம் கூட்டத்தின் அருகிலேயே மற்றொரு குண்டு பெண்மணி கன்னத்தில் அலகு குத்தியபடி உட்கார்ந்திருந்தார்) அந்த பொண்ணுதான் வீட்டுக்கு மூத்த மருமக, அது மேல நாகாத்தம்மன் அடிக்கடி வரும், அது வந்துதான் அவுங்க மாமியார் மாமனார் வெளியில் இருக்குறத சொல்லுச்சு, அவுகள வீட்டுல கூட்டிக்கிட்டு வரணும்னு பூசாரிங்க முடிவு பண்ணிணாங்க. அதுக்குதான் இது நடக்குது...என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாட்டு பாடியவரின் சத்தம் அதிகமாக அந்த பெண்ணும் கூட்டத்தில் ஐக்கியமானார். மறுபடியும் பூஜையும் பாட்டும்..... சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் அந்த பெண்ணிடம் எங்க இருந்து வர்றீங்க... இப்ப என்ன ஆச்சு என விசாரித்தபோது, நாங்க அம்பேத்கர் பாலம் ஏரியால இருந்து வர்றோம்.(சென்னை சிட்டி சென்டர் எதிரில்) கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நடந்த பூசையில் மூத்த மருமக மேல மாமியார் (ஆன்மா) வந்துட்டாங்க!!! அதுனால அவருக்கு அலகு குத்தி உட்கார வச்சிருக்கோம். ஆனா சின்ன மருமக மேல மாமனார் லேசுல வரமாட்டேங்குறார் தம்பி என்றார். அவரிடம் நாங்க தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் வேறொரு பெண் அருள் வந்து ஆடினார். உடனே பூசாரி, யார் நீ அப்படின்னு அதிகாரமா விசாரிச்சார், நான் பெருமாள்டா (பூசைக்காக நின்றுக்கொண்டிருக்கும் பெண்ணின் மாமனார்) என்னபார்த்தா யாருன்னு கேட்குற. அப்படின்னு பதில் சவுண்டு....

உன் சொந்தக்காரங்கிட்ட வரமா இவுங்க மேல ஏன் வந்த அப்படின்னு பூசாரி கேட்டப்போ அந்தம்மா சொன்னாங்களே பார்க்கலாம்... என் பேரை சொல்லாம மணிக்கணக்கா கூப்டா நான் எப்டிடா வருவேன்....(அடப்பாவிகளா இவ்வளவு நேரம் பேரையே சொல்லமாத்தான் பூசையா)
சரி உம் மருமக மேல வரியா.... பூசாரி
ம்ம்ம்...பாட்டுபாடி கூப்டு நான் வரேன்...... இது அருள்வந்து ஆடிய பெண் (சிறிது நேரத்தில் அவரும் மலையேறிவிட்டார்.)

மீண்டும் தொடங்கியது கச்சேரி

பூசாரியும், மேளக்காரர்களும் எத்தனையோ முறை பாடிப்பார்த்து அந்த பெண்ணுக்கு அருள் வராததால அவரோட புருஷன இழுத்துவந்து நிறுத்தனா. அந்தாளு புல் போதையில இருக்காரு...அதனால நாட்டாமை தீர்ப்பு மாதிரி செல்லாது, செல்லாதுன்னு சொல்லிட்டாரு பூசாரி....

அதுக்குள்ள இறந்தவங்களோட இன்னொரு மகன், போதை தெளியறதுக்காக கடல்ல முங்கிட்டு அப்படியே ஈரத்தோட வந்து நிக்க அதுவும் செல்லாம போச்சு..

இதுக்குள்ள கூட்டத்தில் இருந்த பெண்களுக்கு போரடிக்க, லேசா அருள் வந்தா போதும், அந்த பொண்ணுக்கு அலகு குத்தி கூட்டிட்டு  போவோம்னு தயாராகிட்டாங்க. உடனே பூசாரி கேட்டார்  ஏம்மா ஏதாவது தெரியுதா?(அருள் வர்றதுக்கான அறிகுறி). ம்ஹும்... ஒண்ணும்  தெரியல.. இது அந்த பெண்..

அருள் வர்றதுக்கான அறிகுறியே இல்லைன்னா அலகு குத்தக்கூடாதும்மா, அது என்ன சாதாரண காரியமா(?) நாம வீட்டுல போய் பூசைய கன்டினியூ பண்ணுவோம் அப்படின்னு பூசாரி அறிவிக்க, உடனே கூட்டம் புறப்படத் தயாரானது.. மறுபடியும் கச்சேரி பூவாடை, பூவாடையாம், பூவாடைக்காரி பாட்டோடு நகர்ந்தது அந்த கூட்டம்.

அடப்பாவிகளா... அறிவியல் வளர்ச்சியில உலகம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு.. ஆனா இன்னும் செத்தவங்கள மறுபடி வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்னு சொல்லிக்கிட்டு கடற்கரையில வந்து பூஜை நடத்திக்கிட்டு இருக்கிங்களே என்று எண்ணியபடி நாங்களும் அந்த இடத்தை விட்டு நடந்தோம்.

அலைகளின் ஓரத்திலேயே நீண்டதூரம் நடந்து சென்றாலும், ஆர்ப்பரிக்கும் அலைகளின் சத்ததை தாண்டி அந்த பூஜை காட்சிகளே மனதில் பிரதிபலித்தது.

பூஜைக்காக வந்திருந்த குடும்பம் படிப்பறிவில்லாத அடித்தட்டு குடும்பமாகவே இருந்தது. ஏதோ ஒரு கூலி வேலை பார்த்து பிழைப்பை ஓட்டுகிற குடும்பம் என்பது பார்த்தாலே தெரிந்தது. ஆனால் அந்த பூஜைக்காக மட்டும் அவர்கள் சுமார் மூன்றாயிரம் ரூபாய் வரை செய்திருப்பார்கள். (சில்வரால் ஆன அம்மன் உருவத்திற்கு மல்லிகை பூ அலங்காரம், பூஜை பொருட்கள், அலகு குத்த தேவையான பொருட்கள், 2 மேளக்காரர்களுக்கு சம்பளம், பூசாரிக்கு காணிக்கை.. etc..)

அவர்களது அறியாமையை பயன்படுத்திக்கொண்டு இவ்வளவு செலவு செய்ய வைத்தது மட்டுமல்ல... அவர்களை பலமணி நேரம் கடற்கரையில் நிறுத்தி, அலகு குத்தி, மேளதாளத்துடன் வேடிக்கைப் பொருளாக இழுத்துச்சென்ற பூசாரி கும்பலை என்ன செய்வது? சென்னை மாநகரின் நவநாகரீக மனிதர்களின் கூடாராமாக திகழும் சிட்டி சென்டரின் எதிரிலேயே வசித்துக்கொண்டு, இப்படி பூசாரிகளையும் , மூட நம்பிக்கையையும் நம்பி ஏமாறுபவர்களை எப்படி திருத்துவது?
ஒரு பெரியாரல்ல ஓராயிரம் பெரியார்கள் தோன்றினாலும் இவர்களை திருத்த முடியாதா? பெரியார் கொள்கையை பரப்புவதாக கூறிக்கொண்டு சுற்றி வருபவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? விளம்பரம் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் அவர்களது பிரச்சாரம் இருக்குமா? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எதிர்பார்ப்பில், எல்லோரையும் நம்பி ஏமாறும் அடித்தட்டு மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டால் இதுபோன்ற மோசடிகள் குறையாதா? இப்படி பல கேள்விகள் இன்னும் விடை தெரியாமலேயே நீள்கின்றன....?????

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வணிகமயமாக்கப்படும் தாய்மை...



கையில் குழந்தையுடன் கண்ணீர்விட்டு கதறியபடி கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ராஜேஸ்வரி. வாடகைத்தாயாக இருந்ததற்கு பணம் தராமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மோசடி செய்துவிட்டதாக புகார் மனு ஒன்றையும் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் அளித்தார். தான் ஏமாந்த கதையையும் கண்ணீரோடு விவரித்தார் ராஜேஸ்வரி.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவக்குமார் என்பவரின் மனைவிதான் இந்த ராஜேஸ்வரி. குடும்ப வறுமையால் அடுத்தவேளை உணவுக்கே வழியின்றி வாடிய இருவரும் பிழைப்புத்தேடி கோவை மாவட்டம் சூலூரில் குடியேறியுள்ளனர். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இருவரும் கூலி வேலை செய்து நாட்களை கழித்து வந்தனர். இந்த நிலையில்தான் ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன்பு அந்த தம்பதியின் கண்ணில் பட்டது ‘வாடகைத்தாய் தேவை’ என்ற விளம்பரம். வறுமையை போக்க வழிதெரியாத சூழ்நிலையில் தனியார் மருத்துவமனை சார்பில் நாளிதழில் வெளியாகி இருந்த அந்த விளம்பரம் ஆபத்பாண்டவனாய் தெரிய உடனடியாக மருத்துவமனையை தொடர்புகொண்டார் ராஜேஸ்வரி.

மருத்துவமனைக்கு அழைத்து பேசிய நிர்வாகம், வாடகைத்தாயாக இருக்க ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், மாதம் 12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டது. தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் உரியமுறையில் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், மருத்துவமுறைப்படி வாடகைத்தாயாக மாறினார் ராஜேஸ்வரி. ஆனால் 3 மாதங்களிலேயே தனது போக்கை மாற்றிக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது. குழந்தைகேட்டு பணம் கொடுத்த பெற்றோர், தொடர்ந்து பணம் செலுத்ததால் மேல்சிகிச்சை அளிக்கமுடியாது எனக்கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, சிகிச்சை அளிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால், நள்ளிரவில் ஈவு, இரக்கமின்றி மருத்துவமனையில் இருந்து அவரை வெளியேற்றியது நிர்வாகம்.

தயவு தாட்சண்யம் இன்றி மருத்துவமனை நிர்வாகத்தால் விரட்டபட்டபோதும் சொந்த செலவில் 10 மாதம் வரை சிகிச்சை பெற்று கடந்த மாதம் 11ஆம் தேதி குழந்தையை பெற்றெடுத்தார் ராஜேஸ்வரி. அடுத்தவர்களுக்காக பெற்றுக்கொண்ட குழந்தையை என்னசெய்வதென்று தெரியாத அவர், வேறுவழியின்றி காவல்துறை உதவியை நாடினார். தன்னை ஏமாற்றிய மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தரும்படி காவல்நிலையத்தில் புகார்¢ அளித்தார் ராஜேஸ்வரி. முதலில் விசாரிப்பதாக உறுதியளித்த காவல்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனையின் பெயரைக்கேட்டதும் யோசிக்கத் தொடங்கினர். ஏனென்றால், ராஜேஸ்வரி வாடகைத்தாய் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும், கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு புகார்களையும் நடுநிலையோடு விசாரிக்க வேண்டிய காவல்துறையினர், அதனை செய்யத் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

காவல்துறையினர் மூலம் மிரட்டுவதாக கூறப்படும் புகாரை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ராஜேஸ்வரிதான் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அவர், நாட்கள் செல்லச்செல்ல கூடுதல் பணம் கேட்டு நச்சரித்ததாக குற்றம் சாட்டியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணம்கொடுத்தால் மட்டுமே குழந்தையை ஒப்படைக்கமுடியும் என தனிநபர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருதரப்பு புகார்களிலும் பணம் மட்டுமே முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது தெரியவந்தது. மேலும் போதிய சான்றுகளை கொடுக்க ராஜேஸ்வரி தரப்போ, மருத்துவமனை நிர்வாகமோ முன்வராததால் இருதரப்பும் உள்நோக்கத்துடன் செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி வழக்கை முடித்துக்கொண்டது காவல்துறை. இதன்மூலம் கோவையை உலுக்கிய வாடகைத்தாய் சர்ச்சை ஓய்ந்ததாலும், வாடகைத்தாய் என்ற ஆக்கப்பூர்வமான அறிவியல் வாய்ப்பு பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

குழந்தைப்பெற வழியே இல்லாத தம்பதிகள் மற்றொருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாடகைத்தாய் முறை சிறிதும் வணிகநோக்கத்துடன் நடைபெறக்கூடாது என்கிறது சட்டம். ஆனால் கோவை நிகழ்வு முற்றிலும் வணிக நோக்கத்திற்காக நடந்துள்ளது. கோவையில் மட்டுமல்ல இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது வாடகைத்தாய் வணிகம். வாடகைத்தாய் குறித்து தனியார் மருத்துவமனைகள் எவ்வித விளம்பரமும் செய்யக்கூடாது என சட்டவிதிகள் இருந்தாலும், அதனை சிறிதும் மதிக்காத மருத்துவமனைகள், இதுகுறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றன. அதனை பார்த்து பணத்துக்காக வரும் ஏழைப் பெண்களை மூளைச்சலவை செய்து குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் மருத்துவமனை நிர்வாகம், குழந்தை கேட்டு வரும் தம்பதிகளிடம் முடிந்தவரை பணம் கறந்து விடுகின்றனர். குழந்தை பெற்றுத்தரும் பெண்ணுக்கு 10 மாதங்களும் உரிய சிகிச்சைஅளிப்பதுடன், எதிர்காலத்தில் குழந்தை தொடர்பான எவ்வித சர்ச்சையும் ஏற்படாதவகையில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என விதிகள் கூறினாலும், பல மருத்துவமனைகள் இதனை பின்பற்றுவதில்லை என்கின்றனர் மருத்துவத்துறை வல்லுனர்கள்.

குழந்தை பெறும் எந்திரமாக ஏழைப் பெண்ணையும், பணம் தரும் எந்திரமாக குழந்தை வேண்டுவோரையும் மருத்துவமனை நிர்வாகங்கள் கருதுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இருதரப்பினரையும் கடைசிவரை நேரடியாக சந்திக்க அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல லட்சம் ரூபாய் லாபம் பார்க்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.

மருத்துவமனை நிர்வாகத்திற்கு சிறிதும் சளைக்காதவகையில் ஒருசில வாடகைத்தாய்களும் பணம்பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. முதலில் குறைந்த தொகைக்கு ஒப்புக்கொள்ளும் இவர்கள் கர்ப்பமான பின்னர் கூடுதல் தொகை கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இவர்களுக்கு உதவி செய்வதாகக்கூறி களத்தில் இறங்கும் தனி நபர்கள் சிலர் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி, இதனை லாபம் தரும் தொழிலாகவே மாற்றிவிடுகின்றனர்.

இரண்டு தரப்பாலும், கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனை, முடிந்தவரை பணம் பறிக்கும் வாடகைத்தாய் தரப்பினர் என கீழ்த்தரமான தொழிலாகிவிட்ட ‘வாடகைத்தாய்’ முறையால் பாதிக்கப்படுவது அவர்களால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகள்தான். இத்தகைய சர்ச்சைகள் ஓயும்வரை குழந்தைகள் வேண்டா வெறுப்பாகவே வளர்க்கப்படுவதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்குவராமல் குழந்தைகள் அனாதைகளாக விடப்படும் ஆபத்தும் உள்ளது.

வாடகைத்தாய் முறைக்கென சில பொது விதிமுறைகள் இருந்தாலும், முறைகேடு செய்பவர்களை தண்டிக்க கடுமையான விதிமுறைகள் இல்லை. இதனால் தாய்மையின் பெயரில் நடைபெறும் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய அவலங்களை ஒழிக்க முடியும் என்கின்றனர்.

முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க வாடகைத்தாய் முறையையே தவிர்ப்பது நல்லது என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்து. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் செயற்கை கருத்தரித்தல், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற வழிகளில் குழந்தை பெற வாய்ப்பிருப்பதாக கூறும் மருத்துவர்கள், கடைசி முயற்சியாக மட்டுமே வாடகைத்தாய் முறையை நாடவேண்டும் என்கின்றனர். அதற்கேற்ப குழந்தையில்லா தம்பதிகளின் மனநிலையைப் பக்குவப்படுத்த வேண்டியதும் மருத்துவமனையின் கடமை என வலியுறுத்தப்படுகிறது.

மக்களின் மனநிலை மாறினாலும், மருத்துவ உலகின் மகத்தான சாதனைகளில் ஒன்றான வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலோனோர் கடைசி கட்டத்தில் மட்டும் இந்தமுறை நாடுகிறார்கள் என்பதும் அவர்களது கருத்து. வேறு வழியே இல்லாதநிலையில் வாடகைத்தாய் முறையை நாடும்போது, அதுவும் மோசடியானால் அவர்களின் ஏமாற்றத்தை ஈடுசெய்வது கடினம். எனவே, கொள்ளை லாபம் அடிக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனிநபர்களின் பேராசையால் தாய்மையின் புனிதத்தன்மை கெட்டுவிடாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

ஆளும் கட்சியின் கைப்பாவையா தேர்தல் ஆணையம்?

தமிழக மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட (ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்) உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர், இன்றே (22.09.2011) வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த, தேர்தல் தேதி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. அதேநேரத்தில் புதிய குழப்பங்களும், கேள்விகளும் ஏராளமாய் எழுந்துள்ளன.


1. வழக்கமாக வேட்பாளர் தேர்வுக்காக குறைந்தது ஒருவார கால அவகாசம் அளித்து, வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படும் நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்ட 14 மணிநேரத்தில் மனுத்தாக்கல் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?
2. அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் ஒருவாரத்திற்குள் வேட்பாளர்கள் நேர்காணல், தேர்வு உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு அனைவரும் மனுத்தாக்கல் செய்யமுடியுமா?
3. பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கான மாநகராட்சிகள் எவை? பொதுப்பிரிவினருக்கான மாநகராட்சிகள் எவை? என்பதும் இன்றுவரை தௌ¤வாக அறிவிக்கப்படாததால் வேட்பாளர்களை அறிவிப்பது எப்படி?
4. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவடையாத நிலையில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதால் குளறுபடிகளுக்கு வழிவகுக்காதா?
5. முதல்கட்டத் தேர்தலுக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கும் (அக்.17, 19) ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் கள்ளஓட்டு பதிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால் ஒருவர் இருமுறை வாக்களிக்கும் ஆபத்து.
7. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் மத்தியில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதா?

இப்படி நீண்டுகொண்டே செல்லும் குழப்பங்களின் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும் அ.தி.மு.க மட்டும் எப்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதைப்போல் ஆளும்கட்சிக்கு மட்டும் உள்ளாட்சி தொகுதிகள் குறித்த முழுப்பட்டியல் கொடுக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. சசிகலாவுக்கு நெருக்கமானவர் என்று குற்றம்சாட்டப்பட்ட சோ. அய்யரை மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்தபோதே, அவர் அ.தி.மு.க.வின் விசுவாசியாக செயல்படுவார் என்று புகார்கள் கூறப்பட்டன. அது உண்மையாவதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. அப்படியானால் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு என்பதெல்லாம் பொய்யா??????????

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஜால்ரா சத்தம் ஓய்ந்தது...

“மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா” இந்த வசனம் கடந்த ஒருமாதகாலம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எத்தனை முறை ஒலித்தது என்று போட்டிவைத்தால் கணக்கில் புலி என சொல்பவர்கள் கூட நிச்சயம் தோற்றுப்போவார்கள். ஏனென்றால் அந்தளவுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதான எதிர்க்கட்சி(!) உறுப்பினர்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி சட்டப்பேரவை சபாநாயகர் கூட வார்த்தைக்கு வார்த்தை இந்த வாசகத்தை உச்சரிக்க தவறவில்லை. சட்டப்பேரவை என்பது ஆட்சியாளர்களை புகழும் அவையாக இருந்து வருவது மரபு(!) என்றாலும் கடந்த ஒருமாதத்தில் இந்த ஜால்ரா சத்தம் சற்று அதிகமாகவே ஒலித்தது. இந்த வாசகத்தை கூறி அழைப்பதில் மட்டுமல்ல முதலமைச்சரை புகழ்வதிலும் கடும் போட்டி நிலவியது.

அமைச்சர்கள் 4 வரி பேசினால் அதில் நிச்சயம் இரண்டுவரி அம்மாவுக்கான புகழ்மாலையாக இருந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இடதுசாரிகள் அடித்த ஜால்ரா அடுத்த கூட்டத்தொடர்வரை நிச்சயம் தாங்கும். அதற்கு ஒரே ஒரு உதாரணம் சிவகங்கை தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனின் பேச்சு. தமிழகத்தில் சில திட்டங்கள் நிறைவேற்றாப்படவில்லை என்ற புகாருக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, வழக்கம்போல் பழியைத்தூக்கி மத்திய அரசு மீது போட்டார். மத்திய அரசு போதிய நிதியை வழங்க மறுப்பதால்தான் அத்திட்டங்களை செயல்படுத்தமுடியவில்லை என்று கூறினார். அவரின் மனநிலையை உணர்ந்துகொண்ட குணசேகரன் பேசும்போது, இந்த பிரச்சனைகளை தீர்க்க விரைவில் மத்தியில் அம்மா தலைமையில் மாற்றத்தை (ஆட்சி) கொண்டுவருவோம் என்றபோது முதலமைச்சரே ஒருநிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார். இவரை மிஞ்சமுயன்றவர்களில் முக்கியமானவர் சபாநாயகர் ஜெயக்குமார், இவர் தான் வகிக்கும் பதவியை சுத்தமாக மறந்துவிட்டு பேசினார் என்றே சொல்லலாம். பொதுவாக சட்டப்பேரவையில் சபாநாயகர்தான் முதன்மையானவர். அதற்குபிறகுதான் முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம். ஆனால் இவர் சபாநாயகர் இருக்கையிலும் அதிமுகவின் அடிமட்டத்தொண்டனாகவே செயல்பட்டார். தான் செய்த தவறுகளை அனைவர் மத்தியிலும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் குறை கூறினாலும், அது ஏதோ தனக்கு வழங்கப்பட்ட விருதுபோல் நினைத்து இவர் பேசிக்கொண்டிருந்தார்.

இவர்கள் உதாரணம் மட்டுமே இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பலர் முயன்றதை நாள்தோறும் ஊடகங்களில் காணமுடிந்தது. (வெளியே தெரிந்ததே என்றால், உண்மையில் நடந்தது எவ்வளவு இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஒருநாளின் ஒட்டுமொத்த நிகழ்வுகளில் ஒருமணிநேரம் மட்டுமே ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது)

ஒருபுறம் ஜால்ரா சத்தங்கள் காதை பிளக்க மறுபுறம் மேசையை தட்டும் சத்தமும் தினசரி அவையை அதிரவைத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் அவையில் நடைபெற்ற விவாதங்கள் அல்ல விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கைகள்தான். (ஆளுநர் உரை உள்பட சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்ற மொத்த நாட்கள் 33. முதலமைச்சர் படித்த அறிக்கைகள் 21.)ஆட்சியில் இல்லாதபோது கொடநாட்டில் தங்கி அறிக்கை வெளியிட்டதை மறக்கமுடியாமலோ, என்னவோ சட்டப்பேரவையிலும் நாள்தோறும் ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்ற வேண்டியத் திட்டங்களைக்கூட எவ்வித எதிர்பேச்சும் இன்றி அறிக்கையில் அறிவித்தார். புதிய அறிவிப்புகள் வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும் தவறாமல் இடம்பெற்ற அம்சம் தி.மு.க.வை திட்டுவது. அவர் படித்த அத்தனை அறிக்கைகளிலும் குறைந்தது இரண்டு பக்கங்களாவது தி.மு.க.வுக்கும், அதன் தலைவருக்கும் அர்ச்சனைகள் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் அலாதியானது. அம்மாவே திட்டிவிட்டார் நாம் திட்டாவிட்டால் அம்மா கோபித்துக்கொள்வார் என்று கருதியோ என்னவோ, சாதாரணமாக கேள்வி கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தி.மு.க. ஆட்சியை வறுத்தெடுத்த பின்னரே கேள்விக்கு வந்தனர்.

சரி, ஜால்ரா அடித்துவிட்டாவது அவரவர் கடமையை சரியாக செய்தார்களா என்றாலும் இல்லை என்பதே உண்மை. ஆம், எந்த துறையானாலும் முக்கிய அறிவிப்பு என்றால் அதனை முதலமைச்சர்தான் வெளியிடுவார், எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியது, அல்லது சம்பிரதாயத்துக்காக வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே அந்தந்த துறை அமைச்சர்கள் வெளியிட்டார்கள். One Woman Government என்று சொல்லக்கூடிய அனைத்துமே அம்மாதான் என்பது இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரூபிக்கப்பட்டது.

அதேநேரத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில்கூட ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றதாக தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பல நாட்கள் அவைக்கு வராமல் ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக பேசவேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டணியை தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார். இதனால் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அம்சங்களில் கூட பாராட்டுமழை பொழிந்தது மனசாட்சியுள்ளவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்யாத பணியை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது கட்சியை சேர்ந்த ஒருவர், சிறையில் தி.மு.க.வினருக்கு அளிக்கப்படும் சிறப்பு கவனிப்புகளை சுட்டிக்காட்டி அரசை குறைசொன்னார். ஆனால் அவர் வாங்கிக்கட்டிக்கொண்டதுதான் மிச்சம். முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்துள்ள தே.மு.தி.க.வினர் எங்களுக்கு(அ.தி.மு.க) பாடம் நடத்தத் தேவையில்லை என்ற ஜெயலலிதாவின் அனல்கக்கும் பேச்சால் ஆடிப்போனது தே.மு.தி.க. அதன்பின்னர் அக்கட்சியினர் அனைவரும் கப்சிப். இதேபோல் மற்றவர்களை பின்பற்றி கடந்த ஆட்சியை குறைசொல்லி காரியம் சாதிக்க முயன்ற பா.ம.க.உறுப்பினர் கலையரசு அவமானப்படுத்தப்பட்டார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், நடுநிலையாக செயல்படவேண்டிய சபாநாயகர் ஜெயக்குமார் என நான்குபேரும் அவரையும், அவரது கட்சியையும் மட்டம்தட்டி பேசினர்.

அரசின் குறைகளை சுட்டிக்காட்டி அரசியல் செய்ய வேண்டிய தி.மு.க.வினரோ இருக்கை பிரச்சனையை காரணம் காட்டி ஒட்டுமொத்த கூட்டத்தொடரையும் பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடித்தனர். துணிச்சலுடன் செயல்பட்டு சட்டப்பேரவையை ரணகளமாக்கவேண்டிய அவர்கள், அதனை திருக்குறள் கேட்கும் இடமாக மாற்றி வெளிநடப்பு நாடகம் நடத்தினர்.


மொத்தத்தில் திறமையற்ற எதிர்க்கட்சி, தவறை சுட்டிக்காட்டாத கூட்டணி கட்சிகள், கேள்வி கேட்கத் தயங்கிய உறுப்பினர்கள் என சட்டப்பேரவை ஜனநாயகம் ஒருமாதத்திற்கும் மேலாக சங்கடப்படுத்தப்பட்டது. முதலமைச்சரை புகழ்வதற்கும், தி.மு.க.வை குறை சொல்வதற்கும் மட்டுமே பயன்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததால் ஜால்ரா சத்தம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தீராத வலி...மாறாத சோகம்...



சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாது சுடும் மணலில் படுத்து சிரிப்பு... பெண்ணின் உடையணிந்தபடி சுற்றித்திரியும் இளைஞர்... சம்மந்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டு உலா வருவோர்... நட்ட நடு சாலையில் குட்டிக்கரணம் போடும் மகனை பரிதாபத்துடன் வேடிக்கை பார்க்கும் தாய்.. என வினோதமான உலகமாக காட்சியளிக்கிறது ஏர்வாடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் ஏர்வாடியில் பெரிய மனநல மருத்துவமனையோ, அரசு மனநல காப்பகமோ இல்லை. ஆனாலும் மனநோயாளிகள் வருகை அதிகரிப்பதற்கு காரணம் இங்குள்ள தர்காதான்.

இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாக(?) மாறிவிட்டது ஏர்வாடி. குடும்பத்தினர் இங்கு விட்டுச்சென்றதால் கிழிந்த உடையுடன் பரிதாபமாக உலாவரும் மனநோயாளிகள், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொண்டு ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க விருதுநகரைச் சேர்ந்த பச்சம்மாளின் நிலையோ பரிதாபம். மனநலம் பாதிக்கப்பட்ட தனது 20 வயது மகனை மருத்துவமனை, மருத்துவமனையாக அழைத்துச்சென்ற இவர் இறுதியில் வந்து சேர்ந்த இடம் ஏர்வாடி. மருத்துவமனைகளில் பணம் மட்டுமே செலவானதாக கூறும் பச்சம்மாள், இதற்குமேல் செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் இங்கு வந்ததாக கூறுகிறார். பச்சம்மாளைப்போல் எத்தனையோ பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆண்டுக்கணக்கில் ஏர்வாடியில் தங்கியிருக்கின்றனர். தர்காவில் இடம் கிடைக்காத பலர் தெருவோர மரத்தடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கட்டிவைத்தும் பாதுகாக்கின்றனர்.



இவ்வளவுபேர் வரும் அளவுக்கு தர்காவில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்தால் மிஞ்சுவது வியப்பு மட்டுமே. அதற்கு காரணம் ஏர்வாடியில் நடைபெறுவது சிகிச்சை அல்ல. வழிபாடு மட்டுமே... இதற்காகவே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தாலும் அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. கடந்த 2001ஆம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்தனர்.



இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டிவைக்கத் தடை விதித்ததுடன், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய ஆணையிட்டது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மனநல காப்பகத்தை அமைக்கவும் ஆணையிட்டது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்தபின்னும் உச்சநீதிமன்ற ஆணை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஏர்வாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது மருத்துவக் குழுவினர் வந்து சென்றனர். ஆனால் நாளடைவில் அதுவும் குறைந்துவிட்டது. மாதம் 4 ஆயிரம் நோயாளிகள் வரும் நிலையில் 2 மனநல மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இவ்வளவு குறைபாடுகள் உள்ளபோதும், சிகிச்சைகள் கூட அளிக்கப்படாத ஏர்வாடி போன்ற இடங்களை மக்கள் நாடுவது ஏன் என்று விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் பரிதாபத்தின் உச்சம். ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அவர்களை குணப்படுத்துவற்கு மருந்து கொடுப்பதைவிட, அவர்களை அரை மயக்கம் அல்லது, தூக்கத்தில் வைத்திருப்பதற்கே அதிக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் அமைதியான நிலைக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறினாலும், நோயின் தாக்கம் தூங்கி விடுவதில்லை. விளைவு மனநோயின் உச்சத்திற்கே சென்றுவிடுகின்றனர் பாதிக்கப்பட்டோர். அதன்பின்னர் சிகிச்சை அளிப்பதும் கடினமாகிவிடுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் நோய் குணமாகாத நிலையில், வேறு போக்கிடம் இல்லாததால் ஏர்வாடியில் கொண்டு விடப்படும் மனநோயாளிகள் கடவுளின் கருணையை எதிர்பார்த்தபடியே காலத்தை ஓட்டுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஒரு சிலர் சுயநினைவை பெற்றாலும் வீட்டுக்குச் செல்லும்படி கடவுள் கனவில் சொல்லுவார் என காத்துக்கிடக்கும் பரிதாப நிலையும் காணப்படுகிறது.

ஒரு சிலர் நோய் குணமடைந்து சென்றாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் தயங்குவதால் அவர்கள், அதே அழுக்கு உடையுடன் ஏர்வாடி தெருக்களை சுற்றி வருகின்றனர். ஆண்டுக்கணக்கில் இங்கே இவர்கள் சுற்றிக்கொண்டிருக்க அரசு மருத்துவமனைகளோ மனநலம் பாதிக்கப் பட்டவர்களை குறிப்பிட்ட காலத்தில் வெளியேற்றி விடுகின்றன. இடம் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்திய அளவில் 40 ஆயிரம் பேருக்கு ஒரு மன நல மருத்துவமனை மட்டுமே இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள் 800 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் 400 மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தாலும், அவர்களில் 300 மருத்துவர்கள் சென்னையில் மட்டுமே பணிபுரிவதால் மற்ற மாவட்டங்களில் உள்ள மனநோயாளிகளின் நிலையோ சோகம்தான்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. தனியார் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதற்கே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி இருப்பதால், மனநலம் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சிகிச்சை என்பதே எட்டாக்கனி ஆகிவிடுகிறது.


தனியார் நடத்தும் மனநல காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சையோ, பராமரிப்போ அளிக்கப்படுவதில்லை. பணத்துக்காக ஆடு மாடுகளை போல் நோயாளிகளை நடத்தும் சில காப்பக நிர்வாகிகள் போதிய உணவுகூட தரமறுப்பதால், நோயாளிகளின் பாதிப்பு அதிகமாகி, அவர்களின் ஆவேச செயல்களும் அதிகமாகிவிடுகின்றன. இதுபோன்ற நிலையை மாற்ற அனைத்து மாவட்டக்களிலும் அரசு மனநல காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 கோடி பேர் ஏதாவது ஒரு வகையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தேவைக்கேற்ப மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நிறைவேறாத ஆசை, மனஅழுத்தம், மன உளைச்சல் போன்றவை அதிகரித்து வருவதால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் மனநோய்க்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரவின்றி விட்டுச்செல்லும் மக்களின் மனநிலை மாறுவது மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சபல பெண்களும், ரவுடிக்கும்பலும்...

ஆன்மீக மணம் கமழும் பக்தி பரவசமான திருவண்ணாமலை நகரம் இப்போது போக்கிலிகளின் அட்டகாசங்களால் பீதியில் உறைந்து போய் கிடக்கிறது. இளம் பெண்களையும், குழந்தைகளையும் கடத்திச் செல்லும் கூலிப்படை கும்பலால் பெற்றோர்களும், உற்றார்களும் மிரண்டு போய் நிற்கிறார்கள்.

‘தனது இளம் வயது பேத்தியை திரும்ப ஒப்படைக்க இரண்டரை கிரவுண்ட் இடத்தை எழுதித் தரவேண்டும்’ என்ற போக்கிலி கும்பலின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்து போயுள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சரோஜா.

அங்குள்ள மண்ணடித் தெருவில் வசித்துவரும் சரோஜாவின் மகள் கவுரி. திருமணமாகி 3 பெண்பிள்ளைகளுக்கு தாயான கவுரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்கிலி ஒருவருடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை மயக்கி அழைத்துச் சென்ற போக்கிலி ராஜேஷ் என்பவர், கவுரி குடும்பத்திற்கு சொந்தமான 25 பவுன் தங்க நகைகள், மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்தோடு நின்றுவிடாத அவர்கள் கவுரியின் 3 மகள்களையும் தங்களுடன் அழைத்துச்சென்றுவிட்டனர்.

அழைத்துச்செல்லப்பட்ட 3 பெண்பிள்ளைகள் போக்கிலி கும்பலிடம் சிக்கி சீரழிவதை தடுப்பதற்காக அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் படி கவுரி குடும்பத்தினர் கேட்டுள்ளனர். குறைந்த பட்சம் நந்தினி என்ற 15வயது பெண்ணை மட்டுமாவது விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த போக்கிலி கும்பல், நகரின் முக்கிய பகுதியில் உள்ள கவுரி குடும்பத்திற்கு சொந்தமான இரண்டரை கிரவுண்ட் நிலத்தை எழுதிக்கொடுத்தால் மட்டுமே பெண்ணை ஒப்படைக்க முடியும் என மிரட்டியுள்ளனர்.

போக்கிலிகளின் மிரட்டலால் பயந்துபோன கவுரியின் கணவர் ஊரைவிட்டே ஓடிவிட, உறவினர்கள் மட்டும் தைரியமாக பெண்ணை மீட்க போராடினர். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததெலலாம் அடி - உதை மட்டுமே. கொலை செய்துவிடுவதாகவும் போக்கிலிகள் மிரட்டியதால் உயிர்பயத்தில் காவல்துறையின் உதவியை நாடினார் கவுரியின் தாயார் சரோஜா. தனது பேத்தியை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு திருவண்ணாமலை நகர காவல்நிலையம் சென்றவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் பேசிய விதம் பேரிடியாய் இறங்கியது. புகாருக்குள்ளானவர்களை அழைத்து விசாரிக்கக்கூட முன்வராத காவல்துறை அதிகாரிகள், போக்கிலிகளுக்கு ஆதரவாக சமாதானம் செய்து வைப்பதிலேயே முனைப்பு காட்டினர்.

இளம்பெண்ணை மீட்கப்போராடும் சரோஜாவுக்கு மட்டுமல்ல. தனது 2 வயது மகனை மீட்க போராடும் அரசு ஊழியரான சங்கருக்கும் இதேநிலைதான். 4 மாதங்களுக்கு முன்பு நான்கரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகைகளுடன், மனைவி நித்யா மற்றும் 2 மகன்களை போக்கிலிக்கும்பல் அழைத்துச் சென்றுவிட, 2 வயது மகனை மட்டுமாவது மீட்டுவிட துடிக்கிறார் சங்கர். மகனை ஒப்படைக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் புல்லட் சிவா என்ற போக்கிலி, தரமறுத்தவர்களை அடியாட்கள் மூலம் அடித்து விரட்டியுள்ளார்.

வேறு வழியே இல்லாமல் காவல் நிலையத்தை நாடிய சங்கருக்கு அசிங்கமான அர்ச்சனைகள் மட்டுமே மிஞ்சியது. இவர்கள் மட்டுமல்ல சத்யா, பரிமளா என பணம் மற்றும் சொத்துக்காக போக்கிலிகளால் அழைத்துச்செல்லப்பட்ட பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவர்களில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. போக்கிலி கும்பலுடன் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ள மறைமுக ஒப்பந்தமே இதற்கு காரணம் என கண்ணீருடன் கூறுகின்றனர்.

காவல்துறையினரின் ஆசியுடன் புல்லட் சிவா தலைமையிலான போக்கிலி கும்பல் செய்யும் அட்டுழியங்களை பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிட...! ஒவ்வொன்றும் அசிங்கத்தின் உச்சகட்டம். கவர்ச்சியான உடையணிந்து, உயர்ரக இருசக்கர ஊர்திகளில் உலா வரும் இந்த கும்பல், வசதியான குடும்பப்பெண்களை மயக்குவதையே வேலையாக செய்கின்றனர். அவர்களில் பெரிய அளவில் பின்புலம் இல்லாத பெண்களை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்செல்லும் போக்கிலிகள், பெண்களின் வீட்டிலிருக்கும் நகை, பணத்தை பறித்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழத்தொடங்குகின்றனர். இதனையே தொடர் தொழிலாக செய்யும் போக்கிலிகள், அடுத்த பெண் கிடைத்ததும் முந்தைய பெண்களை அடித்து துரத்திவிடுகின்றனர்.

பெண்களை ஏமாற்றுதல், தட்டிக்கேட்பவர்களை அடித்து உதைத்தல் என போக்கிலி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்த புகார்களை பதிவு செய்யவே மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து செய்வதன் மூலம் காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, வழிப்பறி, கொள்ளை என சிவா தலைமயிலான போக்கிலி கும்பல் மீது கூறப்படும் அனைத்து புகார்களும் கிடப்பில் போடப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

காவல்துறையின் ஒத்துழைப்புடன், பல போக்கிலி கும்பல்களின் ஆதரவும் இருப்பதால் இந்த கும்பலின் அட்டூழியம் எல்லை மீறிச்செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். இதனால் பல குழந்தைகள் தாயை இழந்து தவிக்கும் அவலம் அரங்கேறுகிறது. அற்ப மகிழ்ச்சிக்காக சில குடும்பப் பெண்களும் போக்கிலிகளுக்கு துணைபோவதால் அவர்களது குடும்பமே அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போக்கிலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமே இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியும் எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏலச்சீட்டு மோசடி, நிதிநிறுவன மோசடி போல இதுவும் தொடர்கதையாகிவிடும் என எச்சரிக்கின்றனர்.

போக்கிலிகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டும் இருப்பதே இந்த கும்பலின் அத்துமீறல்களுக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில் சட்டத்தை காக்கவேண்டியவர்கள் அதனை மீறும் போக்கிலிகளுக்கு துணைபோவதை தடுக்காதவரை எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. எது எதுக்கோ தனிப்படை அமைக்கும் காவல்துறையினர் போக்கிலிகளை ஒழிக்க தனிப்படை அமைக்க முன்வராதது ஏன்? அவர்களால் வரும் வருமானம் குறைந்துவிடும் என்பதற்காகவா? அல்லது அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என்பதாலா? என அடுக்கடுக்காய் எழுகின்றன கேள்விகள்.

போக்கிலிகள் தமிழகத்தை விட்டே விரட்டப்படுவார்கள் என பதவியேற்ற நாளிலேயே சூளுரைத்தார் முதலமைச்சர். ஆனால் வேலியும், ஆடும் சேர்ந்து பயிரை மேய்வதுபோல் காவல்துறையினரும், போக்கிலிகளும் சேர்ந்து அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அத்துமீறும் போக்கிலிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், அவர்களுக்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருவண்ணாமலை மக்களின் எதிர்பார்ப்பு. நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.